ADVERTISEMENT

திவால் நிலையை நோக்கி நகரும் இலங்கைக்கு இந்தியா செய்யவுள்ள பேருதவி!

04:02 PM Jan 21, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

இலங்கை அரசின் வெளிநாட்டு கடன் அளவு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், அந்நிய செலாவணி பற்றாக்குறையினால் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திவால் நிலையை எட்டியுள்ளது.

ADVERTISEMENT

இலங்கை அரசின் அந்நிய கடன்களின் மொத்த அளவு 3,600 கோடி டாலராக அதிகரித்துள்ளது. அந்நிய செலவாணி கையிருப்பு 160 கோடி டாலர்களாகக் குறைந்துள்ளது. ஆனால் நடப்பாண்டில் மட்டும் 730 கோடி டாலர் அளவுக்கு அந்நிய மற்றும் உள்நாட்டு கடன்களுக்கான வட்டி மற்றும் அசல் தொகையைத் திருப்பி செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

உணவுப் பொருட்கள், உரங்கள், கச்சா எண்ணெய், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய தேவைப்படும் டாலர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு 12.1% ஆக அதிகரித்துள்ள நிலையில், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளன.

இம்மாத இறுதியில் 50 கோடி டாலர் மதிப்புடைய சர்வதேச கடன் பாத்திரங்கள் முதிர்ச்சி அடைவதால், அதனை உடனடியாகத் திருப்பிச் செலுத்த வேண்டிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இம்மாத இறுதியில் இலங்கை அரசின் அந்நிய செலாவணி கையிருப்பு தீர்ந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

உடனடி தேவைகளைச் சமாளிக்க, 43.7 கோடி டாலர் அளவுக்கு இம்மாத இறுதியில் புதிதாக கடன் வாங்க வேண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்க்கு பதிலாக, மாதம் 50 லட்சம் டாலர்கள் மதிப்பிலான தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்று நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களை மூடி, அதன் மூலம் டாலர் செலவுகளைக் குறைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறுகின்றன. இந்த நிலையில் சீனா அளித்த 500 கோடி டாலர் கடன்களைத் திருப்பி செலுத்த, இலங்கை அரசு அவகாசம் கோரியுள்ளது.

இதனிடையே, இந்தியாவிடமிருந்து இலங்கை அரசு சுமார் 7,391 கோடி ரூபாய் கோரிய நிலையில், பெட்ரோலிய பொருட்களை வாங்குவதற்காக, இலங்கைக்கு இந்திய அரசு சுமார் 3,730 கோடி கடன் உதவியை வழங்கியுள்ளது. இந்த தகவலை இலங்கைக்கான இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை நிதித்துறை அமைச்சர் இடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இம்மாத முற்பகுதியில் 900 மில்லியன் அமெரிக்க டாலர் அந்நியச்செலவாணி ஆதரவாக இந்தியாவால் வழங்கப்பட்டது

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT