Skip to main content

காங்கிரசை வெளியேற்றுகிறது திமுக?

 

திமுக-காங்கிரஸ் கட்சிகளிடையே ஏற்பட்ட உரசல் விரிவடைந்திருப்பதால் கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது திமுக!  
 

உள்ளாட்சி தேர்தலில் சீட் ஒதுக்கீடு விவகாரத்தில் ஏற்பட்ட அதிர்ப்தியால் திமுகவை விமர்சித்திருந்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. ப.சிதம்பரத்தின் கண்டிப்புக்குப் பிறகு திமுக தலைமையை சமாதானப்படுத்தும் வகையில் மீண்டும் அழகிரி ஒரு அறிக்கையை வாசித்தப்போதும் தனது கோபத்தை அறிவாலயம் குறைத்துக்கொள்ளவில்லை. 

 

mks

 


 

’’ இதன் எதிரொலிதான், பாஜகவின் தேசிய குடியுரிமை சட்டத்துக்கும், குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கும் எதிராக  சோனியா தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டு ஆலோசனைக் கூட்டத்தை அவசரம் அவசரமாக புறக்கணித்தார் மு.க.ஸ்டாலின். திமுக சார்பில் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தினார்  ‘’ என்கிறது அறிவாலாயம்.
 

இது தொடர்பாக திமுக தரப்பில் நாம் விசாரித்தபோது, ‘’ உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை எந்த சூழலிலும் திமுக மீறவில்லை. காங்கிரசுக்கு அதன் வலிமைக்கேற்பவும் தன்மைக்கேற்பவும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. காங்கிரஸ் பார்வையில் அந்த எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கலாம். அதற்கு திமுக ஒன்றும் செய்ய இயலாது. அவர்கள் பார்வையில் குறைவான இடங்கள் கொடுக்கப்பட்டதாக இருக்கும் சூழலிலேயே, ஆளும் கட்சி வீசும் வலையில் விழுந்திருக்கிறார்கள். இன்னும் அதிக இடங்களைத் தந்திருந்தால் ஒட்டு மொத்தமாக அதிமுக ஆதரவாளர்களாக மாறியிருப்பார்கள். அது, திமுகவுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். 

 


 

ஆளும் கட்சியிடம் விலை போய்விடுவார்கள் என கருதிதான் குறைந்த எண்ணிக்கையில் சீட் கொடுத்தனர் மாவட்ட செயலாளர்கள். சீட் பங்கீட்டில் திமுக மீது அதிர்ப்தியிருந்தால், காங்கிரஸ் சுயேட்சையாக போட்டியிட்டு ஜெயித்து அதன் பிறகு திமுக மீது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும். ஆனால், காங்கிரஸ் என்ன செய்தது? கட்சியின் கை சின்னத்திலேயே போட்டியிட்டனர். சின்னத்தில் போட்டியிடுவதற்கு கே.எஸ்.அழகிரியின் கடிதம் அவசியம். அப்படியானால், மாநில தலைமையின் விருப்பம் மற்றும் அனுமதியின் பேரில்தானே திமுகவை எதிர்த்து போட்டி வேட்பாளர்களை நிறுத்தியது காங்கிரஸ் ? இதன் பின்னணியில்  ப.சிதம்பரத்தின் ஆதரவும் யோசனையும் இருந்துள்ளது. கூட்டணியின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் தலைவர்கள் கேள்விக்குறியாக்கியிருப்பதால் எதிர்வரும் மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி தொடர்வது கஷ்டம். இதனை காங்கிரசின் டெல்லி தலைமைக்கு உணர்த்துவதற்காகத்தான் சோனியா கூட்டிய கூட்டத்தை திமுக புறக்கணித்தது ‘’ என விவரிக்கிறார்கள் திமுக மா.செ.க்கள்.
 

இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி டி.ஆர்.பாலு, கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் திமுகவினர் கவலையில் இருந்தனர். கூட்டணி தர்மத்தை காக்கவில்லை என்று சொல்கிறார்கள். அது தவறான அறிக்கை. அந்த அறிக்கையை அவர் தவிர்த்திருக்கலாம் என்றார்.

 


 

காங்கிரஸ் உடனான கூட்டணி பழைய நிலைமைக்கு திரும்பியிருக்கிறதா? என்ற கேள்விக்கு, பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறதா இல்லையா என்பதை காலம் பதில் சொல்லப்போகிறது என்றார். 
 

அதேநேரத்தில் டெல்லியில் சோனியாகாந்தியை கே.எஸ்.அழகிரி இன்று காலை சந்தித்தார். இந்த சந்திப்பிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரசும் திமுகவும் இணைந்த கரங்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. இணைந்த கரங்கள் பிரிய வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்