ADVERTISEMENT

மாணவிகளின் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்? - கவிஞர் சாம்பவி சங்கர்

03:47 PM Jun 01, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

கவிஞர் சாம்பவி சங்கர்

ADVERTISEMENT


கல்வி நிலையங்களில் இருந்து பாலியல் புகார்கள் தொடர்ந்து வருவது என்பது மிகவும் ஆபத்தான அறிகுறியாகும். இதை இனியும் சகித்துக்கொண்டிருந்தால், இப்போதயை கரோனா தொற்றைவிடவும் மோசமான தொற்று நோயாய் இது உருவெடுக்கலாம். அதனால், எந்தவித தயக்கமும் இல்லாமல், இந்த நோய்க்கான கிருமிகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் அடையாளம் கண்டு, அரசாங்கம் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இப்படியொரு மோசமான சூழல் ஏன் அதிகரிக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது. புனிதமான கல்வி நிலையங்களில் பெரும்பாலானவை, இன்று கட்டணக் கொள்ளைக் கூடங்களாகவும், மாணவர்களைக் கசக்கிப் பிழியும் ஆலைகளாகவும் மாறிவிட்டன. அதிகக் கட்டணத்தைப் பெற்றோர்களிடமிருந்து வசூலிக்கும் இப்படிப்பட்ட கல்வி நிறுவங்களைச் சிறந்த கல்வி நிலையங்களாக எண்ணுகிற மனோபாவம் பலருக்கும் வந்ததால்தான் அத்துமீறல்களும் அடாவடிகளும் பெருகிவருகின்றன.

சில பண முதலைகள் தங்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் நோக்கத்தில், கல்வியில் முதலீடைப் போட்டு, அதை வருமானம் கொழிக்கும் தொழிலாக எப்போது மாற்றத் தொடங்கினார்களோ, அப்போதே, கல்வித்துறை சீர்கெட ஆரம்பித்துவிட்டது. இத்தகைய கல்வி நிறுவனங்கள் அன்றாடம் அரங்கேற்றும் அத்துமீறல்கள், அவர்களின் ஆடம்பரங்களாலும் விளம்பரங்களாலும் மறைக்கப்படுகின்றன.

சாதாரண கல்வி நிறுவனங்களில் படித்தால், தங்கள் பிள்ளைகளுக்கு எதிர்காலம் இருக்காதோ என்று அஞ்சுகிற சில பெற்றோர், தங்கள் ’நகை நட்டை விற்றும், கடனை உடனை’ மேல்மட்டக் கல்வி நிறுவனங்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கின்றனர். அப்படிச் சேர்த்துவிட்டு, அந்தப் பிள்ளைகளின் கல்வி குறித்த சந்தேகங்களைக் கேட்கக் கூட, அங்கே எளிதில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ஏனென்றால் அந்த நிறுவனங்களின் இரும்புக்கேட்டைத் தாண்டுவதற்கே, விசா எடுக்காத குறையாய் போராட வேண்டும். அப்படியே போராடி உள்ளே சென்றாலும், அங்கிருக்கும் நிர்வாகிகள், பெற்றோர்களை மிகவும் அலட்சியப்படுத்தியும், நுனி நாக்கு ஆங்கிலத்தால் இழிவுபடுத்தியும் துரத்தியடித்துவிடுவார்கள். இதற்கு பயந்தே பெரும்பாலான பெற்றோர்கள், பிள்ளைகளை அங்கே சேர்த்துவிட்டு, அந்தப் பக்கம் தலைகாட்டுவதைத் தவிர்த்துவிடுகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழல்கள்தான், பிள்ளைகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறி ஆக்குகின்றன. அங்கே பிள்ளைகளுக்கு என்ன மாதிரியாக டார்சர் நடந்தாலும் பெற்றோர்களுக்கு உடனடியாகத் தெரிவதில்லை. பிள்ளைகளும் பயத்தில் எதையும் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். எனவே, பள்ளிகளின் மூடு மந்திர சூழ்நிலையை முதலில் மாற்றியாக வேண்டும். கூலி வேலை செய்தாவது பிள்ளைகளை ஆங்கிலவழிக் கல்வியில் படிக்க வைக்கிறோம் என்று அப்பாவித்தனமாக மகிழும் பெற்றோரின் தற்பெருமை போக்கும், இதுபோன்ற கல்விக் கொள்ளை நிறுவனங்களுக்கு சாமரம் வீசுவதாக அமைந்துவிடுகிறது.

