Skip to main content

சிங்கிள்ஸ் படிக்காதீங்க... காதலர் தினத்திற்கு காரணமான கதை..!

பிப்ரவரி 7 முதல் 14 வரை உலகெங்கும் காதலர் வாரம் கொண்டாடப்படுகிறது. ரோஸ் நாளில் தொடங்கி ப்ரபோஸ் செய்து, சாக்லேட் பகிர்ந்து, பொம்மை கொடுத்து, வாழ்நாள் முழுவதும் உடனிருப்பேன் என ப்ராமிஸ் செய்து, அணைப்பில் அன்பை பகிர்ந்து, முத்த தினம் கொண்டாடி, மொத்த காதல் வாழ்க்கையின் சுருக்க வடிவத்தையும் நினைவுகூர்ந்து இறுதியில் காதலர் தினத்தை கொண்டாடுகிறோம். காதல் வாழ்த்து அட்டைகளும், சிகப்பு ரோஜாக்களும், சிறகு முளைத்த இதயங்களும் அன்பை ஏற்றிக்கொண்டு அனைவருக்கும் வழங்கி வருகையில்...

 

valentain day

 

நான் ஒரு காதல் கதை சொல்ல போகிறேன். கதையை கேட்டு "ஏய் இந்தப் படத்தை நான் பாத்துருக்கேன்"னு சொல்லிடக்கூடாது. காதல் திரைப்படங்கள் வெற்றியடைய காரணம், காதல் உயிரினங்களின் பொதுவான உணர்ச்சி. இந்தக் கதையும் அப்படித்தான்.  பொதுவான உணர்ச்சியென்றாலும் எல்லா காதலும் ஒரே மாதிரி இல்லையே! காதல் என்றால் இப்படித்தான் என வரையறைகள் எழுத பலர் முயற்சித்தாலும் எதற்கும் வசப்படாத மாயப் பறவையாய் பறக்கிறது காதல். உண்மை காதல் பொய்யான காதல் என கண்டுகொள்வதற்கான கற்பிதங்கள் அனைத்தும், கிழிந்த வலையை விரித்துவிட்டு, பறவையை பிடித்துவிட மரக்கிளையில் காத்திருக்கும் வேடனைபோல தோற்றுவிடுகின்றன. அப்படி, கண்ணால் காண்போருக்கு அகப்படாத காதலெனும் மாயப்பறவை கண்ணில்லாத பெண் ஒருத்திக்கு அகப்பட்ட கதைதான் இது.

 

நம் கதாநாயகன் சினிமாக்களில் வருவது போல் காலேஜில் கடைசி பெஞ்ச் மாணவனோ, தெருஓர குட்டி சுவற்றில் சிகரெட் பிடித்துக்கொண்டே பெண்களை வம்பிழுக்கிற வி.ஐ.பி யோ, மார்க்கெட் கடைகளில் மாமூல் கேட்கும் ரவுடிகளுடன் சண்டைபோட்டு மார்க்கெட்டையே காலி செய்யும் ஆக்ஷன் ஹீரோவோ இல்ல. அதுக்கும் ஒருபடி மேல். தேச துரோகியாக பாதாள சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதி. அந்த சிறையின் மற்ற கைதிகள் கொலை, கொள்ளை, என பல்வேறு குற்றங்களுக்காக தண்டிக்கப்படுகின்றனர். நம் நாயகனோ நாடோடிகள் பட கதாநாயகன் போல் காதலை சேர்த்துவைத்ததால் சிறைக்கு வந்தவர்.  அந்த சிறையின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் பெண் தினமும் சிறைக்கு வந்து கைதிகளுக்கு மத போதனை செய்வது வழக்கம். பிறவியிலேயே பார்வையற்ற அவளது பாதைகள் அன்பின் வெளிச்சத்தில் மட்டுமே அவளுக்கு தெரிந்தன.

 

பாதாள சிறையில் கண்ணிருந்தும் இருளில் கிடந்த கைதிகள் அவளின் வருகைக்காகவே தினந்தோறும் காத்திருந்தனர். நமது நாயகனுக்கும் அப்படிதான். எப்போதும் சிறைச்சாலையின் படிக்கட்டுகளையும், பாதைகளையும், உடலில் சுவாச சுழற்சி நடப்பது போல் இயல்பாய் கடந்துவரும் அவளது கால்கள், இன்று ஏதோ ஒரு பரவசத்தில் ஆங்காங்கே இடித்தபடி வந்தன. கையில் பைபிளுக்கு பதில் சிகப்பு ரோஜாக்கள். சிறைக்கதவுகள் திறந்து சூரிய கதிர்களின் ஜொலிப்பில் தேவதையாய் தோன்றினால் அவள். கைதிகள் பக்தியில் திளைத்திட நம் நாயகனோ காதலில் திளைத்தான். கைதிகளின் கண்கள் அவளுடனே பயணமாகி கடைசியில் நாயகனின் அறையில் வந்து நின்றன. அருகருகே அவர்கள், நடுவில் கம்பிகளாலான கதவு. அந்த இடம் முழுவதும் மவுனம் நிலைகொள்ள மனதிற்குள் வார்த்தைகள் ஆரவாரம் செய்தன. முதலில் அவளே தொடங்கினாள் "என் உலகம் ரொம்ப பெருசா இருந்துச்சி, பரந்த கடலுக்கும் எனக்கும் இருக்க நட்புக்காக தென்றல் தூது போகும், மின் மினி பூச்சிகள் நான் தூங்குறதுக்கும், தேன் வண்டுகள் நான் எழுந்திருக்கவும் பாட்டு பாடும், என் கால்கள் தரையில படாம மேகம் தூக்கிட்டு போகும்... இப்ப எல்லாமே மாறிப்போச்சு. என் பெரிய உலகம் சிறைக்குள்ள இருக்கு" அவள் பேசிக்கொண்டேயிருக்க அவன் "இல்ல, அது தூக்கு மேடையில இருக்கு. தயவுசெஞ்சி உன் எண்ணத்த மாத்திக்கோ" என அவனது காதல் அனைத்தையும் குரல்வளைக்கு கீழே அடக்கிக்கொண்டான்.

