ADVERTISEMENT

உறுதி செய்த தி.மு.க; களம் காணும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்?

11:45 AM Jan 20, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் அனல் அடிக்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக இங்கே யார் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள் என்பதுதான் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. அதிமுக அணியில் வேட்பாளர் யார்? திமுக அணியில் வேட்பாளர் யார் என்பதுதான் இப்போதைய பரபரப்பு. அதிமுக அணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கடந்த தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டது. அதன்படி இப்போதும் தமாகா போட்டியிடுமா என எதிர்பார்ப்பு எழுந்திருந்தபோது, நேற்று அதிமுக மற்றும் தமாகா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன், “எங்கள் இலக்கு கூட்டணி உறுதியாக வெற்றிபெற வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று காலை அதிமுக ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேபோல், திமுக கூட்டணியில் காங்கிரஸா திமுகவா என எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில், இத்தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வே.ரா. அவரது மறைவுக்குப் பிறகு தற்போது நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில், காங்கிரஸின் சிட்டிங் சீட் என்பதால் எங்களுக்கே தரவேண்டும் என காங்கிரஸ் கட்சி திமுகவிடம் வேண்டுகோள் வைத்துள்ளது.

கடந்த 2021 தேர்தலில் திமுக சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி. சந்திரகுமார், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆ.செந்தில்குமார் ஆகிய இருவரின் பெயர் இறுதிவரை பரிந்துரையில் இருந்த நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திமுக தலைமையிடம் பேசி இறுதியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு திருமகன் ஈ.வே.ரா. போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், இடைத் தேர்தலில் திமுகவுக்கும் வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போது மீண்டும் காங்கிரஸ் கோரிக்கை வைத்ததால் இம்முறையும் காங்கிரசுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம், திமுக தலைமையிடமிருந்து காங்கிரசுக்கு ஒரு வேண்டுகோள் கூறப்பட்டது. இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும், இளங்கோவன் மற்றும் அவரது இளைய மகன் சஞ்சய், மருமகள் பூர்ணிமா இந்த மூவரில் ஒருவர் வேட்பாளராக இருந்தால்தான் தொகுதி மக்களிடம் வாக்குகள் பெற்று நல்ல வெற்றியைப் பெற முடியும் என்பது திமுகவின் எதிர்பார்ப்பு.

இந்நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றது. அவருடன் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கோபண்ணா உள்ளிட்டோர் இருந்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அநேகமாக திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான். அல்லது அவரது குடும்பத்தினர் ஒருவர்தான் வேட்பாளராக இங்கு களமிறங்க போகிறார் என்பதும் உறுதியாகத் தெரிகிறது. அதிமுக காங்கிரஸ் என ஈரோடு கிழக்கில் தேர்தல் போட்டி உருவாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT