Skip to main content

ஊற்றுத் தோண்டி தண்ணீருக்காகக் காத்திருக்கும் கிராமம்; தவிக்கும் மக்கள்!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
People suffer without water in Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் கீழ்குடிவாட்டாத்தூர் ஊராட்சி சிறுகாசாவயல் தம்மம் குடியிருப்பு பகுதி. 50-க்கும் மேற்பட்ட  குடும்பத்தில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள 6 குக்கிராமங்களுக்கு ஒரு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மூலம் சுழற்சி முறையில் 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிதண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால் பொதுமக்களோ 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே  குடிநீர் வருவதாக கூறுகின்றனர். ஆனால் தற்போது பல நாட்களாக தண்ணீர் கிடைக்காததால் அப்பகுதி பெண்கள் கையில் குழந்தையைப் பிடித்துக் கொண்டு தலையில் குடத்துடன் பெண்கள் கூட்டம் கூட்டமாக 2 கி மீ தூரத்தில் செல்லும் வெள்ளாற்றிற்கு சென்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஊற்றுத் தோண்டி நீண்ட நேரம் காத்திருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதி பெண்கள் கூறுகையில், “இந்த வெள்ளாற்று மணலில் ஊற்றுத் தோண்டி ஒரு குடம் தண்ணீருக்காக ஒரு மணி நேரம் காத்திருந்து தண்ணீர் அள்ளி  வீட்டிற்கு எடுத்துச் செல்கிறோம். மழைக்காலங்களில் வெள்ளாற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்க முடியாமல் மழை நீரைத்தான் வடிகட்டி பயன்படுத்துகிறோம். இதைத்தான் ஆடு மாடுகளும் குடிக்கணும், நாங்களும் குடிக்கணும்.

எங்களுக்கு குடிதண்ணீர் கிடைக்காததால் நிரந்தர தீர்வு காண ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை வைத்து பல்வேறு  முயற்சிகளை எடுத்து வந்தோம். ஆனால் தற்போது வரை குடிதண்ணீர் பிரச்சினையிலிருந்து எங்களுக்கு  தீர்வு காண எந்த அதிகாரிகளும் முன்வராதது வேதனை அளிக்கிறது” என்கின்றனர் வேதனையான குரலில்.

மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும்  உள்ளாட்சித்துறை அதிகாரிகள் எங்கள் பகுதியை நேரில் ஒருமுறையாவது பார்வையிட்டு இப்பகுதி மக்களுக்கு  நல்லதண்ணீர்  தடையின்றி  கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊராட்சி நிர்வாகம், நிறைய கிராமங்கள் அடங்கிய ஊராட்சியில் தற்போது உள்ள நீர்தேக்கத் தொட்டிகள் மூலம் சுழற்சி முறையில் குடிநீர் வழங்கி வருகிறோம். பல நேரங்களில் மும்முனை மின்சாரம் பற்றாக்குறையால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற முடியாத நிலை உள்ளது. இருந்தும் தண்ணீர் கொடுக்கிறோம் என்கின்றனர்.
 

சார்ந்த செய்திகள்