/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/students43434_0.jpg)
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், மழையூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிணி தணிக்கையியல் என்ற புதிய பாடப்பிரிவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அரங்கசாமி, கல்வித்துறை அனுமதி கேட்டுள்ளார். ஆனால் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதால், புதிய பாடப்பிரிவிற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்து கொள்வதாக அனுமதி பெற்று சுமார் 40 மாணவ, மாணவிகளைச் சேர்த்துள்ளார்.
ஆனால் பள்ளி தொடங்கி, ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை கணக்குப் பதிவியல், தணிக்கையியல், வணிகவியல் பாடங்களுக்கு ஆசிரியர் நியமனம் செய்யாததால், பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவரகம் வந்து ஆசிரியர் இல்லாததால் பாடம் நடத்தவில்லை. அதனால் எங்களால் பொதுத் தேர்வு எழுதுவதில் சிரமம் உள்ளதாக மனுக் கொடுத்தனர்.
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, மாணவர்களை அனுப்பி வைத்தார். தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தியிடம், இது குறித்து தகவல் கொடுத்து உடனடியாக மாற்றுப் பணியில் ஆசிரியர் நியமனம் செய்ய உத்தரவிட்டனர். இந்த உத்தரவையடுத்து இரண்டு ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்கின்றனர்.
மனுக் கொடுத்த மாணவர்களும், பெற்றோர்களும் கூறும் போது, "அரசு ஆசிரியர் நியமனம் தாமதமாகும் என்பதால் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். அவர்களுக்கு மாத சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி ஒவ்வொரு மாணவரிடமும் தலா ரூபாய் 250 வீதம் சுமார் 40 மாணவ, மாணவிகளிடம் வசூல் செய்தார். ஆனால் இதுவரை ஆசிரியர் நியமனம் செய்யவில்லை என்று கேட்ட போது, வணிகவியல் படித்தவர்கள் யாரும் இல்லை. உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் அழைத்து வாருங்கள் என்று மாணவர்களிடமே கூறினார் தலைமை ஆசிரியர் அரங்கசாமி. அதனால் தான் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தோம்.
மேலும் முனனாள் மாணவர்கள் ஏதேனும் சான்றிதழில் கையெழுத்துப் பெற வந்தாலும், அதற்கென தனி வசூல் செய்கிறார். மாணவிகளுக்கான கழிவறையை திறந்துவிடாமல் மூடியே கிடப்பதால் மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள் என்றனர்.
புகார் கொடுத்த மாணவர்களிடம் விசாரித்த கல்வித்துறை அதிகாரிகள் கூறும் போது, "பள்ளித் தொடங்கி 5 மாதமாக ஆசிரியர் இல்லை என்பதைத் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் மாணவர்கள் நலனில் அக்கரையின்றி செயல்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் அரங்கசாமி (வயது 58) என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளோம். மேலும் மாணவர்களைத் தேர்வுக்கு தயார்படுத்த மாற்றுப் பணியில் இரண்டு ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் உள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)