Skip to main content

"உள்ளாட்சி தேர்தலில் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு போக வேண்டாம்... எடப்பாடி பழனிசாமி போனால் போதும், திமுக ஜெயித்துவிடும்.." - புகழேந்தி!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

as

 

அதிமுக முன்னணியினர் மீது ரெய்டு நடவடிக்கைகள் தற்போது வேகமெடுத்துள்ளது. கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் தொடங்கிய இந்த ரெய்டு, வீரமணி, சி. விஜயபாஸ்கர், வேலுமணி என்று அடுத்தடுத்த பிரபலங்களை நோக்கி பாய்ந்தது. உச்சகட்டமாக எடப்பாடி பழனிசாமியின் மிக முக்கிய தளபதியாக இருக்கும் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று முன்தினம் (15.12.2021) சோதனை நடத்தியிருந்தார்கள். இந்நிலையில், தங்கமணியிடம் நடைபெற்ற சோதனை, அதிமுக தேர்தல், போயஸ் கார்டன் நினைவு இல்லம் ஆகியவை தொடர்பாக அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தியிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நேற்று முன்தினம் முழுவதும் சோதனை நடத்தி முடித்திருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து இப்படியான ரெய்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதைப் பற்றிய உங்களின் கருத்து என்ன? 

 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பலரும் தொடர் புகார்களை அரசாங்கத்திடமும், காவல் நிலையங்களிலும் கொடுத்துவருகிறார்கள். அதன் பேரில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. அதுவும் தற்போது ரெய்டு நடவடிக்கையில் சிக்கியிருக்கும் தங்கமணியிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

 

இந்த ரெய்டு மூலம் அதிமுகவை முடக்கப்பார்க்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அறிக்கை வெளியிட்டுள்ளார்களே? 

 

அதிமுகவில் முடக்க என்ன இருக்கிறது, எல்லாமே முடங்கிப்போய்தானே இருக்கிறது. ஆட்சி அதிகாரம் இருந்தவரையில் ஊரை ஏமாற்றிவிட்டு, கோடிக்கணக்கில் சொத்துக்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு, மத்திய அரசுக்குப் பயந்துகொண்டு, அவர்களுக்கு ஜால்ரா போட்டுவந்தார்கள். கட்சியும், இரட்டை இலையும் அவர்களிடம் இருக்கும்வரை அவர்கள் ஆட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் அதை தேர்தல் வெற்றியாக இவர்களால் ஒருபோதும் மாற்ற முடியாது. நீங்கள் வேண்டுமானால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், வரப்போகிற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு ஜீரோதான் கிடைக்கும். ஸ்டாலின் பிரச்சாரத்துக்குக் கூட போக தேவையில்லை, எடப்பாடி பழனிசாமி போனால் போதும், திமுக வெற்றி பெற்றுவிடும். 

 

இவர்களால் அம்மா வாழ்ந்த வீட்டைக் காப்பாற்ற முடிந்திருக்கிறதா? இப்போது கேட்டால் மேல் முறையீடு செய்வோம் என்று கூறியிருக்கிறார்களே என்று கேட்கிறீர்கள். சாவியை தீபா வாங்கிவிட்டார். இவர்கள் தற்போது மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் கதைவிட ஆரம்பித்துள்ளார்கள். அம்மா அவர்களை வீட்டில் சேர்க்கவே இல்லை, அதற்கு முதலில் காரணத்தை தீபாவை சொல்லச் சொல்லுங்கள், அதைவிட்டுவிட்டு அத்தை வீட்டில் அதைக் காணவில்லை, இதைக் காணவில்லை என்று பஞ்சாயத்து பேசாதீர்கள். சொந்தமாக வாங்கியவன் கூட இவர்களை மாதிரி கவலைப்படுவானா என்று தெரியவில்லை. இந்த எடப்பாடி பழனிசாமி குரூப்புக்கு ஒரு ஆர்டரை ஒழுங்காக போடத் தெரிகிறதா? நீதிமன்றம், நினைவில்லம் என்ற அந்த உத்தரவையே தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அதிமுகவை அடகு வைத்துவிட்டார்கள், அவர்களால் அம்மாவுக்கோ, தொண்டர்களுக்கோ எதுவும் செய்ய முடியாது என்பது மட்டும் நூறு சதவீதம் உண்மை. 

 

இந்நிலைமையில் இவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். இவர்கள் போராட்ட அறிவிப்பைப் பார்த்ததும் ஸ்டாலின் அப்படியே ராஜினாமா செய்துவிட்டுப் போயிடுவார் என்று பார்க்கிறார்களா? அனைவரும் இவர்கள் போராட்ட அறிவிப்பைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு, எங்களின் வளர்ச்சியைப் பார்த்து எங்களைக் கட்டுப்படுத்த வழக்குப் போடுவதாக வேலுமணி உள்ளிட்டவர்கள் கூறிவருகிறார்கள். என் மீது செடிஷன் வழக்கு போட்டுள்ளார்கள் இவர்கள். அண்ணன் நாஞ்சில் சம்பத் மீது 12 வழக்குகள் இதுவரை போடப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் தெரியவில்லையா உங்களுக்கு இது பழிவாங்கும் நடவடிக்கை என்று. தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுப்பார்கள்தான், சந்தித்து வெளியே வாருங்கள். வெற்றுக் கூச்சல் போடாதீர்கள்.