Skip to main content

ஆதார் பெயரில் எந்த சேவையையும் யாருக்கும் மறுக்கக்கூடாது! - ஆதார் ஆணையம்

Published on 11/02/2018 | Edited on 11/02/2018

Aadhaar

 

ஆதார் இல்லையென்ற காரணத்தால் ரேஷன் பொருட்கள் மறுப்பு, சிகிச்சை மறுப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட மோசமான பாதிப்புகள் என இதுதொடர்பான செய்திகளுக்கு சமீப காலமாக பஞ்சமே இல்லை. இந்த ஆதார் பரிதாபங்கள் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியுள்ள நிலையில், ஆதார் இல்லை என்ற காரணத்திற்காக எந்த சேவையையும் யாருக்கும் மறுக்கக்கூடாது என ஆதார் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

 

இதுகுறித்து ஆதார் ஆணையம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘மருத்துவ வசதி, சிகிச்சைகள், ரேஷன் பொருட்கள், பள்ளி சேர்க்கை, அரசு நலத்திட்டங்கள் என எந்தவொன்றும், அப்பாவி பொதுமக்களுக்கு ஆதார் இல்லை என்ற காரணத்தால் மறுக்கக்கூடாது. இதற்காக ஆதார் சட்டம் பிரிவு 7ல் குறிப்பிட்டுள்ளது போல், ஆதார் சரிபார்த்தலில் குழப்பம் ஏற்பட்டாலோ, சம்மந்தப்பட்டவர் ஆதார் வைத்திருக்கவில்லை என்றாலோ, மாற்று வழிகளில் அடையாள சரிபார்ப்பை முடித்துவிட்டு, உரிய சேவைகள் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்’ என வலியுறுத்தியுள்ளது.

 

மேலும், ஆதார் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பான நிர்வாகத்திற்காக மட்டுமே அறிமுகப்படுத்தப் பட்டதே தவிர, அதைக் காரணமாக எந்த சேவைகளும் தடைப்படுவதற்கு வழிவகுக்கக்கூடாது. அப்படி நடக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களின் மீது புகாரளிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்