Skip to main content

"பயப்படாத... உனக்காக நானிருக்கேன்னு சொல்றதுதான் காதல்" - அர்ச்சனா பகிரும் காதல் அனுபவம்!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

bigg boss archana valentine days


அர்ச்சனாவ காமெடியான ஒரு பொண்ணாத்தான் பலருக்கும் தெரியும். ரொமான்ஸான ஒரு மனசும், அதுக்குள்ள அழகான ஒரு காதலும் அவளுக்குள்ள மறைஞ் சிருக்கிறது. அவ மட்டுமே அனுபவிக்கிற அற்புதமான உணர்வுகள். அதை வார்த்தையால சரியா மொழிபெயர்த்துட முடியுமான்னு சந்தேகமா இருக்கு. இருந்தாலும் வாங்க, ஜஸ்ட் ட்ரை பண்ணிப் பார்ப்போம்...

 

அப்பா இல்லாம வளர்ந்த பொண்ணு நான். அம்மாதான் எனக்கு அப்பா, குரு, கடவுள் எல்லாமே. என்னைக்குமே அவங்க என்ன மகளா பார்த்ததில்ல. ஒரு தோழியாத்தான் இன்னிக்கும் பழகிட்டு வர்றோம். நல்லா சுதந்திரம் கொடுப்பாங்க. தேவையான விஷயத்துல கண்டிப்பும் உண்டு. எந்தவொரு விஷயம் பத்தியும் தெளிவா அறிவுரை சொல்லுவாங்க. எது தப்பு, எது சரின்னு எங்களை யோசிக்கவிட்டு வழி நடத்துவாங்க. அவங்க ஏற்படுத்தின ஒரு புரிதல்னாலயோ என்னவோ, எனக்கு ஸ்கூல் டேஸ்லருந்தே தெளிவு இருந்துச்சு. ஆழமா யோசிப்பேன். அனுபவத்திலிருந்து பாடம் கத்துப்பேன்.

 

அப்படித்தான் காதல் பத்தியும் சின்ன வயசுலயே பாடம் கத்துக்கிட்டேன். ஸ்கூல் படிச்சப்போ என்னோட ஃப்ரெண்டு ஒருத்தி, இன்ஃபாச்சுவேஷனை காதல்னு நம்பி லவ்ல மாட்டிக்கிட்டா, தினம் தினம் தன்னோட காதலனுக்காக உருகுவா, ஏங்குவா, எங்களுக்கெல்லாம் தவிப்பா இருக்கும். "காதல் ரொம்பப் பெரிய விஷயம் போல... அவளுக்கு லக் இருக்கு... காதலிக்கிறா'ன்னு பலபேர் பெருமூச்சு விட்டிருக்காங்க. ஏகப்பட்ட காதல் பரிசுகளை காண்பிப்பா. ரத்தத்துல கடிதம் எழுதிப்பாங்க.

 

இதையெல்லாம் பார்த்து காதல் மேல காதலே வந்த நாளெல்லாம் உண்டு. ஆனா, அது ரொம்ப நாள் நீடிக்கல. சடார்னு ஒரு தினத்துல என் தோழியோட காதலன் ஏமாத்திட்டு ஓடிட்டான். இவ தன்னையே அவன்கிட்ட இழந்து தவிச்சுப் போய் நிக்கிறா. நான் ஷாக் வாங்கின நேரம் அது. அப்போதான் மனசுல பெருசா ஒரு விரிசல்... "ஆஹா காதல் மனுஷன உயிரோடு சாவடிக்கும்பா" ன்னு தெளிவு பிறந்துச்சு. அதுக்கப்புறம் சினிமாலயும், டி.வி.யிலயும்தான் நான் காதலைப் பார்த்ததெல்லாம்.

 

காலேஜுக்குப் போனேன். அந்த வயசுக்கே உரிய ஜாலி, அரட்டை. ரொம்ப ரொம்ப யூத்ஃபுல்லான நாட்கள் அவை. அமிதாப் மேல அபார கிரேஸ் எனக்கு. அவரோட உயரம் மீது காதல். என்னைப் போலவே என் ஃப்ரெண்ட்ஸ் பலருக்கும் அவர் மேல ஈடுபாடு இருந்ததைப் பார்த்த பிறகுதான் எனக்குப் புரிஞ்சது, இது ஒரு மாதிரி அட்ராக்ஷன்னு. அதனால அதையெல்லாம் நான் பெருசா எடுத்துக்கல.

 

எம்.ஏ. படிச்சப்ப, கம்யூனிகேஷன் சப்ஜெக்ட்டுக்காக ரோட்ல வச்சு நான், என் கிளாஸ்மேட்ஸ்லாம் போட்டோ ஷூட் பண்ணிட்டிருந்தோம். எங்களுக்கு முன்னாடி திடீர்னு ஒரு அம்பாசிடர் கார் போகுது. நேவி ஆபீசர்ஸ், வொயிட் அண்ட் வொயிட் யூனிஃபார்ம், கேப் போட்டு ஸ்டைலா போயிட்டிருக்காங்க. என் ஃப்ரெண்டு ஒருத்திகிட்ட நான் விளையாட்டா, "இந்த மாதிரி வேலை செய்ற பசங்களை யெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டா ரொம்ப சூப்பரா இருக்கும்டி"னேன்.

 

அதுக்கு அவ, "ஆமாண்டி, ஆனா நமக்கெல்லாம் எங்க இது மாதிரி ஹேண்ட்சம் கைஸ் கிடைக்கப் போறானுங்க. எங்கயோ கடா மாதிரி வளர்ந்திருப்பானுங்க. அவனுங்கதான் கிடைப்பாங்க பாரு"ன்னா. அப்ப எனக்குத் தெரியல, உண்மையிலேயே எனக்கு நேவி ஆஃபீசர் ஒருத்தர்தான் கணவரா வரப் போறாருன்னு.

 

cnc

 

அடுத்த மூணே மாசத்துல அந்த சந்தர்ப்பம் வந்து என் வீட்டுக் கதவைத் தட்டிடுச்சு. எஸ், சின்ன வயசுல என்கூட படிச்ச வினோத் குடும்பம் எனக்கு நல்ல அறிமுகம். அப்பப்போ பார்த்துப்போம், பேசிப்போம். அவங்க அப்பா-அம்மா கூட நல்ல ரிலேஷன்ஷிப் இருந்தது. வினோத்தோட பிரதர் வினீத்தை பார்க்கறது ரொம்ப அபூர்வம். சரியான பழக்கமும் இல்ல. நடுவுல வினோத் ஃபாரின் போயிட்டான்.

 

திரும்ப இந்தியாவுக்கு வந்தப்ப, அவனைப் பார்க்கப் போயிருந்தேன். காமெடி டைம் ஷூட்டிங் பிஸிக்கு நடுவுல, ஒரு அஞ்சு நிமிஷம் அவனுக்கு ஒதுக்கியிருந்தேன்.

 

நான் போனப்போ வினோத் கூட வினீத்தும் இருந்தார். அதுவரைக்கும் எனக்கு வினோத்துக்கு ஒரு அண்ணன் இருக்கார்னு மட்டும்தான் தெரியுமே ஒழிய, அவர் இவ்ளோ அழகானவரா, உயரமானவரா, சூப்பரா டிரஸ் பண்றவரா, நல்லா பேசறவரா இருப்பார்னு நிச்சயமா தெரியாது. அதுக்காக உடனே நான் அவரைப் பார்த்து இம்ப்ரஸ் ஆகி மயங்கி விழுந்துடல. 'பயப்படாத... உனக்காக நானிருக்கேன்'னு சொல்ற ஆறுதலைத்தான் நான் காதலா உணர்றேன்.

 

கல்யாணத்துக்கு முன்னாடி காதல், 'எனக்கு அவ்ளோ பண்ணே, இவ்ளோ பண்ணே'ன்னு நல்லதை சொல்லிட்டே இருக்கும். கல்யாணத்துக்கப்புறம் 'லவ் பண்ணப்ப இதெல்லாம் பண்ணீங்களே, இப்ப பண்றீங்களா'ன்னு மாறிடும். ஆக, கல்யாணத்துக்கப்புறம் எக்ஸ்பட்டேஷன்ஸ் ரொம்ப அதிகமாயிடும். என்னைப் பொறுத்த வரைக்கும் இதைத்தான் நான் திருமணத்துக்கு முன்னும் பின்னுமான வித்தியாசமா உணர்றேன். மத்தபடி எங்களுக்கிடையேயான அன்புலயோ, விட்டுக் கொடுத்தல்லயோ எந்தவிதமான மாற்றமுமில்ல. ரெண்டுபேருமே வேற வேற ப்ரொஃபெஷன்ல இருக்கறதால மாசத்துல பாதி நாட்கள் பிரிஞ்சிருக்க வேண்டியிருக்கு.

 

ஆனா இதெல்லாம் எங்க பாசத்தையோ, நேசத்தையோ பாதிக்கறதில்ல. தள்ளித் தள்ளி இருக்கும்போதுதான் எங்களுக்குள்ள நெருக்கம் அதிகரிக்கிறதா உணர்றோம். என்னோட டி.வி. ப்ரோக்ராம்ஸ், மத்த விஷயங்கள் பத்தியெல்லாம் அவர்கிட்ட பேசவும், புதுப்புது ரெசிபிகள் செஞ்சு அவரை அசத்தவும், ஒவ்வொரு நிமிஷமும் அவரைப் பார்க்கிற நாளுக்காக ஆவலா காத்துட்டிருப்பேன்.

 

nkn

 

அதே மாதிரி அவரும் தன்னோட வேலை, எக்ஸாம்ஸ், என் மேலுள்ள ப்ரியம் பத்தியெல்லாம் கொட்டித் தீர்க்க மணித்துளிகளை தவிப்போட நகர்த்திட்டிருப்பார். இது ஒரு கண்ணாமூச்சி மாதிரிதான். ரொம்ப சந்தோஷமா அனுபவிச்சு விளையாடிட்டிருக்கோம். எத்தனையோ சமயங்கள்ல கொடுமையான விஷயமா தெரிஞ்ச காத்திருப்பு, இன்னைக்கு சுகமான அவஸ்தையா உருமாறிப் போயிருக்குற அதிசயத்தை நிகழ்த்தினது காதல்தான்.

 

அது தந்த வேகத்தோடுதான் எதிர்காலத்தை மனசுல நினைச்சு நானும் வினீத்தும் கடுமையா உழைச்சிட்டிருக்கோம். எங்களுக்கே எங்களுக்குன்னு ஒரு குழந்தை, அதோட எதிர்காலம், சமூகத்துல அதுக்கொரு அந்தஸ்துன்னு எங்களோட எல்லைகள் விரிவடைஞ்சுக்கிட்டே போகலாம். எல்லாத்துக்கும் அடிப்படை ஆதாரமான காதல் நீர்த்துப் போகாத வரை எதையும் சாதிக்க முடியும்னுதான் தோணுது.

 

-மு. மாறன் 

 

 

Next Story

திண்டுக்கல்லில் காதலர் சங்கமம்; காதல் திருமணம் செய்தவர்கள் கௌரவிப்பு!

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

Valentine's Confluence in Dindigul; Love married people honor!

 

திண்டுக்கல்லில் காதலர் சங்கமத்தில் காதல் திருமணம் செய்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 

திண்டுக்கல்லில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு காதலர் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வு திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகமான தோழர் ஏ.பாலசுப்ரமணியம் நினைவரங்கத்தில் நடைபெற்றது. 

 

இந்த நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கௌரவிக்கப்பட்டனர். மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுமதி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்டத் துணைத்தலைவர் வனஜா வரவேற்றார். மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலச் செயலாளர் ராணி ஆகியோர் கலந்து கொண்டு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை பாராட்டி கௌரவித்து சிறப்புரையாற்றினர்.

 

சிபிஎம் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி ஆகியோர் காதலர்களுக்கு ரோஜா மலர் கொடுத்து காதலர்களை வாழ்த்தி பேசினர். மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பாப்பாத்தி, பாண்டியம்மாள், சுமதி, தங்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காதல் தம்பதிகள் பாரதி பாலாஜி, பொன்மதி கிருஷ்ணமூர்த்தி,  தங்கமணி ராஜாமணி, பாண்டிச்செல்வி பிரேம்குமார், கீர்த்தனா விஷ்ணு, மோகனா அழகுராஜா, ஜெயந்தி பாலமுருகன், தரணி சபரீஸ்வரன், வீரச்சின்னு தேவா, நித்யா வினோத்,  ராஜேஷ்வரி, கேக் வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். ஒவ்வொரு காதலரும் தாங்கள் காதலித்த நாட்களில் கிடைத்த இனிமையான தருணங்களை  மலரும் நினைவுகளாக உருக்கமுடன் பேசிக் கொண்டனர்.

 

 

Next Story

காதலர் தினத்தில் 15 நக்சலைட்டுகளுக்கு திருமணம் செய்து வைத்த போலீசார்

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

naxals.jpg

 

காதலர் தினத்தை முன்னிட்டு சரணடைந்த 15 நக்சலைட்டுகளுக்குக் காவல்துறையினர் திருமணம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் என்பது மிக அதிகம். அடிக்கடி வெடிகுண்டு உள்ளிட்ட தீவிரவாத தாக்குதல்கள் அந்த மாநிலத்தில் சகஜமாக நடைபெறும். குறிப்பாக சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் மிக அதிகம். இந்நிலையில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட அம்மாவட்டத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நக்சலைட்கள் ஆயுதங்களை ஒப்படைந்து காவல்துறையிடம் சரணடைந்தனர். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு 15 நக்சலைட்டுகளுக்கு அம்மாநில போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

 

இந்தச் சம்பவம் மற்ற நக்சலைட்டுகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களும் திருந்தி, குடும்ப வாழ்வுக்கு வருவார்கள் என்று காவல்துறை தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

The website encountered an unexpected error. Please try again later.