Skip to main content

தூத்துக்குடியில் 'கேந்திரிய வித்யாலயா' பள்ளி... மத்திய அமைச்சரை கனிமொழி எம்.பி நேரில் சந்தித்து வலியுறுத்தல்!

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

தூத்துக்குடியில் மத்திய அரசின் 'கேந்திரிய வித்யாலயா' பள்ளி அமைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பாராளுமன்ற குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரை நேரடியாகச் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

thoothukudi kendriya vidyalaya school kanimozhi mp meet minister

இதுகுறித்து, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர். ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்கு கனிமொழி எம்.பி எழுதிய கடிதத்தில், "எனது தொகுதியான தூத்துக்குடியில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களின் ஊழியர்கள் கோரிக்கையான, தூத்துக்குடியில் மத்திய அரசுப் பாடத்திட்ட பள்ளியான கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும் என்பதை  தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். எனது தொகுதியில் சுங்கத்துறை, நெய்வேலி அனல் மின் கழகம், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, கடலோர காவல்படை, சிர்கோனியம் காம்ப்ளக்ஸ், அணுமின் கழகத்துக்கு உட்பட்ட கனநீர் ஆலை( ஹெவி வாட்டர் பிளான்ட்), துறைமுகம் என மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன.

thoothukudi kendriya vidyalaya school kanimozhi mp meet minister

இந்நிறுவனங்களின் அலுவலர்கள் தங்கள் குழந்தைகளை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்கத் தயாராக இருக்கிறார்கள். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் கேந்திரிய வித்யாலாயா சங்கேதனுக்கு கடந்த பிப்ரவரி 19- ஆம் தேதி எழுதிய கடிதத்தில், தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலாயா பள்ளி அமைப்பதற்கான நிலம், உள்கட்டமைப்பு வசதிகள் ரீதியாக தாங்கள் உதவத் தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்திருக்கிறது. மத்திய, மாநில அரசு ஊழியர்களுடைய குழந்தைகள் இந்த பள்ளியால் பயன்பெறுவார்கள்" என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இச்சந்திப்பில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர். ரமேஷ் பொக்ரியால் தான் எழுதிய இரண்டு புத்தகங்களை கனிமொழி எம்.பி.க்கு அளித்தார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.