Skip to main content

ஈரான் அதிபர் மறைவு; இந்தியாவில் துக்கம் அனுசரிப்பு!

Published on 21/05/2024 | Edited on 21/05/2024
Iranian President Ebrahim Raisi incident Mourning in India

ஈரான் - அஜர்பைஜான் எல்லையில் நடைபெற்ற அணை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று (20.05.2024) ஹெலிகாப்டரில் திரும்பி உள்ளார். இந்த ஹெலிகாப்டர் ஜோல்ஃபா பகுதியில் உள்ள அடர்ந்த வனம் மற்றும் மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியதாக கூறப்பட்டது. அதே சமயம் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இந்த விபத்து நடந்து சுமார் 17 மணி நேரத்திற்குப் பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன.

இதனையடுத்து ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இந்த விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உடன் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளும் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஓமர் ஹொசைன் ஆகியோரின் உடல்கள் மீட்புப்படையினரால் கண்டெடுக்கப்பட்டன. அப்போது கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது. 

Iranian President Ebrahim Raisi incident Mourning in India

அதன் பின்னர் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஈரானில் உள்ள புனிதத் தலமான இமாம் ரேஸாவில் வைத்து அந்நாட்டு மக்களுக்கு அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வனப்பகுதியில் நிலவிவந்த மூடுபனி காரணமாக ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

மறைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. ஈரானின் தற்காலிக அதிபராக 68 வயதாகும் துணை அதிபர் முகமது மொக்பெர் நியகிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஈரான் அதிபர் இப்ராஹிம்  ரைசி மறைவையொட்டி இந்தியாவில் இன்று (21.05.2024) ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஈரான் அதிபரின் மறைவையொட்டி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் இன்று பறக்கவிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்