Skip to main content

தொடர் திருட்டால் பதறும் புதுக்கோட்டை!

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமின்றி அதிக மக்கள் நடமாட்டம் உள்ள நகரிலும் கடந்த சில நாட்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அசத்தில் உள்ளனர். 
 

ஆகஸ்ட் 5 ந் தேதி திருட்டு விபரம்... 
சம்பவம் 1 

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் நெடுவாசல் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த தனபால் என்பவர் வெளிநாடு சென்றுவிட்டார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு தூக்கிக் கொண்டிருந்த தனபாலின் மனைவி சிவகாமி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச்சங்கிலியை அறுத்துச் சென்றனர். 
 

serial theft in Pudukkottai

சம்பவம் 2  

அடுத்த வீடு தனபாலின் சகோதரர் ஜெயபால் வீடு. அவர்கள் சென்னையில் தங்கியுள்ளனர். அவர்களின் வீட்டு கதவு பீரோக்களை உடைத்து 22 பவுன் நகை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

 

சம்பவம் 3 

திருக்கோகர்ணம் காவல் சரகம் பழனியப்பா நகரில் பூட்டியிருந்த வீட்டில் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளை. வீட்டில் இருந்தவர்கள் வெளியூரில் இருந்ததால் பணம் பற்றிய விபரம் தெரியவில்லை. 
 

சம்பவம் 4 

கணேஷ் நகர் காவல் சரகம் நீதிமன்றம் அருகில் உள்ள டால்பின் செல்போன்கடையை உடைத்து சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தது.
 

சம்பவம்  5 

பொன்னமராவதி ஒலியமங்கலம் சுப்பையா மனைவி பழனியம்மாள் (52) வெளிநாட்டில் இருக்கும் தனது மகன் அனுப்பிய பணத்தை எடுக்க புதுக்கோட்டை நகரில் உள்ள கனரா வங்கிக்கு வந்து பணம் எடுத்துக் கொண்டு வெளியே வந்தபோது அருகில் வந்த ஒரு இளைஞர் அந்த பெண்ணிடம் தான் போலிஸ் என்று அறிமுகம் செய்து கொண்டு ஊரே கெட்டுக்கிடக்கு, இவ்வளவு நகைகளை போட்டுக்கும் டவுன்ல நடக்கலாமா? கழட்டி உள்ளே வையும்மா என்று சொன்னதுடன் அந்த நகைகளை தானே காகிதத்தில் மடித்துக் கொடுப்பது பொல மடித்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டான். சிறிது நேரத்தில் சந்தேகத்துடன் அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தால் 18 பவுன் நகைகளை காணவில்லை.

serial theft in Pudukkottai


இப்படி ஒரே நாளில் 5 சம்பவங்கள் அதில் நகரில் மட்டும் 3 சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் இன்று
 

புதுக்கோட்டை வடக்கு 3 ம் வீதியில் கலாவதி என்பவர் வீட்டில் பீரோவை உடைத்து 12 பவுன் தங்க நகை, வெள்ளி 800 கிராம், ஆகியவை திருடப்பட்டுள்ளது. அதேபோல பொன்னமராவதிலியில் இருந்து புதுக்கோட்டைக்கு பஸ்சில் வந்து இறங்கிய பெண் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை என்று பரவலாக பேச்சு அடிபட்டது.

இப்படி அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பதால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் புதுக்கோட்டை நகரில் வழிப்பறிகள் நடந்து காவல்நிலையத்திற்கு சென்றால் உடனே வழக்குபதிவு செய்யாமல் விரைவில் நகைகளை மீட்டு உங்களிடம் ஒப்படைக்கிறோம் புகார் வேண்டாம் என்று தவிர்ப்பது பல வருடங்களாக தொடர்கிறது. நிலைய அதிகாரிகள் மாறிய பிறகு நகை திருடன்கள் பிடிபட்டு நகைகள் மீட்கப்படும் போது பறிகொடுத்தவர்கள் போய் கேட்டால் உங்க புகார் இங்கே இல்லையே என்று பதில் வருவதால் புகார் கொடுத்தும் பதிவாகாத நிலையில் உள்ள பறிகொடுத்தவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்