Skip to main content

''இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை''-11 மணிநேர விசாரணைக்கு பின் டிடிவி.தினகரன் பேட்டி! 

Published on 13/04/2022 | Edited on 13/04/2022

 

TTV

 

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்தின் அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில், சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனைத் தொடர்பாக, டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் நேற்று (12/04/2022) பகல் 12.00 மணியளவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரடியாக ஆஜரானார். அவருடன், இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகரும், அமலாக்கத்துறையில் ஆஜராக்கப்பட்டு, இருவரையும் ஒன்றாக அமர வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே சுகேஷ் சந்திரசேகரிடம் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்றது. அதில், சுகேஷ் சந்திரசேகர் தனக்கு டிடிவி தினகரன் ரூபாய் 10 கோடி கொடுத்ததாக விசாரணை அதிகாரியிடம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியது. இதனை முற்றிலுமாக மறுத்துள்ள டிடிவி தினகரன், சுகேஷ் சந்திரசேகர் யார் என்றே தெரியாது என்றும், அவரிடம் நான் எந்தவொரு பணத்தையும் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

இந்த வழக்கில் நேற்று மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை தினகரனிடம் அமலாக்கத்துறை மொத்தம் சுமார் 11 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. விசாரணைக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி.தினகரன், ''சுகேஷ் சந்திரசேகரன் ஒவ்வொருமுறை வரும்பொழுது ஒவ்வொரு வாக்குமூலம் கொடுப்பதால் அமலாக்கத்துறை கேள்விகளை என்னிடம் கேட்கிறது. கேட்பது அவர்களின் கடமை'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'சுகேஷ் சந்திரசேகர் வேண்டுமென்று இந்த வழக்கில் உங்களை மாட்டி விடுவதற்காகத் திரும்பத் திரும்ப ஸ்டேட்மென்ட் கொடுத்து ஏமாற்றுகிறார் என்று நினைக்கிறீர்களா?' என்று கேட்க, ''அப்படித்தான் நினைக்கிறேன். இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த வழக்கில் நான் சொல்ல விரும்புவது நான் நிரபராதி.. நான் எந்த தப்பும் செய்யல... யாரோ கொடுக்கும் ஸ்டேட்மென்ட்டுக்காக என்னை கூப்பிட்டு விசாரிக்கும் கட்டாயம் அமலாக்கத்துறைக்கு இருக்கு. எனவே கூப்பிட்டு விசாரிக்கிறார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்