ADVERTISEMENT

யார் இந்த பிர்ஸா முண்டா...? என்ன செய்தார்...?

11:32 AM Nov 20, 2018 | tarivazhagan

நில அரசியலை, தமிழ் சினிமாவில் தொடர்ந்து பேசிகொண்டிருக்கும் இயக்குனர் பா.ரஞ்சித், தற்போது பாலிவுட்டிலும் அதனை பேச பயணித்திருக்கிறார். பிர்ஸா முண்டா என்பவரின் வழ்க்கை வரலாற்றை பாலிவுட்டில் படமாக எடுக்கப்போவதாக இயக்குனர் பா.ரஞ்சித் அறிவித்துள்ளார். அதே படத்தை தமிழில் அறம் படத்தின் இயக்குனர் கோப்பி நயினார் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பிர்ஸா முண்டா தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிக அளவில் வலம்வந்துகொண்டிருக்கிறது. யார் இந்த பிர்ஸா முண்டா என்பதை சுருக்கமாக தெரிந்துகொள்வோம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிஹாரும் ஜார்கண்டும் ஒருங்கிணைந்திருந்த காலத்தில் 15 நவம்பர் 1875-ல் முண்டா எனும் பழங்குடி சமூகத்தில் எளிய, வறுவமையான குடும்பத்தில் பிறந்தவர் பிர்ஸா முண்டா. புஹண்டா எனும் காட்டு பகுதியில் ஆடு மேய்ப்பது மற்றும் சில சிறு வேலைகளை செய்வது என்று இவரின் இளமை காலம் இருந்தது. இவரின் இளமைப் பருவத்தில் கிறிஸ்துவம் மதத்தின் மீது பற்றுகொண்டு அந்த மதத்திற்கு மாறினார். பின் தான் பிறந்த முண்டா சமூகத்தைப் பற்றி தெரியவர, பழங்குடி மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட அவர் தன்னை அதற்கான போராட்டத்தில் ஈடுபடுத்திகொண்டார்.

நிலப்பிரபத்துவர்கள் பழங்குடியினரின் நிலங்களையும் உடைமைகளையும் ஆக்ரமிப்பு செய்வதைக்கண்டு. அதை எதிர்த்து முதலில் பிர்ஸா முண்டா போராட்டம் நடத்தினார். அதுமட்டுமின்றி ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினார். அதிகாரத்தை எதிர்த்து போராட அங்கிருக்கும் பழங்குடி மக்களை எல்லாம் ஒன்றிணைத்து நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக போராட தொடங்கினார். அவர் ஒருங்கிணைத்த போராட்ட குழுவிடம் ‘பொய் பேச கூடாது, மது அருந்த கூடாது, கடவுளுக்கு என்று உயிர் பலிகளை கொடுக்கக்கூடாது, பெரியவர்களை மதிக்கவேண்டும் மற்றும் உடலும், மனமும் தூய்மையாக இருக்க வேண்டும் போன்ற பண்புகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இவரின் தொடர் போராட்டங்களைக்கண்டு, பிரிட்டிஷ் அரசு அவர்களை கவனிக்கத் தொடங்கியது. மேலும் பிர்ஸாவின் செயல்பாடுகளையும் எதிர்த்து நிற்க தொடங்கியது. அதனால் 1895-ல் பிரிட்டிஷ் அரசால் பிர்ஸா கைது செய்யப்பட்டார். இவரின் கைதைக் கண்டித்து பிர்ஸாவின் படை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியது. 1895-ல் கைது செய்யப்பட்ட பிர்ஸா முண்டா இரண்டு வருடங்கள் சிறையில் இருந்தார். அந்த இரண்டு வருடங்களும் பிரிட்டிஷாருக்கும் முண்டா பழங்குடி மக்களுக்கும் இடையில் பெரிய போராட்டங்கள் நடந்திருக்கிறது. 1897-ல் பிர்ஸா விடுதலையாகி வெளியேவந்தார். மீண்டும் அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், நிலத்திற்காகவும் தீவிரமாக போராட தொடங்கினார். அதன் காரணமாக 1900-ம் வருடம் பிப்ரவரி 3-ம் தேதி மீண்டும் சிறைப்படுகிறார் பிர்ஸா. இம்முறை சிறை சென்ற பிர்ஸா பிணமாகத்தான் வெளியுலகத்திற்கு வருகிறார். 1900 ஜூன் 9-ம் தேதி தனது 25-து வயதில் பிர்ஸா, காலரா நோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிரிந்தார் என்று பிரிடிஷ் அரசு அறிவித்தது.

நிலப்பிரபுத்துவம், பிரிடிஷ் அரசு எதிர்ப்பு என தனது 20 வயதில் போராட்டத்தை தொடங்கிய பிர்ஸா முண்டா திருமணம் செய்துகொள்ளாமல். அதிகாரத்திற்கு எதிராக பழங்குடி மக்களின் விடுதலைக்காக போராட்டம் நடத்தி தனது 25 வயதில் மரணம் அடைந்தார். இவரின் போராட்டங்கள் எதுவும் இந்திய விடுதலை போராட்டம் என்ற அடிப்படையில் பேசப்படவில்லை. அதற்கு காரணம் அன்று, ஒருங்கிணைந்த நாடாக இந்தியா இல்லை. ஆனால் அதன் பின் வந்த நம் இந்திய விடுதலை போராட்ட தலைவர்களும் வீரர்களும் பிர்ஸாவை முன் உதாரணமாக எடுத்து பேசினர். அதன் பின் அவரின் செயல்பாடுகள் குறித்து பொதுவெளியில் அதிகம் பேசப்பட்டது.

பழங்குடியினரின் நிலத்தை யாரும் அவர்களிடம் இருந்து அபகரிக்கக்கூடாது என்று பிரிடிஷ் அரசை எதிர்த்தும், அதேபோல் பழங்குடியினருக்கும் சமூகத்தில் அனைத்துவிதமான உரிமைகளும் இருக்கிறது என்றும் பேசினார். இந்த இரண்டு இலக்குகள்தான் இவரின் போராட்டத்தில் முன்னின்றவை. இயக்குனர் பா. ரஞ்சித்தின் பட அறிவிப்பு வருவதற்கு முன்பே வட இந்தியாவில் பிர்ஸாவைப் பற்றியும் அவரின் போராட்டங்களைப் பற்றியும் மக்கள் மத்தியில் அறியப்பட்டது. ஆனால், இப்போது அவரின் வாழ்க்கை வரலாறு படமாக மாறும்போது பிர்ஸா முண்டா இந்தியா முழுக்க அறியப்படுவார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT