ADVERTISEMENT

கூட்டணியில் பிளவா? காங்கிரஸ் பதில்! 

01:01 PM Jun 22, 2018 | rajavel


ராகுல்காந்தி - கமல் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை எழுப்பியிருக்கிறது. இந்த சந்திப்பு புதிய கூட்டணியை உருவாக்கும் என்றும், அதில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட மேலும் சில கட்சிகளை இணைக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகின.

ADVERTISEMENT

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி:-

ADVERTISEMENT

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு. சாதாரண சந்திப்பு. இதனை பெரிதுப்படுத்த தேவையில்லை. ஒரு அரசியல் கட்சித் தலைவர், இன்னொரு அரசியல் கட்சித் தலைவரை சந்திப்பதில் என்ன இருக்கிறது. இந்த சந்திப்புக்கு அரசியல் சாயம் பூசத் தேவையில்லை.

இரண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திக்கும்போது அரசியல் குறித்துதான் பேசுவார்கள். வேறென்ன பேசுவார்கள். தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகள் இந்திய அளவில் பேசப்படுகிறது. ஆகையால் தமிழக பிரச்சனைகள் குறித்து ராகுலும் கமலும் பேசியிருப்பது சாதாரண விஷயம்தான். திருமாவளவன் ராகுல்காந்தியை சந்திப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே திருமாவளவன் ராகுலை சந்தித்திருக்கிறார். தற்போதைய சந்திப்பும் மரியாதை நிமித்தமானதுதான்.

இந்த சந்திப்புகள் புதிய கூட்டணியை உருவாக்குமா என்ற அளவுக்கு தற்போதைக்கு யோசிக்க வேண்டியதில்லை. தேர்தல் கால பிரச்சனைகளை தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்வார்கள். இரண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திப்பு தேர்தலை நோக்கியே போக வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது.


ராம்விலாஸ் பாஸ்வானுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அவ்வளவு நெருக்கமான தொடர்புகள் இருந்தது. இன்றும் இருக்கிறது. ஆனால் அது தேர்தல் கூட்டணியாக மாறவில்லை. மம்தா பானர்ஜிக்கும் சோனியா காந்திக்கும் நெருக்கமான நட்பு இன்றும் இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் மேற்கு வங்கத்தில் தனித்தனியாகத்தான் தேர்தல் களத்தை சந்தித்தது.

தனிப்பட்ட சந்திப்பு, கருத்து பரிமாற்றங்கள் என்பது வேறு. அதையே தேர்தல் களத்திற்கு கொண்டு செல்வது என்பது வேறு. திமுக - காங்கிரஸ் கூட்டணி எப்போதும்போல் சுமூகமாகத்தான் உள்ளது. அதில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றார் உறுதியாக.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT