Skip to main content

''வரவேண்டிய நேரத்தில் வருவார் ராஜேந்திரபாலாஜி'' -டயலாக் விடும் முன்னாள் எம்.எல்.ஏ.!

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

'Rajendrapalaji will come in due time' '- Former MLA

 

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகி, விருதுநகர் மாவட்ட காவல்துறை 8 தனிப்படை அமைத்து தேடிவரும் நிலையில், அவரோடு தொடர்பிலிருந்த கட்சி நிர்வாகிகள், அவ்வப்போது விசாரணைக்கு ஆளாகிவருகின்றனர். அவர்களது கைபேசிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

 

அழைத்தால் செல்வதும், சிலமணிநேர விசாரணையில் காவல்துறை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதுமாக இருந்த விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், இதனை ஒரு தொந்தரவாகவே கருதி வருகின்றனர். இனிமேல் விசாரணைக்கு அழைக்கப்பட்டு பதில் சொல்லிவிட்டு திரும்பும்போது, வழக்கம்போல் அமைதியாக இருந்துவிடாமல்,  மீடியாக்களைச் சந்தித்து பேட்டியளித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

 

இன்று (30-ஆம் தேதி) சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனும், ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர் சீனிவாசனும், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆளானபோது, சற்று ரிலாக்ஸாக இருந்த நிலையில் நம்மைத் தொடர்புகொண்டு ‘நாட்டுக்கோழி சாப்பாடு வாங்கித் தருவாங்களான்னு தெரியல..’ என்று ஜோக்கடித்தார்.  

 

அடுத்து, விசாரணை முடித்துவிட்டு திரும்பியபோது, செய்தியாளர்களிடம் ராஜவர்மன் “மூன்று மணி நேரமாக சவுத் ஜோன் டிஜஜி மேடமும், எஸ்.பி.மனோகர் சாரும் விசாரித்தார்கள். ராஜேந்திரபாலாஜியும் நீங்களும் நெருக்கமாக இருந்தீர்கள். அவருக்கும் உங்களுக்கும் தொடர்பு எப்படி இருக்கிறது? அவர் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்றெல்லாம் விசாரித்தார்கள். ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு ராஜேந்திரபாலாஜி 17-ஆம் தேதி சென்றபிறகு, எங்கள் யாரிடத்திலும் அவர் தொடர்புகொள்ளவில்லை, நாங்களும் தொடர்புகொள்ளவில்லை. கழக நிர்வாகிகளும்கூட தொடர்புகொள்ளவில்லை. நாங்களும்தான் அவரைத் தேடிக்கொண்டிருக்கிறோம். எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடித்துத் தரும்படி நாங்களும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். ராஜேந்திரபாலாஜி மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டு, தான் நிரபராதி என்பதை நிரூபிப்பார் என்பதைச் சொல்லிவிட்டு வந்திருக்கிறோம். மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்துகொண்டு, விசாரணைக்கு பயந்து ஓடி ஒளிய என்னால் முடியாது. அண்ணனுடைய (ராஜேந்திரபாலாஜி) சூழ்நிலை அப்படி. உடல்நலம் இல்லாதவர். அதனால், முன்ஜாமீன் வாங்குவதற்கு முயற்சிக்கிறார். இது என்ன கொலை வழக்கா? அல்லது, வேறு எதுவும் கொடூர வழக்கா?  ஏதோ அவர் மேல வழக்கு போட்டிருக்காங்க. நீதிமன்றத்தில் போராடி கண்டிப்பாக வெற்றி பெறுவார்.  ராஜேந்திரபாலாஜி வரவேண்டிய நேரத்தில் வருவார். கண்டிப்பாக அதில் எந்தவித மாற்றமும் இல்லை.” என்றார்.

 

ராஜேந்திரபாலாஜி வழக்கு குறித்து முதல்முறையாக  வாய் திறந்திருக்கிறார்கள், விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்.

 

 

சார்ந்த செய்திகள்