Skip to main content

எதிர்பார்த்த அமைச்சர் உதயநிதி; மேடையிலேயே அறிவித்த முதலமைச்சர்

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

Expected Minister Udayanidhi; The Chief Minister announced on the stage

 

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்க விழா மற்றும் முதலமைச்சர் கோப்பை இலச்சினை வெளியிட்டு விழா சென்னை லீலா பேலஸில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தற்போதைய சென்னை அணியின் கேப்டனுமான தோனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்தாண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான மானியக் கோரிக்கையில் பல மகத்தான அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் ஸ்குவாஷ் விளையாட்டுக்கான உலகக்கோப்பை போட்டி, ஆசிய ஹாக்கி ஆடவர் சாம்பியன்ஷிப் போன்ற உலகப் போட்டிகளை நடத்துவது போன்ற இலக்குகளை உருவாக்கி செயல்பட்டு வருகிறார் அமைச்சர் உதயநிதி.

 

இந்த அறிவிப்புகளில் பொதுமக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேசன் எனும் அறக்கட்டளை உருவாக்குவதும் ஒரு முக்கிய அறிவிப்பு. தமிழ்நாட்டில் விளையாட்டுகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்தில் மக்களுடனும் பெரும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கான முன்னெடுப்பாக இது அமைந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம். விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவு செய்யலாம். 

 

அமைச்சர் உதயநிதி பேசும்போது சொன்னார். நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன் தொடங்கியபோது முதலமைச்சர் எனும் முறையில் மட்டுமல்லாது தனிப்பட்ட முறையில் 5 லட்சம் நன்கொடை வழங்கியதை குறிப்பிட்டு சொன்னார். இங்கேயும் எதிர்பார்ப்பதாக சொன்னார். உங்கள் எதிர்பார்ப்பு வீண் போகாது. இந்த அமைப்புக்கும் என் தனிப்பட்ட முறையில் 5 லட்ச ரூபாயை நான் வழங்குகிறேன்” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்