Skip to main content

டிஜிட்டல் சமூகத்தின் புதிய ஆபத்து... வாட்ஸ்அப்பிடிஸ் பிரச்சனை குறித்து அறிவோம்...

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

basic things need to know about WhatsAppitis

 

இன்றைய நவீன உலகில் செல்ஃபோன் உபயோகிக்காத மனிதர்கள் குறைவு. அதேபோன்று, செல்ஃபோன் டவர் இல்லாத இடமும் குறைவாகவே உள்ளது. அந்த அளவுக்கு உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கி உள்ளது. மொத்தத்தில் இன்றைய உலகில் செல்ஃபோன்,  மனிதர்களின் உயிர் நாடியாக இருந்து வருகிறது.

 

’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழி, நீண்ட நேரம் செல்ஃபோன் பயன்படுத்துவோருக்கும் பொருந்தும். பேசுவதற்கும், பல நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கும் அவ்வப்போது செல்ஃபோன்களைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறே இல்லை. ஆனால், கால வரைமுறை இல்லாமல், தேவைற்ற செயல்களில் செல்ஃபோன்களைப் அதிகப்படியாகப் பயன்படுத்துவது, சில விசித்திரமான உடல் பிரச்சனைகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது. ஆம்! நீங்கள் நீண்ட நேரம் செல்ஃபோன் உபயோகப்படுத்தினால், வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் உபாதை உங்களுக்கு வரக்கூடும்.

 

வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்றால் என்ன?

 

நம்முடைய இருதரப்பு மணிக்கட்டு மூட்டுகள் மற்றும் கட்டைவிரல் இரண்டிலும் அதிகபடியான வலி ஏற்படுவது வாட்ஸ்அப்பிடிஸ் பிரச்சனை ஆகும். அதிகப்படியான செல்ஃபோன் பயன்பாட்டினால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது.

 

வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) பிரச்சனை முதலில் எப்படி கண்டறியப்பட்டது?

 

வாட்ஸ்அப்பிடிஸ் பற்றி முதல் செய்தி, கடந்த 2014 ஆம் ஆண்டில் தி லான்செட் எனும் மருத்துவ இதழில், 34 வயதான மருத்துவர் மூலம் வெளியானது. அவர், திடீரென தனது மணிக்கட்டு மூட்டுகள் மற்றும் கட்டைவிரல் இரண்டிலும் அதிகப்படியான வலி ஏற்பட்டதை உணர்ந்தார். அந்த வலியானது, மருத்துவருக்குத், தொடர்ச்சியாக 6 மணி நேரத்திற்கும் மேலாக செல்ஃபோன் உபயோகப்படுத்தியதால் ஏற்பட்டது என கண்டறிந்தார்.

 

எலும்பியல் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் இதுகுறித்து கூறும்போது, பொதுவாக, நீண்ட நேரம் செல்ஃபோன் பயன்படுத்தும்போது, நம்முடைய தசைநார்களில் அலர்ஜி மற்றும் காயம் ஏற்படலாம். இதன் காரணமாக, கட்டைவிரலை நகர்த்துவதில் வலி மற்றும் சிரமம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

 

செல்ஃபோன் பயன்பாட்டில் குழந்தைகளுக்குக் கட்டுபாடுகள் அவசியம்!

 

செல்ஃபோன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே, குழந்தைகள் செல்ஃபோன்களை எந்த வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று பெற்றோர்கள் கண்காணித்து வருவது முக்கியம். ஏனெனில், இன்றைய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 100 க்கும் மேற்பட்ட முறை தங்கள் செல்ஃபோன் திரைகளைப் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

 

அதிகப்படியான செல்ஃபோன் பயன்பாட்டினால் ஏற்படும் பிற உடல் உபாதைகள்:

 

அதிக நேரம் செல்ஃபோனில் பேசும்போது, அதிலிருந்து வெளிவரும் ரேடியேஷன், அதிகச் சூட்டை உண்டாக்கும். அது, நம்முடைய மூளை, காது, இதயம் போன்றவற்றைப் பாதிக்கும். அதுமட்டுமின்று, ஒருவித மன அழுத்தமும் உண்டாகும்.

 

பொதுவாக, செல்ஃபோன்களின் அதிகப்படியான பயன்பாடு கார்பல் டன்னல் (Carpal Tunnel) நோய்க்குறியின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும். இது கட்டைவிரல், ஆள்காட்டி விரல், நடுத்தர மற்றும் மோதிர விரலின் பாதியில் வலி, கூச்ச உணர்வு, எரியும் உணர்வு மற்றும் உணர்வின்மை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

 

நீண்ட நேரமாக செல்ஃபோனில் மெசேஜ் டைப் செய்பவர்களுக்கு, கை விரல்களில் உள்ள தசை நார்களில் பாதிப்புகள் ஏற்படும். ஒரே செயலை தொடர்ந்து செய்யும்போதும், ஹோல்டு செய்யும்போதும் கை விரல் தசைகளில், ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். மேலும், தசை நார்கள் கிழிந்துபோகும். இதனால், சில சமயங்களில் விரல்களை அசைக்க முடியாத நிலையும் கூட ஏற்படலாம்.

 

வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) பிரச்சனை வராமல் தடுப்பது அவசியம்!

 

உங்கள் செல்ஃபோனை 15-20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டாம். அதேபோன்று, செல்ஃபோனைப் பயன்படுத்தும்போது, கை வலியைத் தவிர்க்க உங்கள் செல்ஃபோனினை இரு கைகளிலும் பிடித்து, உங்கள் மணிகட்டை நேராக வைத்து பயன்படுத்த முயற்சிப்பது நல்லது.

 

செல்ஃபோன் பயன்படுத்தும்போது, மெசேஜ் செய்வதைக் காட்டிலும், வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது உங்கள் கட்டைவிரலில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க உதவும். மேலும், செல்ஃபோனை ஸ்பீக்கரில் போட்டுப் பேசும்போதும், ஹெட்செட் போட்டு பேசும்போதும் ஏற்படும் பாதிப்பு, காதுக்கு அருகில் செல்ஃபோனை வைத்துப் பேசும் பாதிப்பைவிடவும் குறைவு. எனவே, செல்ஃபோனில் பேசும்போது ஹெட்செட், ஸ்பீக்கர் போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது.

 

குறிப்பாக, செல்ஃபோனை நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றி தெரிந்துகொள்வதற்கு சில செயலிகள் (App) வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நீங்கள் ஒருநாளில் எவ்வளவு நேரம் செல்ஃபோன் பயன்படுத்துகிறீர்கள் என்பதனை எளிதாக அளவிட முடியும். இந்தச் செயலியைப் பயன்படுத்தி, உங்களது செல்ஃபோன் பயன்பாட்டின் அளவைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.

 

வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) சிகிச்சையானது மற்ற மருத்துவ சிகிக்சை போலவே உள்ளது. இருப்பினும், இதனைக் குணப்படுத்துவதை விட தடுப்பு முறையே (வரும் முன் காப்பதே) சிறந்த தீர்வாகும் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.