Skip to main content

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலைக்கு என்ன காரணம்?- வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

actor chitra incident police investigation

 

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலைக்கு என்ன காரணம்? என்பது தொடர்பான அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 

விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (28). திருவான்மியூரைச் சேர்ந்த இவர் நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து தொடரில் நடித்து வந்தார். இந்த நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்துடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போது, நடிகை சித்ரா நேற்று முன்தினம் (09/12/2020) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

 

தற்கொலை குறித்து தகவலறிந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்த நிலையில் சித்ராவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 

கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சித்ராவின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள், உறவினர்கள், ரசிகர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

 

இதனிடையே சித்ராவின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹேம்நாத்திடம் தொடர்ந்து மூன்றாவது நாளாக நசரத்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹேம்நாத் மற்றும் சித்ராவுக்கு பதிவு திருமணம் நடைபெற்றதால் திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.  

 

இந்த நிலையில் காவல்துறை நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர், தாயார் கொடுத்த மன அழுத்தமே காரணம். ஹேம்நாத் குடித்து விட்டு சின்னத்திரை படப்பிடிப்புக்கு சென்று சித்ராவுடன் சண்டையிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல் ஹேம்நாத்தை பிரிந்து வருமாறு தாய் விஜயா தொடர்ந்து கூறியதால் சித்ராவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. சித்ராவின் செல்போனில் இருந்த் எஸ்.எம்.எஸ்., புகைப்படங்கள், ஆடியோ உள்ளிட்ட ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் அழிக்கப்பட்டதால் சைபர் ஆய்வகத்துக்கு சித்ரா செல்போன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை வட்டார தகவல் கூறுகின்றன. 

 

சார்ந்த செய்திகள்