Skip to main content

"சிரித்த முகத்துடன் சத்தமாக அழைப்பார், முதுகில் தட்டிக்கொடுப்பார்" -வசந்தகுமார் நினைவுகளை பகிர்ந்த செல்லதுரை

Published on 29/08/2020 | Edited on 29/08/2020
h vasanthakumar

 

 

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான வசந்த் அன் கோ நிறுவனர் எச்.வசந்தகுமார் சென்னையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி காலமானார். இன்று காலை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. வசந்த் அன் கோ நிறுவன ஊழியர்கள், தி.நகர் வியாபாரிகள், தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

 

பின்னர் அவரது உடல் காமராஜர் அரங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வசந்தகுமாரின் உடலுக்கு காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்னியரசு, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்லதுரை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

 

பின்னர் நம்மிடம் பேசிய செல்லதுரை, அவரை பார்த்தாலே சுறுசுறுப்பு வரும். பார்த்தவுடனேயே என்ன செல்லதுரை என்று சிரித்த முகத்துடன் சத்தமாக அழைப்பார். உடனிருப்பவர்கள் திரும்பிப் பார்ப்பார்கள். முதுகில் தட்டிக் கொடுப்பார். நாம சோர்வாக போயிருந்தாலும், கலகலப்புடன் பேசி நம்மை உற்சாகப்படுத்தி திருப்பி அனுப்புவார். 

 

h vasanthakumar

 

 

வியாபாரத்தை அவர் ஆரம்பிக்கும்போது எந்த பொருளாதார பின்னணியும் அவருக்கு இல்லை. இன்று அவர் எட்டா உயரத்திற்கு வளர்ந்திருக்கிறார். வியாபாரத்தையும், அரசியலையும் இணைந்தே பார்த்தவர். பிரித்து பார்க்க மாட்டார். இரண்டிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றார். வெற்றிப் படிக்கட்டு என்ற நூலை எழுதியதற்கும், அதைப் பற்றி பேசுவதற்கும் சரியான நபர் அண்ணன் வசந்தகுமார்தான். 

 

அவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் கிராமம். இந்த கிராமம் இன்று வெளியுலகுக்கு தெரிந்தது என்றால் வசந்தகுமார்தான். கரோனா காலத்தில் அவரை போல் ஓடி ஒடி உதவி செய்த எம்.பி.யை பார்க்க முடியாது. அவ்வளவு உதவிகள் செய்திருக்கிறார். இனி இப்படி ஒரு எம்.பி. நமது தொகுதிக்கு கிடைப்பாரா? என்று ஆண்களும், பெண்களும் கண்ணீர் விடுகிறார்கள். அவருடைய தொகுதி மக்கள் தங்கள் வீடுகளில் ஒரு துக்கம் நடந்தது போல் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 2019 நாடாளுமன்ற தேர்தலில் அவர் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற அவருடைய தனிப்பட்ட செல்வாக்கு மிக முக்கிய காரணம். 

 

h vasanthakumar

 

அவருடைய காரில் எப்போதும் வேட்டி, சேலை, துண்டு, சட்டை, அரிசி இப்படி ஏதாவது இருக்கும். நான் பார்த்திருக்கிறேன். காரில் போகும்போது கிராமங்களில் வண்டியை நிறுத்தி, வேட்டி சேலை அரிசியை எடுத்து கொடுப்பார். தன் சொந்த காசில்தான் பல பேர் பசியை போக்கியிருக்கிறார். நிறைய பேரை படிக்க வைத்திருக்கிறார். படிப்புக்கு பணம் கொடுத்திருக்கிறார். இதனை நான் நேரில் பார்த்தவன். இதனை யாராலும் மறுக்க முடியாது. காமராஜரை மிகவும் நேசிப்பார். அவரது வழியில் செல்லக்கூடியவர். அதனால்தான் பல மாணவர்களின் பசியையும் போக்கியிருக்கிறார். பல மாணவர்களின் படிப்பு கனவையும் நிறைவேற்றியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை எங்கள் பகுதியைச் சேந்தவர். எனக்கு தூரத்து உறவினர். தனிப்பட்ட முறையிலும் எனக்கு பேரிழப்பு. 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆரம்ப காலக்கட்டத்தில் எங்கள் தலைவர் திருமாவளவன் உள்பட எங்கள் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்தால் ஊக்குவிப்பார். உங்களைப்போன்றவர்கள் உயரத்திற்கு வர வேண்டும் என்று உற்சாகப்படுத்துவார். உறுதுணையாக நின்றிருக்கிறார். கடைசி வரைக்கும் அந்த நட்பை தொடர்ந்து வந்தார். அதேபோல் எங்கள் தலைவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், அவர் மேல் தனிப்பட்ட மரியாதை வைத்திருக்கிறோம். அவரது மறைவு எங்களுக்கு பேரிழப்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்