Skip to main content

ஜெயக்குமார் தனசிங் மரணம்; அடுத்தடுத்து சிக்கிய கடிதங்கள்!

Published on 05/05/2024 | Edited on 05/05/2024
nellai district congress executive issue A series of stuck letters

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் நேற்று (04.05.2024) சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைத்து திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டிருந்தார். அத்தோடு ஜெயக்குமார் தனசிங் உடல் மீட்கப்பட்ட இடத்தில் எஸ்.பி. சிலம்பரசன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

nellai district congress executive issue A series of stuck letters

இந்நிலையில் ஜெயக்குமார் தனசிங் தனது மருமகனுக்கு கைப்பட கடந்த 27 ஆம் தேதி எழுதிய கடிதம் ஒன்றும் மற்றொரு கடிதம் என இரு கடிதங்கள் வெளியாகி பரப்பப்பை ஏற்படுத்தியுள்ளது. மருமகனுக்கு எழுதிய அந்த கடிதத்தில் ‘அன்புள்ள மருமகனுக்கு’ எனக் குறிப்பிட்டு, “நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியனிடம் ரூ.5 லட்சம் கொடுத்துவிட்டு. அதற்கு ஈடாக கொடுக்கப்பட்ட காசோலையை திரும்பப் பெற வேண்டும். இடிந்தக்கரையை சேர்ந்தவருக்கு ரூ.10 லட்சம் திரும்ப கொடுக்க வேண்டும். தனது பிரச்சனையை மனதில் வைத்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை யாரும் பழிவாங்க வேண்டாம். சட்டம் தன் கடமையைச் செய்யும் ”எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தனக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான பணம் தொடர்பாக 14 பேர் கொண்ட பட்டியலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் தான் திருப்பி அளிக்க வேண்டிய பண விவரங்களையும் ஜெயக்குமார் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மகள் கத்ரீன் திருமணத்தை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் நன்றி என கடிதத்தில் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். சொத்து ஆவணங்கள் குறித்தும் அந்த கடிதத்தில் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். 

nellai district congress executive issue A series of stuck letters

முன்னதாக முன்னதாக கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி ஜெயக்குமார் தனது கைப்பட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது அந்த கடிதத்தில், ‘திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருகிறது. அவர்களால் தனது உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை’ என குறிப்பிடப்பட்டிருந்தது. 

சார்ந்த செய்திகள்