10 ரூபாய்க்கு வாங்கும் தக்காளியை, பத்து கடை ஏறி இறங்கி, பார்த்துப் பார்த்து வாங்கும் மக்கள், 5 லட்சம் 10 லட்சம் 20 லட்சம் என்று கொட்டிக்கொடுத்து, தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள், அந்தக் கல்வி நிறுவனங்களின் தரத்தைக் கவனிப்பதில்லை. அதன் கண்ணியத்தை எடைபோடுவதில்லை. அங்கே நடக்கும் அராஜகங்களைக் கண்காணிப்பதில்லை. படிக்க வந்த பிள்ளைகளை தங்களிடம் சிக்கிக்கொண்ட அடிமைகளைப் போலக் கருதி, கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்களைக் கசக்கிப் பிழிந்து, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்து இவ்வகைக் கல்வி நிறுவனங்கள் மகிழ்சி அடைகின்றன என்பதுதான் பெருங்கொடுமை.

அதிலும் ஒருசில கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான வன்கொடுமைகளும் அரங்கேறிவருவது வெட்கக் கேடானது. பிள்ளைகளின் பயத்தையும் பணிவையும் சாதகமாக்கிக்கொள்கிற சில ஓநாய்கள், ஆசிரியர்கள் என்ற போர்வையில் தங்களின் மன அரிப்பைத் தீர்த்துக்கொள்ள முயல்வது, கொடுமையிலும் கொடுமையாகும். இதுபோன்ற பதறவைக்கும் புகார்கள் இப்போது அதிகமாக எழுவதைப் பார்க்கும்போது, நம் சமூகம் நாகரிக சமூகம்தானா? என்ற கேள்வி தானாய் எழுகிறது. இந்தக் கொடுமையில், இப்படிப்பட்ட சூழலுக்குக் காரணம் நிர்வாகமா? மாணவிகளா? பெற்றோர்களா? என்று ஊடகங்களில் அமர்ந்து விவாதம் வேறு நடத்திக்கொண்டிருக்கிறோம். 400 ரூபாய் கூலி கொடுக்கிற கொத்தனாரை வேலை வாங்குவதற்கே மேஸ்திரி, மேற்பார்வையாளர், என்ஜினியர் என்று பலர் இருக்கிறார்கள். வெறும் கல்லையும், மண்ணையும் வைத்து வேலை செய்வதிலேயே இவ்வளவு கவனிப்பையும் கண்காணிப்பையும் குவிக்கிற நம்மவர்கள், தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியையோ, அதன் நிர்வாகத்தையோ ஆசிரியர்களையோ கண்காணிப்பதில்லை.

அதேபோல், எப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் மாணவர்களை வகுப்பில் ஒப்படைக்கிறோம். அவர்கள் ஒழுங்காகப் பாடம் நடத்துகிறார்களா? மாணவர்களைப் பண்பாக நடத்துகிறார்களா? இல்லை கண்ணியக் குறைவாக நடத்துகிறார்களா? என்று அந்தக் கல்வி நிறுவனங்களும் கவனிப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை கல்லாப்பெட்டி நிறைந்தால் போதும். கெடிபிடி காட்டி, ஒரு ராணுவத்தைப்போல் தங்கள் கல்வி வளாகத்தை நடத்தி, அதில் ஒரு திமிரான சுகத்தையும் அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

"ஆசிரியர்கள் விதைநெல் போன்றவர்கள்" என்று ஒருமுறை பெருந்தலைவர் காமராசர் குறிப்பிட்டார். அப்படிப்பட்ட விதை நெல்லே பதரானால், விளைச்சல் எப்படி இருக்கும்? தங்கள் பள்ளியில் அப்படிப்பட்ட வக்கிர ஓநாய்கள் இருப்பதாகத் தெரிந்தால், அவர்களை அந்த நிறுவனம் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டாமா? குற்றங்களை மூடி மறைப்பது என்பது, அதை விதைத்து பல மடங்கு குற்ற விளைச்சலை உருவாக்குவதற்குச் சமம். தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் தெரியாத சில கேடுகெட்ட ஆசிரியர்களின் செயல்களால் பல நல்ல ஆசிரியர்கள் வெட்கி தலைகுனிகிறார்கள்.

