Skip to main content

குக்கர் சின்னத்தை கோரிய நான்கு பேர்; யார் யாருக்கு என்னென்ன சின்னங்கள்?

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

By-election field; Allotment of symbols

 

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அதிமுக, திமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 83 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்த நிலையில் அதில் 6 பேர் மனுக்களை திரும்பப் பெற்றதால் களத்தில் 77 பேர் உள்ளனர். இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இன்று முறையே சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக சார்பில் போட்டியிடும் ஆனந்திற்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

இதைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்திருந்தனர். 191 சுயேச்சை சின்னங்கள் பட்டியலிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதில் கரும்பு விவசாயி, குக்கர் ஆகிய சின்னங்கள் சுயேச்சை சின்னங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. கரும்பு விவசாயி சின்னத்தை இரண்டு பேர் தங்களுக்கு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். குக்கர் சின்னத்தை நான்கு பேர் தங்களுக்கு வேண்டும் என்று கூறினார்கள். ஒன்றுக்கும் மேற்பட்டோர் கோரக்கூடிய சின்னங்களை குலுக்கல் முறையில் கொடுக்க முடியும் என தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

 

இதற்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவின் கணவரும் முகவருமான நவநீதன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த தேர்தலில் தங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க வேண்டும் என நாம் தமிழர் சார்பில் கோரிக்கை அளிக்கப்பட்டது. மற்ற இரண்டு வேட்பாளர்கள் தங்களுக்கும் கரும்புச் சின்னம் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் குலுக்கல் முறை இல்லாமல் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்தனர். அதன் பிறகு குக்கர் சின்னத்தை நான்கு வேட்பாளர்கள் கோரியதால் குலுக்கல் முறை நடைபெற்றது. அதில் கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி என்ற கட்சியைச் சேர்ந்த ராஜா என்ற வேட்பாளருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்