ADVERTISEMENT

வெளிநாடு போக ஓ.பி.எஸ்.க்கு விருப்பம் இல்லையா? புறக்கணிக்கப்பட்டாரா?

06:32 PM Aug 30, 2019 | rajavel

ADVERTISEMENT

வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 14 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 28ஆம் தேதி சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டன் புறப்பட்டுச் சென்றார். வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடிவடைந்து வரும் செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமியுடன் மருத்துவத்துறையை மேம்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றுள்ளார். இதேபோல் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றுள்ளார். மேலும் தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்கும் சென்று அங்கு வனத்துறையில் பின்பற்றப்படும் முறைகள், காட்டுத் தீ தடுப்பு முறைகள் ஆகியவற்றை அறிகிறார்.


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்திற்கும், செய்தி விளம்பரத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜூ மொரிஷீயஸ் நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.

செப்டம்பர் 1ஆம் தேதி இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு 2ம் தேதி நியூயார்க் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர்களுடன் இணைந்து கொள்ள அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் நியூயார்க் செல்லவிருக்கிறார்கள்.

தகவல் தொழில்நுட்பத்துறை, கல்வித்துறை, வனத்துறை, செய்தி விளம்பரத்துறை, சுகாதாரத்துறை, பால்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த வெளிநாட்டு பயணத்தை வடிவமைத்தார்.


இந்த அரசு முறை பயணத்திட்டத்தில் துணை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறவில்லை. "அவர் நிதி அமைச்சர்தான். திட்டங்களுக்கான நிதி எவ்வளவு தேவைப்படும் என ஆராயந்து அதனை ஒதுக்கீடு செய்வதுதான் அவரது பணி. அதனால் வெளிநாடுகளுக்கு அவர் தேவையில்லை" என்கிறார்கள்.

ஆனால், அவரிடம் வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், இடவசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப்புற வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட முக்கிய துறைகளும் கூடுதலாக இருக்கின்றன.

" அந்த வகையில் ஓ.பி.எஸ்.ஸிடம் உள்ள துறைகளிலும் சிலவற்றை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.


உதாரணத்திற்கு, மத்திய அரசு மூலம் நிறைவேற்ற வேண்டிய ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஓபிஎஸ் கட்டுப்பாட்டிற்கு கீழ்தான் வருகிறது. குறைந்த இடத்தில் அதிக வசதிகளுடன் கட்டிடங்களை கட்டுவது எப்படி? நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு என்ன வழி? சென்னை போன்ற பெருநகரங்களில் மழை பெய்தால் உடனே சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு என்ன நடைமுறையை பின்பற்றுவது? போன்றவற்றை துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டிய தேவையும் கட்டாயமும் இருக்கிறது. மேலும், மாநிலத்தின் உள்கட்டமைப்பு சரியாக இருந்தால்தான் தமிழகத்தின் வளர்ச்சி அதிகரிக்கும். உள்கட்டமைப்பு வளர்ச்சி இருந்தால்தால்தான் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருவார்கள். அந்த வகையில், ஆய்வு செய்தால், ஓ.பன்னீர்செல்வமும் வெளிநாடு சென்றிருக்க வேண்டும். ஏன் அவர் செல்லவில்லை? அவருக்கு விருப்பம் இல்லையா? உள்கட்சி அரசியலால் அவர் புறக்கணிக்கப்பட்டாரா? அதிமுக என்றால் ஜெயலலிதா என்று இருந்தது போல, இனி எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் என்பதை உருவாக்க திட்டமிட்டு ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டாரா?" என்கிற கேள்விகள் அதிமுக வட்டாரங்களில் எதிரொலிக்கின்றன.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT