ADVERTISEMENT

‘ராஜேந்திர பாலாஜியை விடவே மாட்டோம்!’ - தேர்தல் ஜுரத்தில் விருதுநகர் மாவட்ட தி.மு.க. - அ.தி.மு.க.!

03:44 PM Nov 24, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டத்தில், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில், ஆரம்பத்திலேயே அ.தி.மு.க பாய்ச்சல் காட்டுகிறது. வாக்குச்சாவடி நிலை முகவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், கவரில் வைத்து அ.தி.மு.க தருவது ரூ.2,000 என்றால், தி.மு.க கொடுப்பது ரூ.500 மட்டுமே. நிதானமாகவே தி.மு.க காய் நகர்த்துகிறது. கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கும், தங்கம் தென்னரசுவுக்கும் தரப்பட்டுள்ள முக்கிய அஜென்டா ‘கே.டி.ராஜேந்திரபாலாஜி எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவரைத் தோற்கடித்தே ஆகவேண்டும்’ என்பதுதான்.

ADVERTISEMENT


‘கே.டி.ராஜேந்திரபாலாஜி தொகுதி மாறுவாரா?’ என்பதை ‘ஸ்மெல்’ செய்தபடியே இருக்கும் தி.மு.க தரப்பிடமிருந்தும், அ.தி.மு.க வட்டாரத்திலிருந்தும், மாவட்ட அளவில் சில தகவல்களைப் பெற முடிந்தது.


அ.தி.மு.க. உள்ளடி கிலி!


சிவகாசி தொகுதி, 1957 முதல் 2016 வரையிலும் 14 முறை சட்டமன்றத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது. 1971-ல் கா.காளிமுத்து, 1989-ல் பெ.சீனிவாசன் என, இரண்டு முறை மட்டுமே தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். அ.தி.மு.க.வோ, 5 முறை வெற்றி பெற்றுள்ளது. அதனால், இத்தொகுதியில் நேரடியாகப் போட்டியிடுவதைத் தவிர்த்து, கூட்டணிக் கட்சிகளுக்குத் தள்ளிவிடுவதே, தி.மு.க.வுக்கு வாடிக்கையானது. 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களின் மூலம், இத்தொகுதி தொடர்ந்து இரண்டு முறை, ராஜேந்திரபாலாஜியை சட்டமன்றத்துக்கு அனுப்பியுள்ளது. இதற்குமுன், சிவகாசி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்களில் யாரும் தமிழக அமைச்சரவையில் இடம்பெறாத நிலையில், தொடர்ந்து இரண்டு முறை, ராஜேந்திரபாலாஜி அமைச்சராக இருந்து வருகிறார்.


ராஜேந்திரபாலாஜி கூறுவதுபோல், ஒட்டுமொத்த விருதுநகர் மாவட்டமும், குறிப்பாக சிவகாசி தொகுதியும், அ.தி.மு.க ஆட்சி காலத்தில் திட்டங்களின் மூலம் அடைந்த பலன்களின் பட்டியல் நீள்கிறது. இத்தொகுதியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாக்கு வங்கியில்லாத விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த ராஜேந்திரபாலாஜி, அரசியல் மேடையிலும் ஆன்மிகவாதியாகவே தன்னை வெளிப்படுத்தி வருகிறார். அதனால், சகல ஜாதியினரையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த இந்துக்களின் வாக்குகளைக் கவர்ந்துவிட முடியும் என்று திடமாக நம்புகிறார். அதே நேரத்தில், தேவாலயங்ளுக்கும், மசூதிகளுக்கும் அவ்வப்போது சென்று, கிறிஸ்தவ, இஸ்லாமியர்களிடமும் நல்லுறவைப் பேணி வருகிறார். தனிப்பட்ட முறையில், கட்சிப் பாகுபாடின்றி பொதுமக்களுக்கு வாரி வழங்குவதால், வள்ளலாகவும் பார்க்கப்படுகிறார். ஆக, சகலவிதத்திலும் பாதுகாப்பான தொகுதியாக சிவகாசி இருந்தாலும், முன்னாள் அ.தி.மு.க எம்.பி ராதாகிருஷ்ணன் போன்றவர்களின் சாதி ரீதியிலான உள்ளடி, கிலி ஏற்படுத்துவதாகவே உள்ளது. இந்த உள்ளடி, கடந்த உள்ளாட்சி தேர்தலின்போதே அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தி, ஒன்றியத்தை தி.மு.க.வுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது.


மகனுக்காக ‘ரிஸ்க்’ எடுக்கிறாரா வைகோ?

வைகோ

சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தபோது, மூன்று முறை ம.தி.மு.க வெற்றி பெற்றது. இரண்டு முறை, எம்.பி ஆனார் வைகோ. தனக்கு மிகவும் பரிச்சயமான சட்டமன்றத் தொகுதி சிவகாசி என்பதால், தன் மகன் துரை வையாபுரி, தி.மு.க கூட்டணி வேட்பாளராக, இத்தொகுதியில் போட்டியிட வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டுவதாக, தி.மு.க தரப்பு சொல்கிறது. அதே நேரத்தில், சாத்தூர் தொகுதியும், அவரது விருப்பப் பட்டியலில் உள்ளதாம். ஏனென்றால், 2016 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிட்ட ம.தி.மு.க வேட்பாளர் ரகுராமனால், 25,000-க்கும் மேற்பட்ட வாக்குகளைக் கவர்ந்து, மூன்றாவது இடத்துக்கு வரமுடிந்தது. அதனால், துரை வையாபுரிக்கு பாதுகாப்பான தொகுதியாக சாத்தூரை நினைக்கிறாராம்.

