ADVERTISEMENT

டீச்சரால் தாக்கப்பட்ட மாணவனின் உயிர் போராட்டம்!

06:34 PM Oct 01, 2020 | manosoundar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ழை, எளிய, பாமர மக்கள் பாதிக்கப்பட்டு புகார் கொடுத்தால் அதிகாரவர்க்கம் எப்படியெல்லாம் உண்மையை மறைக்கும் என்பது பல சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படித்தான் இதுவும்.

சென்னை மேடவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2020 பிப்ரவரி 4-ந்தேதி எட்டாம் வகுப்பு மாணவர்களான அஜ்மல், கார்த்திக் இருவரையும் தமிழாசிரியை உமா மகேஸ்வரி ஸ்கேலால் கடுமையாக அடித்திருக்கிறார். வீட்டிற்குச் சென்ற கார்த்திக் தனது பெற்றோரிடம் சொல்லாமல் சோகமாக படுத்திருந்திருக்கிறான். அஜ்மலின் தாய் ஃபாத்திமாவும் கார்த்திக்கின் தாய் ரேகாவும் பேசிக்கொண்டபோதுதான் பள்ளியில் ஆசிரியையால் தாக்கப்பட்ட தகவல் தெரிந்திருக்கிறது. இந்நிலையில், கார்த்திக்கின் கண்கள் வீங்க ஆரம்பித்து தலைவலியும் அதிகமாகியிருக்கிறது. அதற்குப் பிறகு என்ன நடந்தது?



கார்த்திக்கின் தாய் ரேகா நம்மிடம், "மறுநாள், பள்ளிக்கூடத்துக்குப் போயி ஹெச்.எம் கலைவாணிக்கிட்ட கேட்டப்போ விசாரிக்கிறேம்மான்னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டாங்க. கண்ணு வீங்கியிருக்கிறதைப் பார்த்துட்டு ஆஃபிஸ் ரூம்ல இருந்தவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குப் போகச்சொன்னார். அங்க, அதிக பணம் செலவாகும்னு சொன்னதும் அவ்வளவு பணமில்லைன்னு சொல்லிட்டு மருந்து, மாத்திரை மட்டும் வாங்கிட்டு வந்துட்டோம். அரசு கண் மருத்துவமனைக்குப் போனோம். ஆபரேஷன் பண்ணினாங்க. கண்ணுல ரத்தக்கட்டு மாதிரி இருக்குன்னு சொல்லி ட்ரீட்மெண்ட் பண்ணினாங்க. கண் மருத்துவமனையில ஒன்றரை மாதம் இருந்தோம். கண்ணுக்குள் ரத்தம் கசியுதுன்னு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை நரம்பியில் துறைக்கு அனுப்பிட்டாங்க. 10 நாள் இருந்தோம். சரியான ட்ரீட்மெண்ட் பண்ணல.


என் குழந்தையோட நிலைமையைப் பார்த்துட்டு பக்கத்து பெட்டுல இருந்தவர் மீடியாவுக்கு தகவல் கொடுத்துட்டாரு. அப்புறம் சைல்டு லைன், மனித உரிமை ஆணையத்திலிருந்தெல்லாம் வந்து விசாரிச்சாங்க. மீடியாக்கிட்ட போனதால கோபமாகி, திரும்பவும் கண் மருத்துவமனைக்கே எங்களை டீன் ஜெயந்தி அனுப்பிட்டாங்க. அங்கப் போனதும், மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் டெஸ்டெல்லாம் பண்ணி, ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சவங்க கொஞ்சநாள் கழிச்சி, ‘உங்கப்பிள்ளைக்கு கண்ணுல கேன்சர் இருந்திருக்கு. அந்த, இடத்துல அடிபட்டதால இப்போ தெரியவந்திருக்கு. இனிமே ஒண்ணும் பண்ணமுடியாது. இருக்கிறவரை சந்தோஷமா இருக்கட்டும்ன்னு சொல்லிட்டாங்க. எனக்கு தம்பி பாப்பா பொறக்கப்போகுது... நான் கொஞ்சணும். சீக்கிரம் ஆபரேஷன் பண்ணுங்கன்னு சொன்னான். ஆனா, இப்போ வீட்டுல படுத்த படுக்கையா கிடக்கிறான்'' என்று கண்ணீர் வடிக்கிறார்கள் கார்த்திக்கின் பெற்றோர்.