இப்படிப்பட்ட மாணவிகளுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

* ஒவ்வொரு பள்ளியிலும், தங்களுக்கு சங்கடம் நேரும்போது அதுகுறித்த புகாரைச் சொல்ல, பெண் ஆசிரியைகள் அடங்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும்.

* பாதிக்கப்படும் மாணவிகள் புகார் தெரிவிக்க மாவட்டக் கல்வி அதிகாரியின் தொடர்பு எண்ணையும், காவல்துறை எண்ணையும் பள்ளியில் பொறித்துவைக்க வேண்டும். அதேபோல் பள்ளி நிர்வாகம் புகார் பெட்டிகளையும் வைக்க வேண்டும்.

* வாரத்திற்கு ஒருமுறையாவது மாணவிகளுடன் பள்ளி நிர்வாகிகள் கலந்துரையாடி, அவர்களின் குறைகளையும் சந்தேகங்களையும் கேட்க வேண்டும்.

* ஆண்கள் வகுப்புகளில் மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்களையும், மாணவிகளுக்குப் பெண் ஆசிரியைகளையும் நியமிக்க வேண்டும். அதிலும் மாலை 6 மணிக்குமேல் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதையும் தடுக்க வேண்டும். அதேபோல் இந்த வகுப்புகளும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

* மோசமாக நடந்துகொள்ளும் ஆசிரியர்கள், பகிரங்கமாக விசாரிக்கப்பட வேண்டும். தவறு உறுதியாகும் நிலையில் அவர்களுக்குக் கொஞ்சமும் சலுகை காட்டாமல், பள்ளி நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கும் தகவல் கொடுக்க வேண்டும்.

* தன்னார்வ அமைப்பினர் மாதம் ஒருமுறை பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடும் நிகழ்சிகளை ஏற்பாடு செய்வதோடு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அடிக்கடி நடத்தவேண்டும்.

* மாணவிகளைச் சுற்றி பெண் ஆசிரியர்கள் பாதுகாப்பு வளையமாக எப்பொழுதும் தோழிகள் போல நெருங்கிப் பழக வேண்டும். அப்போதுதான் மாணவிகள் தங்கள் குறைகளை நம்பிக்கையோடு பகிர்ந்துகொள்வார்கள். எனவே ஆசிரியைகளுக்கும் மாணவிகளுக்கும் இடையிலான நட்புறவு வலுப்பட வேண்டும்.

* ஆசிரியர்கள் மாணவிகளின் கல்விக்கு வழிகாட்டுகிறவர்களே தவிர, மாணவ மாணவிகளை அடக்கியாளும் எஜமானர்கள் அல்ல என்பதை, அவர்களுக்குப் புரியவைத்து தைரியமாக தவறுகளைத் தட்டிக்கேட்கும் மனப்பான்மையை அவர்களிடம் வளர்க்க வேண்டும்.

* கல்வி நிலையங்களின் ஒழுக்கத்தை சமூக ஆர்வலர்கள் கண்காணிக்க வேண்டும்.

* கல்வி நிலையம் என்பது என்பது சமுதாய வளர்ச்சியின் அஸ்திவாரம். வெறும் கட்டடங்களும், பாடப் புத்தகங்களும் மட்டுமே பள்ளிக்கூடம் அல்ல. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள். இந்த மூவரின் சங்கமம்தான் பள்ளிக்கூடங்களின் உயிர் நாடி என்பதை சமுதாயம் எல்லோருமே உணர வேண்டும். அவரவர்களுக்கான கடமைகளை உணர்ந்து அவரவரும் செயல்பட்டால், சமுதாயத்தின் அஸ்திவாரம் மிகமிக பலமானதாக அமையும். மாணவ மாணவிகளுக்கான அச்சமற்ற உலகமாக, கல்வி நிலையங்கள் மாறினாலேயே பெரும்பாலான குற்றங்கள் குறைந்துவிடும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT