Skip to main content

14 வயது சிறுமிக்கும் எச்.ஐ.வி ரத்தம் - நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பம்

Published on 29/12/2018 | Edited on 29/12/2018

 

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு  எச்.ஐ.வி   ரத்தம் ஏற்றிய அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து சென்னை மாங்காட்டைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கும்  எச்.ஐ.வி   ரத்தம் செலுத்தப்பட்டுள்ள சம்பவம் வெளியாகி அதிர வைத்துள்ள நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச்சேர்ந்த சிறுமிக்கும் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டுள்ள சம்பவம்  பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளது.

 

si

 

கடந்த 2009ம் ஆண்டில்  செப்டம்பர் மாதம் மானாமதுரையைச்சேர்ந்த  14வயது சிறுமிக்கு அடிக்கடி மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறியதால் ரத்தம் வருவதை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்  என்று தனியார் கிளினிக்கில் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.  அதன் பின்னர் செப்டம்பர் 25, 26 தேதிகளில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுமிக்கு இரண்டு யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.  சிகிச்சைக்கு பின்னர் மூக்கில் ரத்தம் வருவது நிற்காததுடன்,  உடலில் புண்கள் ஏற்பட்டுள்ளன.  இதையடுத்து 2010ம் ஆண்டில் ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுமிக்கு எச்.ஐ.வி.  தொற்று இருப்பது தெரியவந்து குடும்பத்தினர் அதிர்ந்து போயுள்ளனர்.  

 

எச்.ஐ.வி பாதிப்பின் வலியுடன் கடந்த  8 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் அந்த இளம்பெண். சாத்தூர், மாங்காடு பெண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் வெளியே வந்ததும் மானாமதுரை இளம்பெண்ணும் இந்த பிரச்சனையை வெளியே சொல்ல முன்வந்துள்ளார்.

 


 எந்த வித தவறும் செய்யாமல் இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாகி, பலரின் கேலி, கிண்டல்களால் மனம் நொந்து போய் பல சமயங்களில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  கதவை உடைத்து ஒவ்வொரு முறையும் காப்பாற்றியிருக்கின்றனர்.  என் மகளை காப்பாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் போராடிக்கொண்டிருக்கிறோம் என்று  அந்த இளம்பெண்ணின் தந்தை வேதனையுடன் தெரிவிக்கிறார்.

 


இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைப்பெற்று வருகிறது.   வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, வாதாடிவருகிறார்.   பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்