ADVERTISEMENT

தூத்துக்குடிக்கு முன்... ஸ்டெர்லைட் அகர்வால் நாசமாக்கிய சாம்பியா

03:54 PM Jun 01, 2018 | karthikp

ADVERTISEMENT

-டாக்டர் அண்ணாமலை மகிழ்நன்,
Ph.D., ஆஸ்திரேலியா

ADVERTISEMENT

ரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டில் சாம்பியா நாட்டின் ‘கோலம் தாமிரச் சுரங்கத்தில்’ இரண்டு சீன மேலாளர்கள் தங்களுடைய உரிமைக்காகப் போராடிய 13 சாம்பியத் தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்றார்கள். இன்று, 2018-ல் தங்களுடைய உரிமைக்காகப் போராடிய மக்களில் 13 பேரை தூத்துக்குடியில் இந்திய/தமிழ்நாடு அரச பயங்கரவாதம் சுட்டுக் கொன்றிருக்கிறது. அந்த உரிமைப் போராளிகளுக்கு நம் வீர வணக்கம்.

ஆப்ரிக்காவின் தெற்கு மையப் பகுதியில் அமைந்துள்ள எழில் கொஞ்சும் நாடுகளில் ஒன்று சாம்பியா. கனிம வளம் மிக்க நாடு. தாமிரம், கோபால்ட், யுரேனியம், வெள்ளி, தங்கம், காரீயம், துத்தநாகம் உள்ளிட்ட கனிமங்களும், மரகதக் கற்களும் (எமரால்ட்), குறிப்பிடத்தக்க எண்ணெய் வளமும் கொண்ட நாடு. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஏகபோக சுரண்டலுக்கும் கொள்ளைக்கும் ஆட்படுத்தப்பட்ட நாடு. 1964-ல் விடுதலை அடைந்த சாம்பியாவின் முதல் பிரதமர் கென்னத் கௌடா சாம்பியாவை ஒரு சோசலிசக் குடியரசாக ஆக்கினார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF)

சர்வதேச அழுத்தம் சாம்பியாவை சர்வதேச நாணய நிதியத்தில் (IMF)உறுப்பினராகச் சேரச் செய்தது. சர்வதேச நாணய நிதியம் என்பது பணக்கார ஏகாதிபத்திய நாடுகளால் நடத்தப்படும் ஓர் அமைப்பு. ஏழை நாடுகளை, பின்தங்கிய நாடுகளை, அடிமைத் தளையிலிருந்து மீண்ட நாடுகளை, உதவி என்கிற ஆக்டோபஸ் கரங்களால் வளைத்து கபளீகரம் செய்வதற்காகவே ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. உதவி செய்வதுபோல் ஏமாற்றி, அந்த நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதுதான் இந்நிறுவனத்தின் வேலை. இந்நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை ஏற்கும் நாடுகள் விலைவாசிகளைக் கட்டுப்படுத்த முடியாது. இப்பொழுது இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை விஷம்போல் ஏறுவதற்கும் காரணம் இதுதான்.

தாமிரச் சுரங்கங்கள் தனியார் மயம்

சாம்பியாவின் தாமிர உற்பத்தி, சாம்பியா ஒருங்கிணைந்த தாமிரச் சுரங்கங்கள் (Zambia Consolidated Copper Mines) என்கிற அரசு நிறுவனத்திடம் இருந்தது. இந்நிறுவனத்தை தனியார் மயமாக்கியதில், சாம்பியாவின் மிகப் பெரிய தாமிரச் சுரங்கமான கொங்கோலா தாமிரச் சுரங்கம் (KCM எனப்படும் Konkola Copper Mines) தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது. கே.சி.எம். நிறுவனத்தை, 2002-ல், ஆங்லோ-அமெரிக்கன் என்கிற இங்கிலாந்து நிறுவனம் வாங்கியது. இதில் வேடிக்கை என்னவென்றால், அரசு நிறுவனமான சாம்பியா ஒருங்கிணைந்த தாமிரச் சுரங்கங்கள் நிறுவனத்தை நிர்வகித்து வந்ததும் இதே ஆங்லோ-அமெரிக்கன் நிறுவனம்தான்.

வேதாந்தா ரிசோர்சஸ் அனில் அகர்வால்

2004-ல் ஆங்லோ-அமெரிக்கன் நிறுவனத்திடமிருந்து கே.சி.எம். தாமிரச் சுரங்கத்தை அனில் அகர்வாலின் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம் வாங்கியது. இந்த விற்பனையில் மிகப்பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக 2007-ல் வெளியிடப்பட்ட ‘"எ வென்சர் இன் ஆஃப்ரிக்கா'’ என்னும் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. சாம்பியாவில் அகர்வாலின் தொடக்கமே முறைகேடுகளும் ஊழலுமாகத்தான் இருந்திருக்கிறது. அதுதான் அனில் அகர்வாலின் பாணியே. சாம்பியாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பெரும் முறைகேடுகள் செய்வதுதான் அகர்வாலின் தொழில். 2001ல் 4000 கோடி மதிப்புடைய பாரத் அலுமினியம் கம்பெனியின் அலுமினியம் சுத்திகரிப்புத் தொழிற்சாலையை வெறும் 415 கோடிக்கு வாங்கினார் அகர்வால்.


இப்படி வாங்கும் நிறுவனங்களில் விதிமுறை மீறல், ஊழல், கள்ளக் கணக்கு, அரசிற்குச் செலுத்த வேண்டிய வரிகளைக் கட்டாமல் ஏமாற்றுதல், ஊழியர்களின் உரிமையை மறுத்தல், மனித உரிமை மீறல் எல்லாவற்றிற்கும் மேலாக சுற்றுப்புறச் சூழ்நிலைகளை மாசுபடுத்தி மக்களின் நல்வாழ்வை அழித்தல் ஆகிய வழிமுறைகளில்தான் அனில் அகர்வால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொள்ளையடித்துள்ளார். அதனால்தான் சர்வதேச அளவில் அதிகம் வெறுக்கப்படும் நிறுவனமாக வேதாந்தா ரிசோர்சஸ் ‘தனிப்புகழ்’ அடைந்துள்ளது.

வேதாந்தாவை ஒழிப்போம்

மானுடத்திற்கெதிராக உலகளாவிய அளவில் பல நாசகாரச் செயல்களைச் செய்துவரும் வேதாந்தா ரிசோர்சசின் அக்கிரமங்களை தோலுரித்து உலகிற்குக் காட்டுவதற்காக இங்கிலாந்தில் தோற்றுவிக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனம் "வேதாந்தாவை ஒழிப்போம்'’(Foil Vedanta). இந்நிறுவனத்தின் தன்னார்வலர்கள் இந்தியாவில் தூத்துக்குடி, ஒரிசா, சாம்பியா மற்றும் ஆஸ்திரேலியாவின் டாஸ்மனியா மாநிலத்தில் உள்ள மௌண்ட் லயல் ஆகிய இடங்களில் வேதாந்தா ரிசோர்சஸ் செய்து வரும் சுற்றுப்புறச் சூழல் கேடுகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

சாம்பியாவின் தாமிரத் தொட்டில்

உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த தாமிரத்தில் ஆறில் ஒரு பங்கு சாம்பியாவில் கனிமமாக வெட்டியெடுக்கப்படுகிறது. வேதாந்தாவின் சாம்பியா தாமிரச் சுரங்கங்கள், ஆஸ்திரேலியாவின் மௌண்ட் லயல் ஆகிய இடங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படும் செறிவூட்டப்பட்ட தாமிரம் (Copper concentrate) தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்டு, தாமிரம் பிரித்தெடுக்கப்படுகிறது. தாமிரக் கனிமங்கள் பலவகைப்படும். இக்கனிமங்கள் சாம்பியாவின் காஃப்யூ நதிதீரத்தில் ஏராளமாகப் புதைந்துள்ளன. வேதாந்தா ரிசோர்சசின் துணை நிறுவனமான கே.சி.எம்., காஃப்யூ நதியில் விஷம் கலந்த சுரங்கக் கழிவுகளைக் கொட்டி அந்த நதியையே விஷமாக்கியது.

நம்மில் பலரும், ஆற்று நீரையும், ஏரித் தண்ணீரையும், குளத்துத் தண்ணீரையும் குடித்து வளர்ந்தவர்கள். அப்படித்தான் சாம்பியாவின் காஃப்யூ நதிக் கரையில் வாழும் மக்களும் வாழ்ந்தார்கள். ஆனால், அவர்களின் குடிநீரை, விவசாயத்தின் ஆதாரத்தை விஷமாக்கியது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் பிதாமகன் அனில் அகர்வாலின் வேதாந்தா. மக்கள் பல நோய்களுக்கு ஆளாகினர். இந்தியாவைப் போன்றே, ஊழல் அரசியல்வாதிகள் நிறைந்த சாம்பியாவில் சாமான்ய மக்கள் ‘நீடும் பிணியினில்’ வாடினர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பல சுற்றுப்புறச் சூழல், மனித உரிமை தன்னார்வ நிறுவனங்கள் சாம்பியாவில் பல ஆய்வுகளை மேற்கொண்டனர். அவர்களின் போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்த ஆய்வில் வெளியான தகவல்கள் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களிடையே மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


தாமிரம் ஒரு விஷ உலோகம்

தாமிரம் ஒரு விஷ உலோகம். தமிழகத்தில், தாமிரப் பாத்திரத்திற்கு உள்ளே ஈயம் பூசுகின்றவர்கள் தெருத் தெருவாக வந்து தாமிரப் பாத்திரங்களுக்கு உட்புறத்தில் ஈயம் பூசித் தருவார்கள் என்பது ஒரு நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தெரியும். ஏனென்றால், தாமிரத்தின் மீது ஈயம் பூசாமல் சமைத்தால், அந்த உணவில் தாமிர விஷம் கலந்து விடும். "மயில்துத்தம்' எனப்படும் விஷம், தாமிர விஷம். அதனை ஆங்கிலத்தில் ஈர்ல்ல்ங்ழ் நன்ப்ல்ட்ஹற்ங் என்பார்கள். மயில்துத்தக் கரைசலைக் குடித்து தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம்.

எந்த ஓர் உலோகத்தையும் அதன் கனிமத்தில் இருந்து 100க்கு 100 சதவீதம் பிரிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவுதான் பிரித்தெடுக்க முடியும். அப்படிப் பிரித்தெடுக்கும் உலோகத்திற்கு மேல் உள்ள எஞ்சிய உலோகக் கனிமம் கழிவாகக் கொட்டப்படும். இவற்றைக் கொட்டுகின்ற இடங்களில் மழை பொழியும் பொழுது உலோகக் கழிவில் உள்ள விஷம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து நிலத்தில் ஊறி, நிலத்தையும் நிலத்தடி நீரையும் விஷமாக்கி விடும். சாம்பியாவின் கே.சி.எம். சுரங்கத்தை ஒட்டிய பல பகுதிகளின் நிலமும் நீரும் விஷமாக்கப்பட்டது அப்படித்தான். கே.சி.எம். சுரங்கத்தை ஒட்டிய பகுதிகளில் காஃப்யூ ஆற்றை உலோகக் கழிவுகளைக் கொட்டி விஷமாக்கிய வேதாந்தா ரிசோர்சசின் கே.சி.எம். நிறுவனம், அந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்களின் குடிநீர்த் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துக் கொடுத்தது. ஆனால் அதிலும் விஷமே வந்தது.


சாம்பியாவில் வேதாந்தா அமைத்துக் கொடுத்த ஆழ்குழாய்க் கிணற்றிலிருந்து சகதியான விஷத்தண்ணீர் வந்தது.

கே.சி.எம். நிறுவனத்தின் தாமிர உலோகக் கழிவுகளை காஃப்யூ நதியில் கலக்கும் முஷிஷிமா துணை நதியில் கொட்டியதால் காஃப்யூ நதி நீர் விஷமானது. அந்நதி நீர் மூலம் விவசாயம் செய்து வந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாழானது. அப்படிப் பாழான விவசாய நிலத்திற்கருகே தேங்கியிருக்கும் தண்ணீரின் நிறம் நீலநிறம் கலந்த இரத்தச் சிவப்பாக இருக்கும்.

இப்படி தூத்துக்குடி மாவட்டத்தை மாற்றத்தான் மத்திய -மாநில அரசுகள் அனில் அகர்வாலுக்கு உதவுகின்றன. மக்களைக் கொலை செய்கின்றன.

