ADVERTISEMENT

“அதில் உள்ளதுபோல் நீ என்னிடம்..” -டாக்டர் மனைவியின் உயிரைப் பறித்த டார்ச்சர்!

10:21 AM Sep 30, 2019 | rajavel

ADVERTISEMENT

பெரும் கோடீஸ்வரர் என்றால் காவல்துறையினர் எந்த அளவுக்கு வளைந்து கொடுப்பார்கள்? ஒரு உயிரே போனாலும் எப்படி கண்டும் காணாமல் நடந்துகொள்வார்கள்? என்பதற்கு ஷப்னா தற்கொலை வழக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.


ADVERTISEMENT



சிவகாசியில் சண்முகய்யா என்பவர் பெரும் தொழிலதிபர். பட்டாசு ஆலைகள், மினி பேருந்துகள், பெட்ரோல் பல்க், நட்சத்திர விடுதி என சகலமும் நடத்துகிறார். இவர், தனது மகன் மகேந்திரனுக்கு பல் மருத்துவம் படித்துக்கொண்டிருந்த ஷப்னாவை கடந்த 1-12-2016 அன்று திருமணம் செய்து வைக்கிறார். ரியல் எஸ்டேட் தொழில் பார்க்கும் ரவிகுமார், திருமணத்தின்போது தன் மகள் ஷப்னாவுக்கு சீதனமாக 85 பவுன் நகைகள் போட்டார். விருதுநகர் மாவட்டமே அதிரும் அளவுக்கு தடபுடலாக மகேந்திரன் – ஷப்னா திருமணம் நடந்தது.


திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள்கூட ஆகாத நிலையில், ஆமத்தூரிலுள்ள தாய் வீட்டுக்கு விரட்டப்பட்டார் ஷப்னா. கடந்த 27-4-2018 அன்று மகேந்திரனிடமிருந்து அவருக்கு விவகாரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அடுத்த மாதத்திலேயே, 28-5-2018 அன்று தன் சாவுக்கான காரணத்தை விரிவாக எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஒரு வருடம் 4 மாதங்கள் கழிந்தபிறகு, ஷப்னாவின் தற்கொலைக்குத் தூண்டுதலாக இருந்த அவருடைய கணவர் மகேந்திரனையும், மாமனாரான தொழிலதிபர் சண்முகய்யாவையும் கடந்த 26-9-2019 அன்று சாவகாசமாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

ஷப்னாவுக்கு என்ன நடந்தது? தாமதமான நடவடிக்கை ஏன்?

பல் மருத்துவம் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த ஷப்னாவைத் திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து படிக்கவைப்போம் என்று அவருடைய பெற்றோரிடம் உறுதியளித்தது மகேந்திரன் குடும்பம். ஆனால், பிடிஎஸ் படிப்பை முடிப்பதற்கு மூன்று மாதமே இருந்தபோது, அவரைப் படிக்கவிடாமல் அத்தனை இடைஞ்சல்களும் செய்தனர். அனைத்தையும் தாங்கிக்கொண்டு பிடிஎஸ் முடித்த ஷப்னாவை மெடிக்கல் போர்டில் பதிவு செய்வதற்கு அனுமதிக்கவில்லை. காரணம் – பி.எஸ்.சி., பட்டப்படிப்பு படித்ததாகப் பொய் சொல்லி திருமணம் செய்துகொண்ட மகேந்திரன், அப்படி எதுவும் படிக்கவே இல்லை. அந்தத் தாழ்வு மனப்பான்மையின் காரணமாக, பிடிஎஸ் படித்த ஷப்னாவை பலவழிகளிலும் கொடுமைப்படுத்தினார். “கோடி கோடியாக எங்களுக்குச் சொத்து இருக்கிறது. நீ டாக்டர் வேலைக்குப் போனால் என் குடும்பத்திற்கு அசிங்கம்.” என்று ஷப்னா படித்த படிப்பையே மறந்துவிடும்படி மிரட்டியிருக்கிறார். காலை 7 மணிக்கெல்லாம் குடிக்க ஆரம்பித்துவிடும் மகேந்திரன் இரவு 12 மணிக்கு மேல்தான் வீட்டுக்கு வருவார். அதுவரையிலும் ஷப்னா சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளார்.


மகேந்திரனின் தந்தை சண்முகய்யா ரவிகுமாரிடம் “உன்னிடம் 20 லட்ச ரூபாய் நான் வாங்கியிருக்க வேண்டும். அப்படி வாங்காமல் என் மகனை உன் மகள் கழுத்தில் தாலி கட்ட வைத்துவிட்டேன். ரூ.1000 கொடுத்தால் போதும். 17 வயது குட்டி தினமும் என் மகனுக்குக் கிடைப்பாள்.” என்று பேசி கேவலப்படுத்தியிருக்கிறார். மாமியார் தனலட்சுமியோ “என்ன எந்த நேரமும் மினுக்கிக்கிட்டிருக்க. சரிடி.. நீ அழகிதான். டாக்டருக்கு படிச்சும் தொலைச்சிருக்க. என் மகன் உனக்கெதுக்கு? இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கோ. மொதல்ல இங்கேயிருந்து போயிரு.” என்று மருமகளைத் திட்டித் தீர்ப்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்.

கோடிகளில் புரள்வதால், உலகத்திலுள்ள அத்தனை கெட்ட பழக்கங்களும் மகேந்திரனுக்கு உண்டு. மனைவியிடம் சொல்லாமல் பலநாட்கள் வெளியூர் போய்விட்டு, “நான் அங்கே எப்படி ஜாலியா இருந்தேன் தெரியுமா?” என்று தனது தகாத செயல்களை மனைவியிடம் விவரித்து கெத்து காட்டியிருக்கிறார். எந்த நேரமும் செல்போனில் அந்த மாதிரி படங்களை யூ-டியூபில் பார்த்துவிட்டு, ஷப்னாவிடம் காட்டி அதுபோல் தன்னிடம் நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறார். அதுபோன்ற செயல்களுக்கு ஷப்னா சம்மதிக்காத நிலையில் “நீ டாக்டருக்கு படிச்சவதான. மெடிக்கல் காலேஜ்ல என்னென்ன நடக்கும்? அங்கே நீ எப்படி இருந்திருப்ப? எல்லாம் எனக்குத் தெரியும்.” என்று அபாண்டமாகப் பழிபோட்டு பேசியிருக்கிறார்.


கசப்பான இந்த வாழ்க்கையையும் நீடிக்கவிடாமல், ஷப்னாவை அவருடைய தாய்வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டனர். விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மகேந்திரன், தான் விவாகரத்து கேட்பதற்கான காரணம் என்று ஷப்னாவின் நடத்தை குறித்து தன் இஷ்டத்துக்குப் பொய்க்குற்றம் சுமத்தியிருக்கிறார். வசதி படைத்தவர்கள் என்பதால், விவகாரத்து என்ற பெயரில் தன்னைக் கோர்ட்டுக்கு இழுத்து, நடக்காததை நடந்ததுபோல் சொல்லி அசிங்கப்படுத்திவிடுவார்கள் என்ற பயத்தினாலேயே தற்கொலை செய்திருக்கிறார்.



தற்கொலைக்கான காரணங்களைத் தன் கைப்பட எழுதிவைத்துவிட்டே உயிரை விட்டிருக்கிறார் ஷப்னா. ரவிகுமாரும், தான் அளித்துள்ள புகாரில் ஷப்னாவுக்கு நடந்த கொடுமைகளைக் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், காவல்துறை மகேந்திரனையும் சண்முகய்யாவையும் நெருங்கவே இல்லை. விருதுநகர் மாவட்ட காவல்துறையின் முக்கிய அதிகாரி ஒருவர், சண்முகய்யாவுக்குச் சொந்தமான ஆர்.எஸ்.ஆர். ரெசிடென்ஸி என்ற நட்சத்திர ஓட்டலுக்கு வந்து, இளம் பெண்களிடம் மசாஜ் செய்துகொள்வது வழக்கமாம். அதிகாரியுடனான அந்த நெருக்கம்தான், சண்முகய்யா மற்றும் மகேந்திரன் மீது நடவடிக்கை பாய்வதைத் தடுத்திருக்கிறது. இதற்காகவே, காவல்துறை வட்டாரத்தில் ரூ.30 லட்சம் வரை இறைத்தாராம் சண்முகய்யா.



“வாய்மையே வெல்லும் என்பது ஷப்னா தற்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைதானதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது. சண்முகய்யாவுக்கும் மகேந்திரனுக்கும் ஆபத்பாந்தவனாக இருந்த அந்த முக்கிய அதிகாரி விருதுநகர் மாவட்டத்திலேயே இல்லாதபோது, இந்த வழக்கு விருதுநகர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவபிரசாத் கவனத்துக்கு வந்தது. ‘தற்கொலை செய்துகொண்ட ஷப்னா எழுதிய கடிதம் எங்கே? விசாரணை ஏன் முழுமையாக நடக்கவில்லை? நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை?’ என்று அவர் ஆமத்தூர் காவல்நிலையத்தைக் கேள்விகளால் உலுக்கினார். அதன்பிறகே, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.” என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.


கணவரையும் மகனையும் கைது செய்த காவல்துறையினரிடம் தனலட்சுமி “எனக்கு அந்த அரசியல் தலைவரைத் தெரியும். இந்த அரசியல் தலைவரைத் தெரியும். அதிகாரிகள் அத்தனை பேரையும் தெரியும். அவருக்கு போன் போடு; இவருக்கு போன் போடு. என் புருஷன் மேலயா கை வைக்கிறீங்க. உங்களுக்கு இந்த வேலையே இல்லாம பண்ணிருவேன்.” என்று ‘சவுண்ட்’ விட்டு, சிலரைத் தொடர்புகொள்ளவும் செய்திருக்கிறார். சிலர் அழுத்தமும் தந்திருக்கின்றனர். அவர்களிடம் ‘வாழ வேண்டிய ஒரு பெண்ணை, அதுவும் மருத்துவம் படித்தவரை உயிரைவிடச் செய்திருக்கிறார்கள். இதிலெல்லாம் தலையிடாதீர்கள்.’ என்று மிடுக்குடன் விரைப்பு காட்டியிருக்கிறது காவல்துறை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT