
த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் கடந்த 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதாக வந்த விஜய்க்கு, அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விஜய், திறந்தவெளி வாகனத்தில் பயணம் மேற்கொண்டு ரோடு ஷோ நடத்தினார். அப்போது, அவரது வாகனத்தில் இளைஞர்கள் சில பேர் ஏறினர். அதன் பின்னர், பாதுகாவலர் மூலம் அவர்களை பாதுகாப்பாகக் கீழே இறக்கி விடப்பட்டனர். அதே போன்று மரத்திலிருந்து விஜய் வாகனத்தின் மீது தொண்டர் ஒருவர் குதித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களால் வருந்துவதாகக் கூறி, நம் அரசியலில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் சுய ஒழுக்கமும் வேண்டும் என்று இன்று காலை விஜய் தனது அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்றை அக்கட்சித் தலைவர் விஜய் நியமனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கம் நியமனம் செய்யப்படுகிறது. தவெக விதிகளின்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவரே, தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் ஆவார். இதன்படி, பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநிலச் செயலாளர் சி.விஜயலட்சுமி ஆகிய தோழர்களை கழகத் தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்கிறேன்.
இக்குழுவானது, கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகளும் தோழர்களும் கழகக் கட்டுப்பாட்டை மீறி, கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களுக்கு எதிராகச் செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இக்குழுவிற்குக் கழக நிர்வாகிகளும் தோழர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். மேலும் கழக நிர்வாக வசதிக்காகத் தமிழ்நாட்டில் உள்ள வருவாய் மாவட்டங்கள் வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய / கிழக்கு என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த நான்கு மண்டலங்களில் உள்ள வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட கழக மாவட்டங்களுக்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. இந்த மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெண் உட்பட நான்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
இந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் தங்களுக்குரிய மண்டலங்களில் கழக நிர்வாகிகளும் தோழர்களும் கழகக் கட்டுப்பாட்டை மீறி, கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களுக்கு எதிராகச் செயல்பட்டால், அவர்கள் மீது கழக விதிகளின்படி உரிய நடவடிக்கைகளை, தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியின் பேரில் மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இக்குழுக்களுக்குக் கழக நிர்வாகிகளும் தோழர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.