தாமிர விஷத்தால் வரும் நோய்கள்

தாமிரம் தண்ணீரில் கரைவதற்கு அதனோடு சேர்ந்துள்ள இரும்பு உதவி செய்யும். தாமிரம், இரும்பு, கந்தகம் (Cu, Fe, S) ஆகிய மூன்று தனிமங்களின் சேர்க்கையே தாமிரக் கனிமங்கள். அவற்றின் பெயர்கள் சால்கோ பைரைட், சால்கோசைட், கோவில்லைட், போர்னைட், எனர்கைட் மற்றும் டெட்ராஹீட்ரைட். இவற்றில் உள்ள தாமிரம், கந்தகம் இரண்டும் கொடும் நோய்களைக் கொடுக்கும்.

வாந்தி, இரத்தவாந்தி, குறைந்த இரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை, குடல் நோய்கள், சிறுநீரகப் பழுது, கல்லீரல் பழுது... ஆகியவை தாமிர விஷத்தால் ஏற்படும். மனித உடலின் சுத்திகரிப்பு நிலையம் கல்லீரல். அந்தக் கல்லீரல் பழுதடைந்தால் அதன் தொடர்ச்சியாக வரும் நோய்கள் ஏராளம். இந்த நோய்கள் அனைத்தும் சாம்பியாவில் கே.சி.எம். தாமிரச் சுரங்கத்திற்கு அருகில் வாழ்ந்த மக்களுக்கு வந்தன.

கந்தக விஷத்தால் வரும் நோய்கள்

கந்தகத்தின் ஆங்கிலப் பெயர் சல்ஃபர் (Sulphur). . கந்தகம் ஆக்சிஜனோடு சேரும்பொழுது அது கந்தக வாயுவாகிறது. கந்தக வாயுவால் புற்று நோய் வராது. ஆனால், ஆஸ்த்மா, தோல் வியாதிகள், கண் அரிப்பு, நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஆகியவை ஏற்படும். அதைத்தவிர, கந்தகவாயு வான்வெளியில் மேகங்களுடனும் கலந்து விடும். அப்படிப்பட்ட கந்தக மேகங்களிலிருந்து பொழியும் மழை அமில மழையாக இருக்கும். அமில மழை பொழிந்தால் நிலம், கட்டடம், வாகனங்கள் எல்லாம் நாசமாகும். இப்படி எல்லா நாசங்களும் சாம்பியாவில் நடந்தன. ஆனால், அனில் அகர்வாலின் வேதாந்தா இதற்கெல்லாம் நாங்கள் காரணமல்ல என்று முழுப் பூசணியை சோற்றில் மறைத்தது.

நீதிமன்றம்

வேதாந்தாவின் நாசகாரச் செயல்களை எதிர்த்து, பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக சாம்பியா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். அந்த வழக்கில், நீதிபதி குன்ஹாவைப் போன்ற ஒரு நீதிபதி வேதாந்தாவிற்குக் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் ஊழல் அரசியல்வாதிகளோடும், அதிகாரிகளோடும் கைகோ(ர்)த்துக்கொண்டு அநியாயங்கள் செய்து வருகின்றார்கள் என்றும் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

வேதாந்தா அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தது. மேல் முறையீட்டை குமாரசாமிகள் விசாரித்தார்கள். கொஞ்சம் புத்திசாலி குமாரசாமிகள். வேதாந்தாவிற்கு எதிராக ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்பின் கண்டனத்தை மட்டும் விட்டுவிட்டு அவர் வழங்கிய நஷ்ட ஈட்டை அந்த சாம்பியா நாட்டு ஏழை மக்களுக்கு வழங்கத் தேவையில்லை என்று தீர்ப்பு கூறி விட்டார்கள்.

அந்த தைரியத்தில்தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நீதிமன்றத்தின் ஆணை மூலம் திறந்த நிர்வாகம், நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என்று கொக்கரிக்கின்றது. ஆனால், இந்த முறை நீதிமன்றத்தில் வாதாட உலகெங்கும் வாழும் தமிழர்கள் வழக்கறிஞர்களைக் கொண்டு வருவார்கள். தமிழ்நாடு அரசின் தேங்காய்மூடி வழக்கறிஞர்களை நம்பி இருக்கப் போவதில்லை.

படங்கள் நன்றி: Foil Vedanta

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT