Skip to main content

5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்; விவசாயிகள் வேதனை

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
tears

தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. தமிழகத்தின் பல இடங்களில் கன மழை பொழிந்துள்ளது.

வரும் மே 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 15, 16, 17, 18, 19 ஆகிய ஐந்து நாட்களுக்கு விருதுநகர், தென்காசி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, திருச்சி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜபுரத்தில் மதுரமங்கலம், சிவன்கூடல், மேல்மதுர மங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. அதிகாரிகள் அலட்சியத்தால் நெல் மூட்டைகள் சேதம் அடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை முறையாக தார்ப்பாய் கொண்டு மூடப்படாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் என்றாலே நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவது தொடர்கதையாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்