ADVERTISEMENT

"நான் மட்டும்தானே பேசிக் கொண்டிருக்கிறேன்; ஏன் வசந்திகள் பேசுவதில்லை?" - பிரபஞ்சனின் பார்வையில் காதல்!

08:24 PM Feb 13, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


ரோஜா பழுத்தால் அந்தப் பழம் எவ்வாறு இருக்கும், சரக்கொன்றை, ஒவ்வொரு கொத்தும் ஒவ்வொரு வண்ணமாயிருந்தால் எப்படி இருக்கும், பாலத்து அரச மரத்து மோகினிப் பிசாசு வீடு வரைக்கும் உடன் வருவாளாமே, ஏன் ஒருநாள் கூடப் பேசுவதில்லை போன்ற கேள்விகளால் நான் நிரம்பி இருந்த பருவம் அது. மதியம் உணவுக்கடுத்த வகுப்பு. பேராசிரியர் இன்னும் வந்து சேரவில்லை. எங்களுக்கடுத்த, இடைவெளி விட்டுப் போடப்பட்டிருந்த மேசை மேல் சாய்ந்து, கனகமணி தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தாள். அப்படியான பாவனையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். அந்த பாவனை, சண்முகத் துக்குக் கலக உணர்வைத் தோற்றுவித்துவிட்டது.

ADVERTISEMENT

"கனகமணி, சைவ சித்தாந்தமா படிக்கிறாய்?'' என்றான்.

தலையில் பல்லி விழுந்தாற்போலத் திடுக்கிட்டுத் தன் ஆடையைச் சரி பண்ணிக்கொண்டு, புத்தகத்துக்குள் ஆழ்ந்தாள். அது அவனை மேலும் உசுப்பி விட்டது.

"சித்தாந்தம் படிக்கிற வயதா உனக்கு? எதை எதையோ படிக்கிறாய், என்னை ஏன் படிக்க மறுக்கிறாய்''

அவள் திரும்பி தன் மூன்றாம் விழியால் நோக்கினாள்.

"கலிங்கத்துப் பரணியை எடு, கண்ணே. அதில் கடை திறப்பு படி.''

இந்த நாடகத்துக்குள் நான் எந்தப் பாத்திரமும் வகிக்கவில்லை. துரதிருஷ்டவசமாக, நான் கலிங்கத்துப் பரணியில் பேய்கள் சமையல் செய்யும் பகுதியில் இருந்தேன். சடாரென என் புத்தகத்தைப் பிடுங்கி, அவள் முன் வைத்த சண்முகம், "சிதறிக் கிடக்கும் எழுத்துக்களைக் கூட்டி வெளியே எறியாதே. அவை எழுத்துக்கள் அல்ல, என் இதய நொறுங்கல்கள்'' என்றவன், அத்தோடு நிறுத்திக் கொண் டிருந்தால் பரவாயில்லை. எதுகை மோனை ரசாயனத் தில் கிளறப்பட்டு, "என் ரத்தினமே'' என்றும் சேர்த் துக் கொண்டான்.

கனகமணி, அந்த என் புத்தகத்தை எடுத்துக்கொண்டு முதல்வர் அறைக்கு, ஏறக் குறைய ஓடினாள். அதில் முதல் பக்கத்தில் என் பெயர் இருந்தது.

கிஷ்டன் கடையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தேன். திடுமென பூமி பிளந்து வந்தவள் போல என் முன் நின்றாள் வசந்தி. "எத்தனை நாள் சஸ்பென்ட்?'' என் றாள். "ஒருவாரம் என்றேன்''. அவள் சிரித்தாள். அந்த மாதிரி ஓட்டை உடைசல் டீக்கடையில் டீ குடிப் பாளா என்று எண்ணியபடி, "டீ சாப்பிடறீங்களா?'' என்றேன். ஆச்சரியம். 'உம்' என்றாள். அவளுக்கு 'ஸ்பெஷல்' டீயாகப் போட்டுக் கொடுத்தான் கிஷ்டன். அதுபோல ரம்யமான டீயை அவன் கடையில் நான் சாப்பிட்டதில்லை.

யானை கட்டித் தெருவில் இருந்த அவள் விடுதிக்கு சேர்ந்து நடந்தோம். முதல் அனுபவம். என் கால்கள் தரையிலிருந்து ஒரு அடி உயர்ந்து நடந்தன.

"கனகமணி, இதை பிரின்ஸ்பல் வரைக்கும் கொண்டு சென்றிருக்க வேண்டியதில்லை. நான் அவளிடம் சொன்னேன். சம்பந்தமில்லாமல் நீங்கள் வேறு மாட்டிக் கொண்டீர்கள்''.

போதும். அது போதுமானதாக இருந்தது...

வசந்தியின் நாள் அலுவல் எனக்கு அத்துபடி. ஐந்து மணிக்கு அலாரம் இல்லாமல் எழல். ஆறு வரையும் அறைக்குள் பாட்டுப் பயிற்சி. ஆறு முதல் எட்டு வரைக்கும் மொட்டை மாடியில் நடந்து கொண்டு வாசித்தல். (சரியாக ஆறுக்கும் ஆறரைக்கும் இடையே நான் அந்தத் தெரு வழியாக ஆற்றுக்கு நடப்பேன்...) அப்புறம் குளியல், புறப்பாடு. ஒன்பது இருபதுக்கு ராமையர் கிளப்பைக் கடத்தல்... இத்யாதி. எனக்குப் பூரணி பிடித்திருந்தாள். அப்போது நான் அரவிந்தன். அப்புறம் யமுனா. நான்தான் பாபு. அவ்வப்போது கனவில் வந்து, படகோட்டிக் கொண்டே 'முல்லை மலர் மேலே' பாடும் பத்மினி. எல்லாரின் கூட்டுக் கலவையென வசந்தி. அப்போது நினைவில் என் பிம்பம் ராஜேந்திரசோழன். அப்பா ராஜராஜனைப் பகைத்துக் கொண்டு தனியாக வேறு ஊரையே நிறுவி, தனியாகப் பெரிய கோயிலைத் தோற்கடிக்கும் கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில் கட்டும் கோபக்கார இளவரசன். என் அப்பாவின் மேல் அந்தக் காலத்தில் எனக்கிருந்த கோபத்துக்கு இந்த பிம்பமும், அப்பா அறியாத என் பட்டமகிஷித் தேர்வும் எனக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சியைத் தந்தது.

ஆண், பெண் என்பதெல்லாம் வெறும் தோற்றம் மாத்திரம்தான். இதை உணரும் ஞானமே, காதல். காதல், அவஸ்தை இல்லை. அவஸ்தையிலிருந்து விடுபடல் காதல். மனித வாழ்வின் தாத்பர்யம், சுதந்திரம் என்றால், காதல் சுதந்திரத்துக்கான பத்தாம்படி. மறைத்து வைக்கப்பட்ட ரகசியச் சிறகுகளை மனிதர்களுக்கு வழங்குகிறது காதல்.

கோடை விடுமுறைக்குப் பிறகு கல்லூரி தொடங்கியது. அடுத்த வாரம்தான் வசந்தி கல்லூரி திரும்பினாள். அவள் மிகவும் மாறுபட்டிருந்தாள். தோற்றம், முகம் எல்லாம். ஏதோ பெரிய அதிர்ஷ்டச் செய்தி இருக்க வேண்டும் என்று நான் அவதானித்தேன். விடுமுறையில் அவள் எழுதிய சில கடிதங்களில், இதற்கான முன் உரைகள் இருப்பதாக நான் உணர்ந்தேன். ஒரு மாலை, அவள் சொன்னாள். கிருஷ்ணமூர்த்தி என்னும் சினேகிதன் அவளுக்கு இருப்பதாகவும், அவனை அவள் விரும்புகிறாள் என்றும், அவர்கள் உறவு, அவர்கள் வீட்டுக்கு உடன்பாடு இல்லை என்றும் பலப்பல விஷயங்கள்.

அவள், தின்பதற்கு முடியாத வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள். அச்சொற்களை என் காதுகளில் சேர்க்காது. எங்கிருந்தோ வந்த கடுங்காற்று, அவற்றைச் சரளைக் கற்களாகப் பாதை ஓரத்தில் விசிறிப் போட்டது. உலகம் நின்று போய்விட்டது. இது தவறு. உலகம் யாருக்காகவும் நின்று போவதில்லை. அன்று இரவு மட்டும், நிதானமாக நகர்ந்ததாக எனக்குத் தோன்றியது. இரவுகளுக்கு உரிய சத்தத்தையும், வாசனையையும் அன்றுதான் நான் பரிபூரணமாக உணர்ந்தேன். கருத்து, இருண்டிருந்த இரவு, கொஞ்சம் கொஞ்சமாக விடியத் தொடங்கியது. வெளிச்சம் வந்தது. எல்லா இரவுகளும் விடியத்தான் செய்கின்றன.

