Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது யார்? எப்.ஐ.ஆர் என்ன கூறுகிறது?

Published on 28/05/2018 | Edited on 28/05/2018


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை முதல்வர் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துக்கொள்கிறார் என்றால் துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி அளித்தது யார் என்ற கேள்வி மக்களிடையே பெரிதும் எழுந்து வந்தது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

13 பேர் உயிரை பறித்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் தெரியாமல் இருந்து வருகிறது. முதல்வர், துணை முதல்வர்கள் செய்தியாளர்களை சந்தித்த போதும் இதற்கு சரியாக பதிலளிக்கவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ ஒரு படி மேலே சென்று துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நானும் உங்களைப் போல் தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்துக்கொண்டேன் என்கிறார்.. அப்படியானால் துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது தான் யார் என்ற கேள்வி வலுத்து வந்தது.

இந்நிலையில், 2 துணை வட்டாட்சியர்கள் தான் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை வட்டாட்சியர்கள் கண்ணன் மற்றும் சேகர் ஆகிய இருவரின் பெயர்கள் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளன. வன்முறை ஏற்பட்ட நிலையில், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்