Skip to main content

வில்லன், வில்லியை வெளியேற்றவே தர்மயுத்தம்!!- முன்னாள் அமைச்சர் பேச்சு!!!

Published on 18/10/2018 | Edited on 18/10/2018

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியம் அண்ணா தி.மு.க. சார்பாக அ.தி.மு.க.வின் 47வது வார்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் சின்னாளபட்டி ராயல் தியேட்டர் எதிர்புறம் உள்ள எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் பி.கே.டி.நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் திண்டுக்கல் மேயருமான வி.மருதராஜ், மாவட்ட அபிராமி கூட்டுறவு பண்டகசாலை முன்னாள் தலைவர் வெ.பாரதிமுருகன், முன்னாள் ஆவின் செயலாளர் எ.திவான்பாட்சா ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

admk

 

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன் பேசும்போது, 47 வருடங்களாக இந்த இயக்கம் (அ.தி.மு.க.) கட்டுக்கோப்புடன் இருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் தியாகமும், உழைப்பும் தான் என்றார். அம்மா அவர்கள் தொண்டர்களை இமைபோல் காத்து வந்ததால் இன்றும் அம்மாவின் விசுவாசிகள் கழகத்தை கட்டிக்காத்து வருகிறார்கள். அம்மா மறைவிற்குப்பின் கழகத்திலிருந்து வில்லன், வில்லிகளை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அண்ணன் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவர்கள் தர்மயுத்தம் தொடங்கினார்கள். அதனால் அவர்களிடம் கழகம் செல்லாமல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையின் கீழ் செயல்பட வந்தது. கழகத்தை காக்க அண்ணன் அவர்கள் (ஓ.பி.எஸ்.) கழகத்துடன் இணைத்தபோது அதற்கு உறுதுணையாக இருந்தவன் என்ற முறையில் நான் இன்று பேசுகிறேன். மன்னார்குடி குடும்பம் மட்டும் அம்மாவுடன் இல்லை என்றால் அம்மா அவர்கள் இன்னும் 15 ஆண்டுகள் உயிருடன் இருந்திருப்பார்கள். வழக்குகள் வந்திருக்காது மன உளைச்சல் ஏற்பட்டு இருக்காது. மன்னார்குடி குடும்பத்திற்கு விசுவாசிகளாக இருந்தவர்களுக்கு மட்டும்தான் கட்சியில் பதவி வழங்கினார்கள். அம்மாவின் விசுவாசிகள் ஓரம் கட்டப்பட்டார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை எம்.ஜி.ஆர். அம்மா அவர்களின் விசுவாசிகள்தான் கட்சியில் உள்ளார்கள். அதனால்தான் 47 ஆண்டுகளுக்கு பின்பும் நாம் ஆண்டுவிழா கொண்டாடுகிறோம். அ.தி.மு.க. மீது சேற்றை வாரி இறைக்கும் முறையில் டென்டர்கள் முறைகேடு என்கிறார்கள். டென்டரில் முறைகேடு கிடையாது நியாயமான முறையில் டென்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் 100 ஆண்டுகள் அம்மாவின் ஆன்மாவும், மறைந்த புரட்சித்தலைவரின் ஆன்மாவும் கழகத்தையும், கழகத் தொண்டர்களையும் காப்பாற்றும் இது உறுதி என்று கூறினார்.

 

admk

 

ஏற்கனவே ஆத்தூர் ஒன்றியத்தில் டிடிவி தினகரன் அணிக்கு பலர் சென்றுவிட்டதால் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. சேர்கள் பல காலியாக இருந்தன. கூட்டத்தை விட கட்சி நிர்வாகிகள் வந்த கார்கள் தான் அதிகமாக இருந்தது. மேடையில் முன்னாள் ஆத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் கோபிக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் தானாகவே ஒரு இருக்கையை எடுத்துவந்து மாவட்டச் செயலாளர், ஒன்றிய செயலாளர் ஆகியோர் அமர்ந்திருந்த வரிசைக்கு முன்னாள் தனியாக அந்த இருக்கையை போட்டு அமர்ந்துவிட்டார். இதைப் பார்த்த விசுவநாதனின் ஆதரவாளர்களும், மாவட்டச் செயலாளர் மருதராஜ் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்தனர். அ.தி.மு.க. தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர்.  மொத்தத்தில் ஆளுங்கட்சியின் ஒன்றிய பொதுக்கூட்டம் கூட்டமில்லாமல் நிறைவுற்றது!

சார்ந்த செய்திகள்