ADVERTISEMENT

கோவாக்சினுக்கு அவசரகால அனுமதி  -  விவாதிக்க இன்று கூடுகிறது WHO-வின் நிபுணர் குழு!

11:43 AM Oct 05, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழுமையான பயன்பாட்டில் உள்ளன. அதேசமயம் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் கேட்டு, பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைப் பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த ஜூலை ஒன்பதாம் தேதி சமர்ப்பித்தது. இதனையடுத்து விரைவில் கோவாக்சினுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை நிபுணர் சௌமியா ஸ்வாமிநாதனும் ஒரு பேட்டியில், கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் வழங்குவது குறித்து ஆகஸ்ட் மாதத்தில் முடிவெடுக்கப்படலாம் எனத் தெரிவித்தார். இருப்பினும் கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகால அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுப்பது தாமதமாகிவந்தது. இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்பு கோவாக்சினுக்கு அவசரகால அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கக் கூடுதல் தரவுகளைக் கேட்பதாகத் தகவல் வெளியானது. இதனால் கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்குவது தாமதமாகும் எனக் கூறப்பட்டது.

இந்தச் சூழலில் சமீபத்தில் வெளியான கரோனா தடுப்பூசிகள் தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் ஆவணத்தில், அக்டோபர் மாதத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்குவது தொடர்பான முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில், இன்று (05.10.2021) கூடவுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் 'நோயெதிர்ப்பு தொடர்பான நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழு' கூட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்கப்பட இருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அங்கீகாரத்திற்காக விண்ணப்பிக்கப்படும் தடுப்பூசிகளை நோயெதிர்ப்பு தொடர்பான நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழுவும், தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும் ஆய்வு செய்யும். அதன்பிறகே அவசரகால அங்கீகாரம் வழங்கப்படும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை நிபுணர் சௌமியா ஸ்வாமிநாதன் தெரிவித்துள்ளார். நோயெதிர்ப்பு தொடர்பான நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழுவின் ஆலோசனையைத் தொடர்ந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கூட்டமும் இம்மாதம் நடைபெறவுள்ளது. இதனால் கோவாக்சினுக்கு அவசரகால அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் விரைவில் தனது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT