Skip to main content

விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைப் பேசிய இலக்கியவாதி டி.செல்வராஜ்!

Published on 21/12/2019 | Edited on 21/12/2019

 

மிழின் முற்போக்கு எழுத்தாளரும், தமுஎகச அமைப்பை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவருமான டேனியல் செல்வராஜ் என்கிற டி.செல்வராஜ்(வயது81) நேற்று மாலை மதுரையில் மறைந்தார். உடல்நலக்குறைவினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மறைந்ததை அடுத்து அவரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.

 

d


முற்போக்கு சிந்தனை கொண்ட செல்வராஜ், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை தொடர்ந்து தனது படைப்புகளில் பதிவு செய்துவந்தார்.  200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 50 ஓரங்க நாடகங்கள் எழுதி பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்,   தோல் எனும் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதினையும் பெற்றுள்ளார்.  திருநெல்வேலி தென்கலம் பகுதியைச் சேர்ந்த இவர் திண்டுக்கல்லில் வசித்து வந்தார்.  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞராகவும் பணிபுரிந்து வந்தார்.

 

கேரளாவில் தேவிகுளம், பீர்மேடு தேயிலை தோட்டங்களில் பெற்றோருடன் தங்கியிருந்தபோது அங்கிருந்த தொழிலாளர்களின் பிரச்சனைகளை அறிந்துவைத்திருந்தார்.   பின்னாளில் இந்த பிரச்சனைகளை மையமாக வைத்துதான் ‘தேனீர்’என்ற நாவலை எழுதினார்.  இந்த நாவலை ‘ஊமை ஜனங்கள்’ என்ற பெயரில் ஜெயபாரதி திரைப்படமாக கொண்டு வந்தார்.

 

t

 

திருநெல்வேலியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் தி.க., சிவசங்கரன், தொ.மு..சி.ரகுநாதன், பேராசிரியர் வானமாமலை ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பினால் இலக்கியங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டு, எழுதத்தொடங்கினார்.  ஜனசக்தி, சரஸ்வதி, சாந்தி, செம்மலர், சிகரம் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றிக்கொண்டே அப்பத்திரிகைகளில் சிறுகதைகளும் எழுதி வந்தார்.  

 

நெல்லை விவசாயிகளின் போராட்டத்தை மையமாக வைத்துதான் ‘மலரும் சருகும்’ என்ற நாவலை எழுதினார்.  தொடர்ந்து ’தேனீர்’, ‘மூலதனம்’, ‘தோல்’, ‘அக்னிகுண்டம்’ உள்ளிட்ட 6 நாவல்களையும் எழுதினார்.   

 

ட்


 
தோல் பதனிடும் தொழிலோடு இணைந்த தலித் மக்களின் வாழ்க்கை, அவர்ளைக் கசக்கிப் பிழிந்த முதலாளிகளின் அரசியல், தட்டிக் கேட்கப் புறப்பட்ட செங்கொடி இயக்கத்தின் தத்துவம் என திண்டுக்கல் வட்டாரம் சார்ந்து எழுதப்பட்டிருந்தாலும் தமிழக உழைக்கும் வர்க்க இயக்க வரலாற்றின் ஒரு கூறாகவே  ‘தோல்’ நாவல் உருவாகியுள்ளார் செல்வராஜ். 

 

நெல்லையில் படித்து முடித்த பின்பு, சென்னையில் சட்டம் படித்தார் செல்வராஜ்.  அதற்குப் பிறகு வழக்கறிஞர் தொழிலுக்காக திண்டுக்கல்லில் வசித்தார்.  அப்போது  திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்கள் பலருடன் நேரில் பழகி, அவர்களுடைய வாழ்க்கைக் கதையைப் பல வருடங்களாக குறிப்பெடுத்து வைத்திருந்தார்.  அந்தத் தொழிலாளர்களுக்கான பல வழக்குகளையும் நடத்தியிருக்கிறார் செல்வராஜ்.

 

ச்

 

தோல் பதனிடும் தொழிலாளர் வாழ்க்கையை நரக வாழ்க்கை என்றும்,  அந்த வேலை செய்யும் தொழிலாளர்களின் விரல் நகங்கள் கறுத்துவிடும் என்ற நிலை அறிந்தும், தொழுநோய் வந்தவர்களின் விரல்கள் போல ஆகிவிடும் அவர்களின் நிலைகண்டும் கலங்கினார்.  50 ஆண்டுகள் அவர்கள் உயிர் வாழ்ந்தால் பெரிய விஷயம். என்பதையெல்லாம்  நேரில் பார்த்து மனம் உருகியிருக்கிறார் செல்வராஜ்.  அவர்களுடைய போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி நடத்திய ஏ.பாலசுப்ரமணியம் போன்ற தலைவர்களுடனும் பழகியிருக்கிறார். இவற்றையெல்லாம் வைத்துத்தான் "தோல்' நாவலை எழுதினார்.  பலராலும் பாராட்டப்பட்ட இந்நாவலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது.  இந்நாவலுக்கு 2012ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதும் கிடைத்தபோது,  ’’ஏழை தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு அளிக்கப்பட்ட கவுரவமாக கருதி இதை மகிழ்வுடன் ஏற்கிறேன்’’என்று கூறினார் செல்வராஜ்.


 

Next Story

ஆதிபுருஷ் வசனகர்த்தாவுக்கு கொலை மிரட்டல்; ஒப்புதல் கொடுத்த படக்குழு

Published on 20/06/2023 | Edited on 20/06/2023

 

Death threat to Adipurush narrator

 

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

 

3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியான போது கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்தது. இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இன்று இப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் திரையிடும் திரையரங்கில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விடப் போவதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

 

இந்நிலையில் இப்படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த கொலை மிரட்டல் சம்பவம் உண்மையானது என தெரிய வந்த நிலையில் மும்பை போலீசார் பாதுகாப்பு அளித்து வருகிறார். இப்படத்தில் ராமர் குறித்து எழுதப்பட்ட வசனங்கள் சர்ச்சை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக தனக்கு கொலை மிரட்டல் வருவதாக பாலிவுட் பாடலாசிரியரும், இப்படத்தின் வசனகர்த்தாவுமான மனோஜ் முண்டாஷிர் போலீசில் புகார் அளித்திருந்தார். கொலை மிரட்டலைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த வசனங்களை நீக்க படக்குழு  ஒப்புதல் தெரிவித்துள்ளது.

 

 

Next Story

யார் இந்த சல்மான் ருஷ்டி?- விரிவான தகவல்!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

WHO IS SALMAN RUSHDIE COMPLETE DETAILS

 

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் பிரச்சனை ஆகும். இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

 

மும்பையில் பிறந்த இஸ்லாமியரான சல்மான் ருஸ்டி, சிறுவயதிலேயே இங்கிலாந்து நாட்டில் குடியேறினார். பிரபல எழுத்தாளரான இவர் பல்வேறு புத்தகங்களை எழுதியிருந்தாலும், இஸ்லாமுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட 'THE SATANIC VERSES' என்ற நாவல் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. 

 

கடந்த 1988- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டனில் வெளியிடப்பட்ட அந்த நூலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. மத உணர்வைப் பாதிக்கும் வகையிலான புத்தகம் என்பதால் அதற்கு முதல் நாடாக இந்தியா தடை விதித்தது. கடந்த 1989- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சல்மான் ருஷ்டியின் நாவல் பிரதிகள் இங்கிலாந்தின் பிராஃபோர்ட் நகரில் தீ வைத்து எரிக்கப்பட்டன. 

 

அதே ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவில் புத்தகம் வெளியிடப்பட்டதை அடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க கலாசார மையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர். 1989- ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டியைக் கொல்ல ஈரான் மன்னரான அயதுல்லா கொமேனி ஃபத்வா என்ற மத ஆணையை வெளியிட்டார். 

 

கடந்த 1991- ஆம் ஆண்டு ருஷ்டியின் ஜப்பானிய மொழி பெயர்ப்பாளர் கொலை செய்யப்பட்டதுடன், இத்தாலிய மொழி பெயர்ப்பாளர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு சல்மான் ருஷ்டியின் துருக்கி மொழி பெயர்ப்பாளரை குறி வைத்து ஹோட்டல் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதில் 37 பேர் உயிரிழந்தனர். 

 

கடந்த 1998- ஆம் ஆண்டில் சல்மான் ருஷ்டி மீதான ஃபத்வா உத்தரவை நிறைவேற்றப் போவதில்லை என்று ஈரான் அரசு கூறியது. ஆனாலும் சல்மான் ருஷ்டி மீதான எதிர்ப்பு முடிவுக்கு வரவில்லை. கடந்த 1999- ஆம் ஆண்டு பிப்ரவரியில் இஸ்லாமியர்களால் டெல்லியில் கடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

 

கடந்த 2007- ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மகாராணியால் சல்மான் ருஷ்டிக்கு 'மாவீரர்' என்ற கவுரவம் அளிக்கப்பட்டது. 2016- ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டியின் தலைக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், ஆறு ஆண்டுகள் கழித்து மேற்கு நியூயார்க்கில் இலக்கிய நிகழ்வில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.