Skip to main content

செல்லமாக வளர்ந்த பெண்; புகுந்த வீட்டில் எதிர்பார்த்தால் என்னவாகும்? - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 30

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
jayzen manangal vs manithargal 30

அந்தப் பெற்றோர் தன் திருமணமான பெண்ணை கவுன்சிலிங்கிற்கு அழைத்து வந்திருந்தனர். பெண்ணை மிகவும் செல்லமாக வளர்த்ததாக பெற்றோர் கவலைப்பட்டனர். படிப்பில் அவ்வளவாக ஈடுபாடு இல்லாமல் வீட்டு வேலைகள் செய்யாமல், பொழுதுபோக்கில் அதிக நேரம் செலவழித்து  கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாத அளவுக்கு பெண்ணை வளர்த்திருந்திருக்கிறார்கள். பெண்ணுக்கு சுயாதீனமும், வாழ்க்கையின் யதார்த்தங்களையும், பொறுப்புகளையும் கற்றுக்கொடுக்கவில்லை.

இப்படி வளர்ந்த பெண்ணுக்கு அவளுடைய திருமண வாழ்க்கை சவாலாக இருக்கிறது. கணவர் கலெக்டர் ஆபீசில் வேலை செய்கிறார். கணவரும் கவுன்சிலிங்கிற்கு வந்திருந்தார். நல்ல முதிர்ச்சியாக பார்க்கும் மனிதராக இருந்தார். என்ன நடந்தது என்றால், திருமணத்திற்கு பின், அந்தப் பெண் தன் அம்மா வீட்டில் எப்படி வளந்திருந்தாரோ அதேபோல வாழ்க்கையைத் தொடர்ந்து இருக்கிறாள். காலையில் மிக லேட்டாக எந்திரிப்பது. இவள் எந்திரிக்கும் முன் கணவர் எல்லா வேலையும் செய்து சமைத்துவிட்டு இரண்டு குழந்தைகளையும் கிளப்பி சென்றுவிடுவார். மனைவி எழுந்து அடுத்து மாலை வரும் வரை டிவி பார்ப்பது போன்ற ரொம்ப சௌகரியமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். ஓரளவுக்கு உதவி செய்து கணவர் நன்றாக பார்த்துக் கொண்டாலும் ஒரு கட்டத்தில் அவரால் முடியவில்லை. ஏழு வருட காலமாகப் பொறுத்திருந்து முடியாமல் அவர் விவாகரத்து வாங்கும் நிலைக்கு போய்விட்டார். இந்த நிலையில்தான்  கணவரும் அங்கு வந்திருந்தார். 

அந்தப் பெண் எதற்காக கவுன்சிலிங் வந்தோம்? என்ன பிரச்சனை? என்ற மனநிலையில்தான் இருந்தார். ஆனால் கணவர் எல்லாம் வெறுத்த நிலையில் இருக்கிறார். அவர் ஆரம்ப நிலையிலேயே இதெல்லாம் தவறு இப்படி இருக்க கூடாது என்றாவது சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அதிகப்படி பொறுத்து கொள்ளுதல் என்பதால் இவ்வளவு காலம் பொறுத்திருந்த ஆற்றாமை ஒரு நாள் அதன் வெளிப்பாடு வந்து விட்டது. முடியவில்லை என்று பிரிவை நோக்கி வந்து விட்டார். எங்களுக்குள் குழந்தை பிறந்ததே தவிர எங்களுக்குள் எந்த வித ஈடுபாடும் இல்லை. அவள் எந்த வித ஈடுபாடும் இல்லாமல் தான் என் கூட வாழ்ந்து வருகிறார் என்றார். அந்தப் பெண்ணிற்கு இன்னும் புரியவும் இல்லை. வேலை செய்ய ஆள் வைத்துக் கொள்ளலாம் என்கிறாரே தவிர தான் ஈடுபாடு காட்ட வேண்டும் என்பது இன்னும் அந்தப் பெண்ணுக்கு புரியவில்லை. 

