Skip to main content

வைகோ vs ஸ்டெர்லைட் - 20ஆண்டுகளுக்கு மேலான போராட்டம்!

Published on 18/08/2020 | Edited on 18/08/2020
sterlite

 

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு மீது இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் தொழிற்சாலை திறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க முக்கிய காரணமாக அமைந்தது இருபது வருடங்கள் கழித்து உருவான மக்களின் எழுச்சிதான். கடந்த 2018ஆம் ஆண்டு துத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடத்திய அந்த போராட்டம், அதில் காவு வாங்கப்பட்ட 13 பேர் என்று இந்த ஆலையை மூட மிகப்பெரிய காரணமாக இருந்தது. தொடக்கத்தில் இதுகுறித்து வெறும் போராட்டங்களோடு நிற்காமல் சட்ட போராட்டமாகவும் கொண்டு சென்றவர் மதிமுக தலைவர் வைகோ.

 

முதன் முதலில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட்டின் விளைவை அந்த ஆலையை அடித்து உடைத்த மராத்தியர்களிடம்தான் கேட்கவேண்டும். அப்படி அடித்து விரட்டப்பட்டவர்களுக்குத்தான் 1994ஆம் ஆண்டில் தமிழகத்தில் அப்போதைய அரசு இடமும் கொடுத்தது. இதற்கு பின்னர் ஸ்டெர்லைட் தொழிற்சாலை எந்த தடையும் இன்றி ஆரம்பித்து நடக்க தொடங்கியது. ஒரு சிலர் மட்டும் இதன் விளைவுகள் தெரிந்து இதனை எதிர்த்து போராடத் தொடங்கினர். அதில் ஒருவர் தான் வைகோ.

 

வைகோ தலைமையில் 1996 மார்ச் 5 தூத்துக்குடியில் உண்ணாவிரத போராட்டம், 1996 மார்ச் 12 கடையடைப்பு கருப்புக்கொடி போராட்டம், 1996 ஏப்ரல் 1 ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணி, 1996 டிசம்பர் 09 தூத்துக்குடியில் உண்ணாவிரத போராட்டம், 1997 பிப்ரவரி 24 மாவட்ட ஆட்சித் துணைத்தலைவர் அலுவலகம் முற்றுகை, மறியல், ஆயிரக்கணக்கானோர் கைது, ஜூன்2, 3, 4 தேதிகளில் திருவைகுண்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரச்சார நடைப்பயணம், 1997 ஆகஸ்ட் 30 ஆம் தேதி பத்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்ற ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம், கைது என, தொடர் போராட்டங்கள் நடந்தது. 

 

vaiko

 

 

இதைத் தொடர்ந்து, 1998ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, வைகோவே வாதாடினார். பின் பல அமர்வுகளுக்கு பின்னர் 2010ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் இதை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. வழக்கில் வைகோ வெற்றிபெற்றார் என்றாலும் இதை சுலபமாக கையாண்டது, ஸ்டெர்லைட் தொழிற்சாலை. உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை நீரி (NEERI - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம்) அமைப்பு ஆய்வு செய்ய வேண்டுமென்றும் அந்த ஆய்வில் வைகோவும் உடனிருக்கலாம் என்றும் கூறியது. வைகோவும் கலந்து கொண்ட அந்த ஆய்வு 2011 ஏப்ரல் 6, 7 ஆம் தேதி நடந்தது. அனைத்தும் தூத்துக்குடி மக்களுக்கு சார்பாக இருந்த போதிலும், தொழிற்சாலை சட்டவிரோதமாக நடத்தப்பட்டது தெரிந்தும், தமிழக சுகாதாரத்துறை பரிசோதித்து, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இதை மூடிய போதும் உச்சநீதி மன்றம் இதற்கான தடை உத்தரவை உடைத்து ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. அதற்கு அவர்கள் சொல்லிய பதில்,  'இவர்களால்தான் இந்தியாவுக்கு தாமிர உலோகம் கிடைத்து கொண்டிருக்கிறது. அது இந்திய பொருளாதாரத்துக்கு தேவைப்படுவது' என்பது. இப்படி சொல்லிவிட்டு, ஆலையின் சுற்றுப்புற சூழல் விதிமீறலுக்கு  நூறு கோடி அபராதத்தை முன்பணமாக கட்டச் சொல்லி முடித்துவைத்தது. 

 

யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பை அளித்த உச்சநீதி மன்றத்திடமே வைகோ சீராய்வு மனு போட்டார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட,   தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து வழக்கு தொடுத்தார். அதைத்தொடர்ந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது இந்த வழக்கு. தமிழக அரசும், வைகோவும் தனித்தனியாக உச்சநீதி மன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்று வெளியான தீர்ப்பு போராடிய மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இது நிரந்தர மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் நீடிக்க வேண்டும்!