Skip to main content

“பா.ஜ.க ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் பறிபோகிறது” - முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published on 03/05/2024 | Edited on 03/05/2024
Chief Minister M. K. Stalin's accusation on Freedom of press is being lost under BJP rule

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல், பத்திரிகைகளின் சுதந்திரத்தை காப்பது, பத்திரிகையாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது போன்ற நோக்கங்களுக்காக 1993 ஆம் ஆண்டு முதல் மே மாதம் 3 ஆம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்திற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘1992-இல் வின்ட் ஹோக்கில் ஆப்பிரிக்க நாளிதழ் செய்தியாளர்கள் ஒன்றிணைந்து பத்திரிகை சுதந்திரம் குறித்து வெளியிட்ட அறிக்கையின் நினைவாக, மே 3-ஆம் நாளை ஐக்கிய நாடுகள் அவையின் பொதுப்பேரவை 'உலகப் பத்திரிகை சுதந்திர நாள்'-ஆக 1993-ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. இந்நாள் பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை வளர்க்கப் பயன்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைப் பத்திரிகைச் சுதந்திரம் முழு அளவில் பேணப்படுகிறது. 2021-இல் கழக அரசு பொறுப்பேற்ற வேளையில் உலகம் முழுதும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றுக் காலத்தில் தமிழ்நாட்டில் செய்தி சேகரிப்பதில் அச்சமின்றி இரவும் பகலும் பாடுபட்ட செய்தியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்துப் பல்வேறு உதவிகள் அளிக்கப்பட்டன.

கொரோனா சிறப்பு ஊக்கத் தொகையை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கியது. கொரோனா இழப்பீட்டுத் தொகை ரூ.5 இலட்சத்திலிருந்து ரூ.10 இலட்சமாக உயர்த்தி வழங்கியது. பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு 3.223 நபர்கள் உறுப்பினர்களாகச் சேர்ப்பு. பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10,000 லிருந்து ரூ.12,000 ஆகவும், பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம் ரூ.5,000 லிருந்து ரூ.6,000 ஆகவும் உயர்வு. பணிக்காலத்தில் இயற்கை எய்திடும் பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப உதவித் தொகை ரூ.3 இலட்சத்திலிருந்து ரூ.5 இலட்சமாக உயர்வு. சிறந்த இதழியலாளருக்கு ரூ.5 இலட்சம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய 'கலைஞர் எழுதுகோல் விருது' ஆண்டுதோறும் அறிவிப்பு.

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டினை முன்னிட்டு பெண்மையைப் போற்றும் வகையில் சிறப்பினமாக இவ்வாண்டு மட்டும் கூடுதலாக ஒரு பெண் இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்க ஆணை பிறப்பிப்பு. பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 இலட்சத்திலிருந்து ரூ.4 இலட்சமாக உயர்வு. பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து வழங்கப்பட்டுவரும் மருத்துவ உதவித் தொகை ரூ.2 இலட்சத்திலிருந்து ரூ2 இலட்சத்து 50 ஆயிரமாக உயர்வு. பத்திரிகையாளர்களுக்கென சிறப்பு மருத்துவ முகாம்கள். எனப் பத்திரிகையாளர்கள், செய்தி ஊடகவியலாளர்கள் திராவிட மாடல் அரசினால் பாதுகாக்கப்பட்டு போற்றப்படும் வேளையில் கடைப்பிடிக்கப்படும் உலக பத்திரிகை சுதந்திர நாளில் திராவிட மாடல் அரசின் சார்பில் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

உலகப் பத்திரிகை சுதந்திர நாள் அன்று, கடுமையான யதார்த்தத்தை எதிர்கொள்வோம் பாஜக ஆட்சியின் கீழ், இந்தியாவின் பத்திரிகை சுதந்திரம் பறிபோனது. பத்திரிகை சுதந்திர குறியீட்டில், கௌரி லங்கேஷ், கல்புர்கி போன்ற பத்திரிக்கையாளர்களின் கொலைகள், சித்திக் கப்பன், ராணா அய்யூப் போன்ற பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து மிரட்டுவதுடன், அதிகாரத்திற்கு எதிராக உண்மையை பேசத் துணிந்த பலரையும் தொடர்ந்து மிரட்டியதோடு மட்டுமல்லாமல், பாஜக ஆட்சி பத்திரிகை சுதந்திரத்துக்கான ஒரு வருத்தமான படத்தை வரைகிறது. 

ஜனநாயகத்தில் பத்திரிகைகளின் பங்கை நாம் கொண்டாடும் போது, சுதந்திரமான பேச்சுரிமையின் மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கும், பத்திரிகையாளர்கள் அச்சமின்றி அல்லது அடக்குமுறை தணிக்கையின்றி பணியாற்றுவதை உறுதிசெய்வதற்கும் நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்