பெற்றோர் வீட்டினுடைய வரவு செலவு கூட பெண்ணுக்கு சொல்லாமல் அதையெல்லாம் எதுக்கு சார் சொல்லணும் என்றுதான் இருந்தனர். அந்தப் பெண்ணின் அம்மா உணர்ந்தாரே தவிர, அவரது அப்பா ஒத்துக் கொள்ளவே இல்லை. முதல் விஷயமாக அந்தப் பெண்ணுக்கு வரவு செலவு என்பதை பார்க்க வேண்டும் என்றுதான் சொன்னேன். சொன்னதுமே அந்தப் பெண்ணுக்கு கண் கலங்கிவிட்டது. எதார்த்தத்தை கூட கண்ணில் காட்டாமல் ஒரு கஷ்டத்தை காட்டாமல் வளர்த்திருக்கின்றனர். அப்பாவோ நான் சின்ன வயசில் ரொம்ப கஷ்டப்பட்டு வளர்ந்திட்டேன். அதனால் தான் இப்படி வளர்த்து இருக்கிறேன் என்றபோது கஷ்டப்பட்டு வளர்ந்தீர்கள் அதனால்தான் இப்போது நல்லா இருக்கிறீர்கள். அதேபோல உங்க பெண்ணும் நாளைக்கு நன்றாக இருக்க வேண்டும் என்றால் கஷ்டத்தை காட்ட வேண்டும். இப்போது 25 வருடமாக கஷ்டத்தை காட்டாமல் திடீரென்று கஷ்டத்தை புரிந்து கொள் என்றால் அந்தப் பெண்ணாலும் எப்படி முடியும் என்று புரிய வைத்தேன். அடுத்த முப்பது நாள் சமைக்கப் போவது நீங்கதான் என்றும் சொல்லபட்டது. 

அடுத்ததாக, அந்தப் பெண்ணுக்கு 5 கவுன்சிலிங், பெற்றோர்களுக்கு மூன்று செஷன்கள் வைக்கப்பட்டது. வாழ்க்கையின் கஷ்டங்கள் என்னவென்று புரிய வைக்க அந்தப் பெண்ணை வீடியோ கால் மூலமாக ஒரு  வீட்டு வேலை செய்யும் பணி பெண்ணை அழைத்து அவரின் வாழ்க்கை பற்றி சொல்ல சொல்லி இந்தப் பெண்ணை கேட்க மட்டும் வைத்தேன். அவர்கள், தன்னுடைய ஐந்து பெண்களை எப்படி வளர்த்தேன். எவ்வளவு பொருளாதார கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை விளக்கினார். அடுத்த செஷனில் ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளியைக் கூப்பிட்டு அவர் இயல்பான வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று அவருடைய கஷ்டங்களை பகிர வைத்து அந்தப் பெண்ணை கேக்க வைத்தேன். 

நேரடியாக எந்த வித அறிவுரைகளையும் போதிக்காமல் மற்றவர்கள் மூலமாக அந்தப் பெண்ணை ஜஸ்ட் காதால் மட்டும் கேட்க வைத்தேன். வாழ்க்கை என்றால் எப்படி இருக்கும், நம் வாழ்க்கை போலவே எல்லார் வாழ்க்கையும் இல்லை என்ற கஷ்டங்களை புரிய வைத்தேன். இப்படி மற்ற இயல்பானவர்கள் பேச பேச அந்தப் பெண்ணுக்கு அழுகை மட்டுமே வந்தது. அந்தப் பெண் உணர்ந்து நான் ஏதோ தப்பு செய்து விட்டேன் என்றும், அப்பா அம்மா ரொம்ப கெடுத்து வளர்த்திருக்கிறார்கள் என இப்போது தெரிகிறது என்றும் கூறினாள்.

பெற்றோர்கள் செல்லமாக வளர்க்க வேண்டும் என்றால் கஷ்டத்தை காட்டாமல் வளர்க்க வேண்டும் என்பது அர்த்தம் இல்லை. கஷ்டத்தையும் காட்ட வேண்டும், செல்லமாகவும் வளர்க்க வேண்டும். செல்லமாக வளர்ப்பது என்பது நீங்கள் பிரியமாக பிள்ளையிடம் காட்டும் அன்பு. அது உங்கள் சொந்த தனிப்பட்ட பிரியம். ஆனால், வாழ்க்கையில் கஷ்டம் என்றால் என்ன என்று அதை காட்டுவது அந்தப் பிள்ளைகள் வாழ வேண்டிய வாழ்க்கைக்கு ஆதாரமானது, அவசியமானது. இப்படி நிறைய செய்த பின்புதான் பெற்றோர்களுக்கும் புரிய வைக்க முடிந்தது. அந்தப் பெண்ணும் புரிந்து கொண்டு, கணவனிடம் சென்று மன்னிப்பு கேட்டு இன்று இருவரும் சேர்ந்து இப்பொழுது மீண்டும் ஒன்றாக வாழ்கிறார்கள்.