 

valentain day

 

பார்வையற்றவளாய் இருந்தாலும் வசதியும் அந்தஸ்தும் இருக்கிற அதிகாரியின் மகளுக்கு கைதியின் மேல் காதல் வர காரணம் என்ன? காதலை சேர்த்துவைத்தால் தூக்குத்தண்டனையா கொடுப்பார்கள்? என கேள்விகள் வரலாம். இரண்டு கேள்விக்கும் ஒரே பதில்தான். 'க்ளாடியஸ் நிமி' என்ற அரசர் தன் போர் படையை வலிமையாக்க நினைத்தான். படை வீரர்களின் வலிமையையும், எண்ணிக்கையையும் பெருக்குவதற்காக நாட்டில் இளைஞர்கள் யாரும் திருமணம் செய்யக்கூடாது என தடைவிதித்தான். இதை மீறுபவர்களுக்கு மரணதண்டனை எனவும் அறிவித்தான். காதலும், குடும்பமும் இல்லையென்றால் நிறைய வீரர்கள் படையில் சேருவார்கள் என்ற எண்ணம் அவனுக்கு. இந்த அறிவிப்பால் காதலித்த அனைவரும் பிரிந்தனர். காதலர்கள் தேடி தேடி கொல்லப்பட்டனர். இந்த சூழலில் கிறிஸ்துவ பாதிரியாராக இருந்த நம் நாயகன் அரசுக்கு தெரியாமல் பல காதலர்களுக்கு திருமணம் செய்துவைத்தார். கொடுமைக்கார அரசரின்மேலும், அவருக்கு கீழ் வேலை பார்க்கும் தன் தந்தையின்மீதும் வெறுப்பில் இருந்த நாயகி, நாயகனின் துணிச்சலான செயலை கேள்விப்பட்டு அவர்மீது ஈர்ப்பு கொண்டிருந்தாள். வெகு விரைவிலேயே நாயகன் பற்றிய செய்தி அரசருக்கு தெரிந்து அவர் சிறைபிடிக்கப்பட்டார். மரண தண்டனையும் வழங்கப்பட்டது.

 

நமது நாயகன் சிறைக்கு வந்த பிறகு, தினமும் போதனைக்காக சிறைக்கு வரும் நாயகி மீது காதல் ஏற்பட்டது. எனினும் தன்நிலை கருதி வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் நாயகியோ இறந்தாலும் இணைந்தே இறப்போம் என தன் காதலை கூறிவிட்டாள். இன்னும் சில தினங்களில் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற நிலையில் பூக்களுடன் வந்து நிற்கிறாள் அவள். அவன் கூறிய மறுப்புக்கு அவளது கண்ணீர் கண்டனம் தெரிவிக்கிறது. அந்த கண்கள் தன் இருப்புக்கான வேலையை இன்றுதான் செய்கிறது. அழுவதின் மூலமாக. "நான் உனக்கு முன்னாடி கல்லறையில காத்திருப்பேன்" என தழு தழுத்த குரலில் சொல்லி முடிப்பதற்குள் அவன் அவள் கைகளை பிடித்தான். அவனுள் அடக்குமுறைக்கு ஆளான காதல் புரட்சி செய்தது. அவனது ஸ்பரிசம் பட்டவுடன் கண்ணீரில் நனைந்த அவளின் முகத்தில் புன்னகை துளிர்விட்டது. இனி வார்த்தைக்கு இடமில்லாமல்  உணர்வுகள் உரையாடின. கரத்தின் பிடி இறுகியது. கடந்தகாலமும் எதிர்காலமும் இல்லாத நிகழ்கால காதல் அரங்கேறியது...

 

ஒரு நிமிஷம். நான் ஹீரோ ஹீரோயின் பெயர சொல்லவே இல்லையில? நாயகன் வாலன்டைன், நாயகி அஸ்டோரிஸ். கி.பி.207 ஆம் ஆண்டு நடந்த இவர்களின் கதை தான் இது. வாலண்டைன் நினைவாகத்தான் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்