Skip to main content

நடமாடும் ரேஷன் கடைகளும், செறிவூட்டப்பட்ட அரிசியும்...  பல்வேறு திட்டங்களை துவங்கிவைத்த முதல்வர் பழனிசாமி! (படங்கள்)

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

 

தமிழகத்தில் 3,501 நடமாடும் ரேஷன் கடைகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

 

குடும்ப அட்டைதாரர்கள் நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் வகையில், தமிழகம் முழுவதும் 33,000 ரேஷன் கடைகள் கூட்டுறவுத்துறை சார்பில் நடத்தப்படுகிறது. எனினும், காடுகள் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்றுவரும் வசதிகள் குறைவாக இருப்பதாலும், மலை கிராமங்களில் இருக்கும் ரேஷன் கடைகளை யானை முதலிய வன விலங்குகள் சேதப்படுத்துவது வாடிக்கையாக நடப்பதாலும், நடமாடும் ரேஷன் கடைகள் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

 

இதனையடுத்து, தமிழக அரசு சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம், தமிழகம் முழுவதும் 9.66 கோடி ரூபாய் மதிப்பில் நடமாடும் ரேஷன் கடைகள் அமைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, இன்று (21.09.2020) சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில்  அம்மா நகரும் ரேஷன் கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 5,36,437 குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில், சென்னை- 400 , நாகை-262, கிருஷ்ணகிரி- 168, திருவண்ணாமலை- 212 என  மொத்தம் 3,501 நடமாடும் ரேஷன் கடைகள் துவங்கப்பட்டுள்ளன. அதேபோல், மின்சாரம் மற்றும் சூரியசக்தியில் இயங்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட 13 நவீன ஆட்டோக்களையும் முதல்வர் தொடக்கி வைத்தார்.

 

மேலும், பொது விநியோக திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு போலிக் அமிலம், வைட்டமின் பி12 ஊட்டச்சத்துக்கள் மிகுந்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டமும் இன்று துவங்கப்பட்டது. முதற்கட்டமாக திருச்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்