விடியும்போதே நான் தெளிவை அடைந்தேன்.

காதல், நட்பு, உறவு என்பது ஒற்றைப் பரிமாணம் உள்ள பொருள் அல்லவோ. அவளை நான் நேசிப்பதை ஏன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த சில மாதங்களிலே கிருஷ்ணமூர்த்தியை எனக்கு அவள் அறிமுகம் செய்து வைத்தாள். எந்தச் சங்கடமும் எனக்கு இல்லை. மனப்பூர்வமாக அவரை நான் வரவேற்று வாழ்த்தினேன். மாலைகளில் சேர்ந்து நடந்தோம். ஊர் சுற்றினோம். பனி பெய்த இரவுகளில் நனைந்தோம். அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு நான் போனேன். அவரும் என்னுடன் பல இரவுகள் தங்கினார். அவள் பல இரவுகளில் எங்களுக்குப் பாடினாள்.

அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் வசந்தியின் அப்பா வந்திருந்தார். வசந்தி எட்டாம் மாதம் என்று சொல்லிக் கொண்டார்கள். "தவிர்க்க முடியலை. எல்லாம் அவசரம் அவசரமாக நடந்து விட்டது. எழுதுகிறேன்'' என்று மட்டும், பெட்டி படுக்கையோடு பேருந்தில் ஏறும்போது வசந்தி சொன்னாள். அப்பா, யாருடனும் எதுவும் பேச முடியாத துயரத்தில் இருந்தது தெரிந்தது.

எனக்கு எதுவும் பிரச்னையாக இல்லை. வசந்தி படிப்பை முடிக்காமல் போகிறாளே என்பதுதான் என் கவலையாக இருந்தது. அதுவும் விரைவில் தீர்ந்து, படித்து, ஒரு தமிழாசிரியையாக, பட்டதாரியாக, விரிவுரையாளராக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தாள். அவள் பணியாற்றும் கல்லூரியின் தமிழ் மன்றத்துக்குப் பேச அழைத்தாள். சென்று வந்தேன்.


வசந்தியின் வகுப்புகள், சுவைகள், பிடிக்கும் ராகங்கள், படிக்கும் எழுத்தாளர்கள், சங்க இலக்கியத்தில் அவள் புலமை, பிடித்த வர்ணங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். என்னைப் பற்றியும் அவள் அறிவாள். போன ஆண்டு, ஒரு மழை நாளின்போது, ராமநாதனின் சகானாவைக் கேட்க நேர்ந்தது. தவிர்க்க முடியாது, அவள் நினைவு அதிகம் என்னைக் கிளர்த்தியது. தொலைபேசியில் அவளை அழைத்தேன். "என்ன விஷயம்?'' என்றாள். சொன்னேன். சற்று மவுனமாக இருந்துவிட்டுச் சொன்னாள். "நம்பமாட்டே... இப்போ, அஞ்சு நிமிஷத்துக்கு முன்னால் உன்னை நினைச்சேன். நம்பியகப் பொருளைப் படிக்க வேண்டி இருந்தது. புத்தகத்தை எடுத்து இப்போதான் தேவைப்பட்ட பகுதியை முடித்தேன். அது, நீ கொடுத்த புத்தகம்'' என்றாள்.

மரம், காற்று, தெரு, வீடு, தென்றல், சென்னை வெயில் எல்லாம் எங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன. ஒரு வருத்தம்.

எங்கள் அனுபவத்தை நான் மட்டும்தானே பேசிக் கொண்டிருக்கிறேன். ஏன் வசந்திகள் பேசுவதில்லை. யார் இன்னும் தடையாக இருப்பது? இன்னும் எத்தனை காலம்தான் நினைவுகள் ஆண்கள் மயமாக இருப்பது? சத்தியம். பெண்கள் பேசும்போது தான் முழுமையடையும் என்று நான் நம்புகிறேன்.

-மு. மாறன்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT