BJP Leader Annamalai speech at trichy

திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே பாரதிய ஜனதா கட்சியின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட பாஜகவைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “ஏழை மக்கள் உயரவேண்டும் அவர்களும் முதலாளிகளாக ஆகவேண்டும் என்பதற்காக பல நல்ல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எந்தத் துறை அமைச்சர் என்று அவருக்கே தெரியவில்லை. அவரது நண்பர் உதயநிதி ஸ்டாலின் சூட்டிங் நிகழ்ச்சியில் அங்கு சென்று அமர்ந்திருப்பார். பின்னர் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குவார். மாணவர்கள் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பார்த்து கற்றுக் கொள்வார்கள். எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள்.

Advertisment

அமைச்சர் சேகர் பாபு, மீண்டும் காவி வேட்டியைக் கட்ட துவங்கியுள்ளார். மதுரை ஆதீனத்தை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு மிரட்டி வருகிறார். பழைய சேகர்பாபுவை பார்ப்பதற்குத்தான் மோடி அரசு காத்துக் கொண்டு இருக்கிறது. ஆதீனத்தின் மேல் மட்டும் நீங்கள் கையை வைத்து பாருங்கள். ஆதீனத்தை மிரட்டும் வேலையை நிறுத்தி விடுங்கள். மதுரையில் துறவிகள் மாநாடு நடந்து முடிந்து இருக்கிறது. ஆதீனத்தை நேரில் வர சொல்லி முதல்வரை சந்திக்க வைக்கின்றனர். ஆதீனத்தை மிரட்ட ஆரம்பித்து விட்டனர். தப்பித் தவறிக்கூட ஆதீனத்தைத்தொட்டு விடாதீர்கள்; விளைவு மிகப் பயங்கரமாக இருக்கும். இவர்களுடைய அழிவுக்கு அது தான் காரணமாக இருக்கும்.

புதிய கல்விக் கொள்கையில் என்ன உள்ளதோ அதை அப்படியே கையில் எடுத்துக் கொண்டு, தமிழகத்தின் கல்வி கொள்கை என்று கூறுவதற்கு தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் வெட்கப்பட வேண்டும். மத்திய அரசின் எந்த கூட்டத்திற்கும் இங்குள்ள அமைச்சர்கள் முதலமைச்சர்கள் செல்வதில்லை. குஜராத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கூட்டம் ஒன்று நடந்தது. நமது கல்வி அமைச்சருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அப்போதும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.

Advertisment

பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் போட்டிப்போட்டு பேட்டி கொடுத்து வருகின்றனர். நியூட்ரீசன் திட்டத்தில் கமிசன் நடைபெற்றுள்ளது, அதை ஆதாரத்தோடு நாங்கள் நிரூபிக்க உள்ளோம்.

ஓரமாக இருந்து வேடிக்கை பார்த்தாலே போதும், கச்சத்தீவை பா.ஜ.க மீட்க்கும். 18 கோடி தொண்டன் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்கள் உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக கட்சி நாங்கள். அறத்தின் வழியில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம்.

2024ல் கண்டிப்பாக பாரதிய கட்சியின் எம்.பி தான் திருச்சியில் இருப்பார். 2024ல் நாம் டெல்லியில் வெற்றிபெற போகிறோமா என்பது கேள்வி கிடையாது. 400 சீட்டு வாங்கப் போகிறோமா அல்லது 450 வாங்கப் போகிறோமா என்பதுதான் கேள்வி. 25 இடம் தமிழகத்தில் பா.ஜ.க வெற்றி பெற வேண்டும். குறிப்பாக 5 எம்பிக்கள் தமிழகத்திலிருந்து கேபினெண்ட்டுக்கு செல்லவேண்டும்” என்று பேசினார்.