ADVERTISEMENT

சென்னையில் தலைத்தூக்கும் மாஃபியாக்கள்!  அதிரடி ஆக்‌ஷனில் போலீஸ் கமிஷ்னர்!

07:12 AM Jun 07, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT



சென்னையில் முடக்கப்பட்டிருந்த க்ரைம்கள் கரோனா நெருக்கடியை பயன்படுத்தி மீண்டும் தலைத் தூக்கியிருக்கின்றன. இதனை அறிந்து அதிரடி சாட்டையை சுழற்றியிருக்கிறார் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்.


தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் பலரும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பல நூறு ஏக்கர் நிலங்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். இந்த நிலங்களை குறி வைத்து ஒரு பெரிய மாஃபியா கும்பல்கள் களமிறங்கியிருக்கிறது. திடீரென அந்த நிலத்துக்குள் புகுந்து, இது தங்களது இடம் என சொல்லி, சொந்தம் கொண்டாடுவார்கள். அப்போது நிலத்திற்குரிய உரிமையாளர்கள் அலறி அடித்துக்கொண்டு வந்து அவர்களை எதிர்கொள்வார்கள்.

அப்போது தங்களிடமுள்ள போலி டாகுமெண்டுகளை காட்டி, ’இடம் எங்களுக்குத் தான் சொந்தம்‘ என மல்லுகட்டுவார்கள். காவல்துறையினர் மாஃபியாக்களுக்கு மறைமுகமாக துணை நிற்பதால் மாஃபியாக்களின் மிரட்டல்கள் அதிகரிக்கும். இதில் பயந்து போகும் நிலத்தின் உரிமையாளர்கள், ஒரு கட்டத்தில், மாஃபியாக்களின் பேரங்களுக்கு அடிபணிய வேண்டியதிருக்கிறது அல்லது நிலத்தையே இழக்க வேண்டியதிருக்கிறது. இந்தவகை க்ரைம்கள் தற்போது அதிகரித்து வருகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ’’சென்னை கிழக்கு கடற்கரைசாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் ஒரு தொழிலதிபருக்கு சொந்தமான காலி இடத்தை அபகரிக்க மாஃபியாக்கள் பலர் முயற்சித்தனர். பத்துக்கும் மேற்பட ரௌடிகள் கடந்த வாரம் குறிப்பிட்ட நிலத்துக்குள் புகுந்துவிட்டனர். அவர்கள் கைகளில் பல்வேறு வகையான ஆயுதங்கள் இருந்தது. அதனை கேள்விப்பட்டு, சம்மந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் தரப்பினர், ஓடோடி வந்தனர்.


மாஃபியாக்களைப் பார்த்து, ‘எங்கள் நிலத்துக்கு எவண்டா இங்கு சொந்தம் கொண்டாடுவது?’ என உரத்து குரல் எழுப்பியிருக்கின்றனர். அப்போது, இரு தரப்புக்கும் வார்த்தை மோதல்கள் வெடித்தன. ஒரு கட்டத்தில், மாஃபியாக்கள் தங்களிடமிருந்த ஆயுதங்களைக் காட்டி மிரட்ட, செய்வதறியாமல் திரும்பியிருக்கிறார்கள் நிலத்தின் உரிமையாளர் தரப்பு. உடனே, லோக்கல் ஸ்டேசனிலும் அடையாறு துணை ஆணையர் அலுவலகத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த அலுவலகத்தின் உயரதிகாரிகள் இது குறித்து அக்கறை காட்டவில்லை. புகார் மீது எஃப்.ஐ.ஆர். கூட போடாமல் அலட்சியமாக இருந்தனர்.



இந்த நிலையில்தான், சென்னை கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதனின் உதவியை நாடியுள்ளது நிலத்தின் உரிமையாளர் தரப்பு. என்ன நடந்தது என்பதை முழுமையாக கேட்டு அதிர்ச்சியடைந்த கமிஷ்னர் விஸ்வநாதன், ’சென்னையில் இது போன்ற நில அபகரிப்பு மாஃபியாக்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என போராடிக்கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 90 சதவீதம் இந்த க்ரைம்கள் ஒடுக்கப்பட்டிருந்தன. மீண்டும் தலைத் தூக்கியிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. காவல்துறையில் உள்ள சில கறுப்பு ஆடுகளால் தான் இந்த க்ரைம்கள் மீண்டும் நடக்கத்துவங்கியுள்ளன. காவல்துறை கறுப்பு ஆடுகளை ஒட்ட நறுக்கினால்தான் இத்தகைய க்ரைம்கள் மீண்டும் கட்டுக்குள் வரும்’ என அவர்களிடம் சொன்ன கமிஷ்னர், உடனே, தனக்கு கீழுள்ள முக்கிய அதிகாரியை அழைத்து இந்த பிரச்சனையை ஒப்படைத்தார். மேலும் இது குறித்து தேவையான அதிரடி நடவடிக்களை அவர் எடுக்க, தற்போது அந்த புகார் மீது எஃப்.ஐ.ஆர்.போடப்பட்டுள்ளது. ஆனால், குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. கமிஷ்னர் ஆக்சனில் இறங்காமல் போயிருந்தால், இந்த விவகாரத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்திருக்கும். குறைந்தபட்சம் புகாரையாவது பதிவு செய்திருக்கிறது போலீஸ்!‘’ என்று சுட்டிக்காட்டுகிறார் அந்த அதிகாரி.


கிழக்கு கடற்கரை சாலையில் தலைத்துவங்கியுள்ள இத்தகைய க்ரைம் மீது கவனம் செலுத்தி, பல்வேறு தரப்பில் கமிஷ்னர் விசாரித்திருக்கிறார். அப்போது, ஒரு மூன்று எழுத்து பிரபல நிறுவனத்தை சேர்ந்த வாரிசுதான் க்ரைம் கும்பல்களுக்கு காட் ஃபாதராக இருப்பதாக அவருக்கு தெரிய வந்திருக்கிறது.

இது தவிர, ’’ அடையாறு தொடங்கி கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள காவல்துறையினரின் உதவிகள், மாஃபியாக்களுக்கு நிறைய இருப்பதால் மிக துணிச்சலாக இது போன்ற நில அபகரிப்பு க்ரைம்களில் அவர்கள் புகுந்து விளையாடுகிறார்கள் என்றும், இந்த விவகாரத்தில் பல கோடி ரூபாய்கள் புழங்குவதாகவும் கமிஷ்னர் விஸ்வநாதனுக்கு தகவல் தரப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட காவல் எல்லையிலுள்ள அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்படாதவரை, திடீரென தலைத் தூக்கியிருக்கும் இத்தகைய க்ரைம்களை ஒடுக்க முடியாது’’ என்கிறார்கள் உளவுத்துறை போலீஸார்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT