Skip to main content

“வீர உரையாற்ற வரவில்லை; பாச உரையாற்ற வந்துள்ளேன்” - முதலமைச்சர் ஸ்டாலின்  

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

The Chief Minister addressed the visually and hearing impaired students

 

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி சென்னை சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உடையோர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டார். 

 

விழாவில் பேசிய அவர், “நான் உரையாற்ற அறிமுகப்படுத்தி பேசியவர் நான் வீர உரையாற்ற வந்துள்ளதாகச் சொன்னார். நான் வீர உரையாற்ற வரவில்லை. பாச உரையாற்ற வந்துள்ளேன். ஆட்சியில் செய்து கொண்டிருக்கக்கூடிய சாதனைகளை எல்லாம் பட்டியல் போட்டீர்கள். நாம் இவ்வளவு செய்திருக்கிறோமா என்று எனக்கே வியப்பாக இருக்கிறது. அந்த அளவிற்கு நீங்கள் அதை எல்லாம் நினைவுப்படுத்தி, வரிசைப்படுத்தி, மனதில் வைத்துக்கொண்டு நாங்கள் மறந்தாலும் நீங்கள் மறக்காமல் இங்கே சுட்டிக்காட்டியதை நான் எப்படி கருதுகிறேன் என்றால், இன்னும் நிறைய செய்ய வேண்டும். இன்னும் உங்களுடைய பாராட்டைப் பெற வேண்டும் என்று எண்ணுகிறேன்.

 

அப்படிப்பட்ட ஒரு ஆட்சியை உங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்ற வகையிலே நாம் இங்கே நடத்திக்கொண்டு இருக்கிறோம். இன்னும் ஒரு செய்தியைக் கூட நான் அடிக்கடி சொல்வதுண்டு. நான் இந்தப் பள்ளிக்கு பல பொறுப்புகளிலிருந்து வந்திருக்கிறேன். 1984 ஆம் ஆண்டிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன். எம்.எல்.ஏ.வாக வந்திருக்கிறேன்; சென்னை மாநகர மேயராக வந்திருக்கிறேன்; உள்ளாட்சித் துறை அமைச்சராக வந்திருக்கிறேன்; துணை முதலமைச்சராக இருந்தபோதும் வந்திருக்கிறேன்; எதிர்க்கட்சி தலைவராகவும் வந்திருக்கிறேன்; இன்றைக்கு முதலமைச்சராக வந்திருக்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். எந்த பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் வருவேன்; எல்லா ஆண்டும் வருவேன். அந்த பாசம் எனக்கு உங்களிடம் இருக்கிறது. இந்த சிறுமலர் பள்ளியை பொறுத்தவரைக்கும் நான் அந்த பாசத்தை பெற்றிருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி...

 

நான் எத்தனை பொறுப்புகளில் இருந்தாலும் எத்தனை நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் அது அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது பொதுவான நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதிலே கிடைக்கின்ற சிறப்பை விட அதிலே கிடைக்கின்ற பெருமையைவிட அதிலே கிடைக்கின்ற மகிழ்ச்சியைவிட இங்கே வருகிறபோது தான் நான் அதிகமான பூரிப்பை மகிழ்ச்சியை பெறுவதுண்டு. அந்த வகையிலே தான் நீங்கள் தெரிவித்து இருக்கக்கூடிய உற்சாகத்தை நம்பிக்கையை என்றும் மனதில் வைத்துக்கொண்டு என்னுடைய பணியை உங்களுக்காக நிறைவேற்றக் காத்திருக்கிறேன். தயாராக இருக்கிறேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி மீண்டும் உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. அதை யாரும் மறுக்க முடியாது.” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்