துரை வையாபுரி

சாத்தூரில் 2016-ல் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட சீனிவாசன், 4,427 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 2019-ல் சாத்தூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், அதே சீனிவாசன் 1,101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். மூன்றாவது முறையும், தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டால், வெற்றி நிச்சயம் என்பது சீனிவாசனின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், பணபலம் உள்ளவர் என்பதால், சாத்தூரில் தனக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில், விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளுக்குத் தேர்தல் செலவு செய்வதற்கும், அவர் தயாராகவே இருக்கிறார். அதனால், சாத்தூர் தொகுதியை, தி.மு.க ஒருபோதும் ம.தி.மு.க.வுக்கு விட்டுக்கொடுக்காது என்று பேசப்படுகிறது.


அப்படியென்றால், நாயுடு வாக்குகள் கணிசமாக உள்ள சிவகாசியில், துரை வையாபுரியை கே.டி.ராஜேந்திர பாலாஜியோடு மோதவிடுவதுதானே? தி.மு.க தரப்போ ‘இரட்டை இலை வாக்கு வங்கி அதிகமாக உள்ள தொகுதி இது. கே.டி.ராஜேந்திரபாலாஜியும் பணத்தை இறைத்து வாக்குகளைக் கவர்ந்துவிடுவார். முதன் முதலில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் துரை வையாபுரி எதற்காக இத்தனை ரிஸ்க் எடுக்க வேண்டும்? விளாத்திகுளத்திலோ, கோவில்பட்டியிலோ போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும்.’ என்று வைகோ தரப்பை ‘கன்வின்ஸ்’ செய்தபடியே இருக்கிறதாம்.


தொகுதி மாறுகிறாரா ராஜேந்திரபாலாஜி?

கோகுலம் தங்கராஜ்

‘சிவகாசியில் தன்னுடன் யாரை மோதவிட்டு என்ன நடத்தப் போகிறார்களோ?’ என்னும் தவிப்பில் உள்ளாராம் ராஜேந்திரபாலாஜி, விருதுநகரிலோ, ராஜபாளையத்திலோ, தொகுதி மாறி போட்டியிடுவதில் உள்ள சாதக, பாதகங்களை அலசி வருகிறார். எப்படியும் தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக விருதுநகரில் போட்டியிடுவது, காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராஜா சொக்கராகத்தான் இருக்கும். அவரென்றால், கடந்த முறை போல, ‘ஏப்பம் விட்டுவிடலாம்’ என்று நினைக்கவும் செய்கிறார், ராஜேந்திரபாலாஜி. விருதுநகரில் ‘இலவு காத்த கிளி’ போல, கரோனா காலத்தில் தொகுதி மக்களை வெகுவாகக் கவனித்த கோகுலம் தங்கராஜ், ‘அ.தி.மு.க. சீட் எனக்கே’ என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். ராஜேந்திரபாலாஜி அவரிடம், ‘உங்கள் மனைவிக்குத்தான் விருதுநகர் முனிசிபாலிட்டி சேர்மன் சீட்’ என்று உத்தரவாதம் தந்து ‘கூல்’ செய்திருக்கிறார். பொது நிகழ்ச்சிகளில் அமைச்சருடனே காணப்படும் எஸ்.எஸ்.கதிரவன், ‘பழம் நழுவிப் பாலில் விழாதா?’ என்ற எதிர்பார்ப்புடன், ‘விருதுநகருக்கு நானே எம்.எல்.ஏ.’ என்ற கனவில் மிதக்கிறார்.


எனக்கு ஒண்ணு; மகனுக்கு ஒண்ணு! – அண்ணாச்சி அப்படித்தான்!

கே.கே.எஸ்.எஸ்.ஆர்

விருதுநகர் தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தேர்தலில் தன்னுடைய வாரிசு ரமேஷை. அருப்புக்கோட்டை வேட்பாளராகக் களமிறக்கினால் என்னவென்று சிந்தித்து வருவதாகப் பேச்சு கிளம்ப, அந்தத் தொகுதி தி.மு.க.வினர் ‘அண்ணாச்சி லெவல் தெரியாம யாரோ கிளப்பிவிடறாங்க. எனக்கு ஒண்ணு; என் மகனுக்கு ஒண்ணுன்னு சீட் வாங்க நினைப்பாரே தவிர, அவராவது போட்டியிடாமல் ஒதுங்கிப் போவதாவது. அதுவும் ரமேஷ் அ.தி.மு.க.வுக்கு தாவிவிட்டு வந்தவர். அவருக்கு எப்படி தி.மு.க. தலைமை சீட் கொடுக்கும்?’ எனக் கேட்கின்றனர்.

ரவிச்சந்திரன்

புதிதாக, அ.தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆகியிருக்கும் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி ரவிச்சந்திரனை, முக்குலத்தோர் வாக்குகள் அதிகமாக உள்ள திருச்சுழியில் போட்டியிட வைத்து, தங்கம் தென்னரசுவுக்கு ‘டஃப்’ கொடுக்கலாம்..’ என்னும் சிந்தனை அ.தி.மு.க தரப்பிடம் துளிர்த்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இப்போதே ‘தேர்தல் ஜுரம்’ வந்துவிட்டது!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT