/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/polcie4343.jpg)
ஆன்லைன் சூதாட்டங்கள் உயிர்களை காவு வாங்கும் கொடுமைகள், அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால், பிரவுசிங் சென்டர் உரிமையாளரின் உயிரும் தற்கொலைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த தினேஷுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. கோயம்பேட்டில் குளோபல் நெட் என்ற பெயரில் பிரவுசிங் சென்டரை நடத்தி வந்த இவர், வீட்டின் வரவேற்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தினேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், தினேஷ் தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடப் பழக்கம் உடையவர் என்பதும், கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால், மனமுடைந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானது தெரிய வந்தது. கடனைத் திருப்பி தர முடியவில்லை என்பதால், தினேஷ் தற்கொலை செய்துகொண்டதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து, தினேஷின் செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர், அதனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், பெருங்குடியில் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளைக் கொன்றுவிட்டு வங்கி அதிகாரி ஒருவர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடந்த வாரம் நடந்தது. அதேபோல், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், கடனுக்கு ஆளான ரயில்வே ஊழியர் ஒருவர் டிக்கெட் கவுண்டரில் பணத்தைக் கொள்ளையடித்து நாடகமாடி கைதானார்.
ஆன்லைன் சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோகும் நிலையில், அதனை தடுக்கும் வகையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)