Skip to main content

தொடங்கிய முதல்கட்ட வாக்குப்பதிவு; மும்முனைப் போட்டியில் குஜராத்

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

First phase of polling begins; Gujarat in three-way contest

 

குஜராத்தில் ஆட்சி அமைப்பதற்காக பாஜக, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் பல்வேறு வாக்குறுதிகளைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள். குஜராத் வரலாற்றில் இதுவரை காங்கிரஸ், பாஜக என இருமுனைப் போட்டியே நிலவி வந்தது.

 

தற்போது ஆம் ஆத்மியின் வருகையால் குஜராத் களம் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. இந்தப் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று குஜராத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. முதல் கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மாலை 5 மணி வரை நடைபெற உள்ள வாக்குப்பதிவில் சுமார் 2.39 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

 

குஜராத் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலில் 70 பெண்கள் உட்பட 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலை சுமூகமாக நடத்த 27,978 தேர்தல் அதிகாரிகள், 78,958 வாக்குப்பதிவு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், டிசம்பர் 5 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் நடைபெற இருக்கிறது.

 

வாக்குப்பதிவிற்காக சுமார் 34,324 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினர், குஜராத் போலீசார் எனக் கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிவிரைவுப் படை உள்ளிட்டவையும் தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் எல்லைப்புறங்களும் தீவிரமாகக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக தனியாக இயங்கும் வாக்குச்சாவடி மையங்கள், இளைஞர்களைக் கொண்டு மட்டுமே இயங்கக்கூடிய வாக்குச்சாவடி மையங்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு என்று சிறப்பு வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்குச்சாவடி மையங்கள் எனப் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்