Skip to main content

“தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன்” - கங்கனா ரணாவத்

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
kangana ranaut says she will quit cinema if she win the election

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் வாக்கு பதிவு, மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், ஒவ்வொரு கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை நான்கு கட்ட வாக்குபதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு மே 7ஆம் தேதி குஜராத், மராட்டிம், கோவா உள்ளிட்ட 94 தொகுதிகளுக்கும் நான்காம் கட்ட வாக்குபதிவு மே 13ஆம் தேதி தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 96 தொகுதிகளுக்கும் நடைபெற்றது.

இதையடுத்து இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பீகார், ஜார்கண்ட், ஒரிசா உள்ளிட்ட 49 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஆறாம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதியும், ஏழாம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதியும் அடுத்தடுத்து நடக்கவிருக்கிறது. ஜூன் 4 வாக்குஎண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் மாண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத், சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும் பிரச்சாரத்தின் போது அவர் பேசியது சில சர்ச்சைகளையும் கிளப்பியது. கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில், “நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” எனக் கேள்வி எழுப்பியது சர்ச்சையானது. இதையடுத்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவை விமர்சிப்பதாக தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை விமர்சித்திருந்தார்.

பின்பு அமிபதாப் பச்சனுடன் தன்னை ஒப்பிட்டும், சினிமாவிலிருந்து தான் விலக முடியாது என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றால், சினிமாவில் இருந்து விலகிவிடுவதாகத் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட அவரிடம், மாண்டி தொகுதியில் வெற்றி பெற்றால் பாலிவுட்டை விட்டு விலகுவீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஆம் என்று பதிலளித்த அவர், “திரையுலகம் பொய்யானது. அங்கு எல்லாமே போலிதான். பார்வையாளர்களைக் கவர்வதற்காகப் பொய்யான உலகை உருவாக்குகிறார்கள். இதுதான் யதார்த்தம். நான் உணர்ச்சி வசப்படும் நபர். கட்டாயத்தாலேயே நான் சினிமாவில் நடித்து வருகிறேன். நடிப்பதில் சலிப்பு ஏற்படும்போது நான் கதை எழுதத் தொடங்கினேன். டம் இயக்குவது, தயாரிப்பது என என்னை பிசியாக வைத்துக்கொண்டேன். மேலும் ஆர்வத்துடன் ஈடுபட விரும்புகிறேன்” என்றார். 

சார்ந்த செய்திகள்