மாணவரின் மருத்துவ அறிக்கையை வைத்து டாக்டர்களிடம் நாம் விசாரித்தபோது, "மாணவரின் கண்ணுக்குள் ஏற்கனவே கேன்சர் பாதிப்பு இருந்திருக்கிறது. இந்தச் சூழலில், அந்த இடத்தில் தாக்கப்பட்டு வீக்கம் ஏற்பட்டதால் பரிசோதித்து பார்க்கும்போது மிகவும் ஆபத்தான வகை கேன்சர் இருப்பது உறுதியாகியிருக்கிறது. ஆனால், மாணவனை ஆசிரியர் தாக்கியதற்கான நட வடிக்கை எடுக்கவேண்டுமல்லவா?'’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.


பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் 2020 மார்ச்- 13ந் தேதி எஸ்.ஐ. இளங்கனியிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள் பெற்றோர். உங்களுக்கு ஸ்பான்சர் செய்யச் சொல்கிறேன் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளைக் கூறி மூளைச்சலவை செய்த எஸ்.ஐ., கடைசிவரை அப்புகார் குறித்து விசாரித்து பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.



இதுகுறித்து, எஸ்.ஐ. இளங்கனியிடம் நாம் கேட்டபோது, "விசாரணையில் ஆசிரியையால் மாணவர் தாக்கப்படவில்லை என்பது தெரியவந்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் பெற்றோரை வரச்சொல்லுங்கள் விசாரிக்கிறேன்'' என்றார்.



மாவட்ட கல்வி அலுவலர் தாமோதரனிடம் நாம் கேட்டபோது, "விசாரித்து அறிக்கையை கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு கொடுத்துவிட்டேன். அது, ரகசியம்'’ என்றவர், பிறகு "ஆசிரியரால் மாணவர் தாக்கப்படவில்லை'' என்று அவரே ரகசியத்தை உடைத்தார்.


காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத் தலைவர், உறுப்பினர் விசாரித்ததில் ஆசிரியரால் தாக்கப்பட்டேன் என்று மாணவன் கார்த்திக் கொடுத்த வாக்கு மூலத்தை டி.சி.பி.ஓ எனப்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகனுக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது.



இந்நிலையில், 2020 செப்டம்பர் -7ந் தேதி உங்களுக்கு உதவி செய்ய வந்திருக்கிறோம் என்று ஆசிரியை கலைச்செல்வி, வெள்ளக்கல் பள்ளி ஏ.ஹெச்.எம்மும் வந்து ஆசிரியையால் மாணவர் தாக்கப்பட்டதை மறைக்கும் வகையில் ஒரு கடிதத்தை டைப் செய்துவந்து எழுத படிக்கத் தெரியாத பெற்றோர்களிடம் கையெழுத்து வாங்க முயற்சித்திருக்கிறார்கள். குற்றஞ்சாட்டப் பட்ட ஆசிரியை உமாமகேஸ்வரி நம்மிடம் விளக்கம் கொடுக்கவில்லை.

இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆங்கிலோ, குழந்தைகள் நலக்குழும காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் “மீண்டும் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்" என்று உறுதி அளித்தார்கள்.


ஆசிரியர் அடித்ததால் கேன்சர் ஏற்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், பாதிக்கப்பட்ட பெற்றோர்களை அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மிரட்டுவது ஏன்? விசாரணையை முடக்குவது ஏன்? காவல்துறையும் கல்வித்துறையும் இதற்குத் துணை போவது ஏன்?


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT