ADVERTISEMENT

"பிள்ளை மாதிரி நடத்த மாட்டேன், ப்ரெண்ட் மாதிரி தான் இருப்போம்" -கதறிய தந்தைக்கு ஆறுதல் சொல்ல தெரியவில்லை... சிவசங்கர் உருக்கம்...

09:54 AM Sep 10, 2020 | rajavel

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே எலந்தகுழி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அக்கிராம மக்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாணவர் விக்னேஷ் தந்தை விஸ்வநாதனை சந்தித்து ஆறுதல் கூறினார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.எஸ்.சிவசங்கர்.

ADVERTISEMENT

பின்னர் நம்மிடம் அவர்,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் மருதூர் ஊராட்சி இலந்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மூத்த மகன் தான் விக்னேஷ். பத்தாம் வகுப்பில் 487 மதிப்பெண்கள் எடுத்த புத்திசாலிப் பிள்ளை.

மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த எளிய ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவன். ஒரு சிறு ஓட்டு வீடும், சிறிதளவு நிலமுமே சொத்து. அப்பாவும், அம்மாவும் உடல்நலம் குன்றியவர்கள். ஆனால் பிள்ளைகள் விருப்பம் போல் படிக்க வைக்க வேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள்.

"பிள்ளை மாதிரி நடத்த மாட்டேன், ப்ரெண்ட் மாதிரி தான் இருப்போம்", என கதறுகிறார் விஸ்வநாதன். பத்தாம் வகுப்பில் 487 மதிப்பெண்கள் எடுத்த மகனை தம் ஊருக்கு அருகில் உள்ள செந்துறையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைத்தார். அவரது பொருளாதார நிலைக்கு இதுவே அதிகம். இருப்பினும் மகனின் மருத்துவக் கல்வி கனவை நிறைவேற்ற தன்னால் முடிந்ததை செய்தார்.

+2ல் 1006 மதிப்பெண்கள் எடுத்தான். நீட் தேர்வு எழுதினான், வெற்றி பெற இயலவில்லை. ஆனால் குறிக்கோளை அடைய விக்னேஷும், குடும்பமும் முடிவெடுத்தது. நிலத்தை விற்று மகனை கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள சைதன்யா கோச்சிங் சென்டரில் சேர்த்தார் விஸ்வநாதன். அந்த வருட நீட் தேர்வில் 370 மதிப்பெண்கள் எடுத்தான் விக்னேஷ். குறிக்கோள் நிறைவேறவில்லை. மீண்டும் நீட் தேர்வு எழுத முடிவெடுத்தார்கள்.

குடும்பத்திற்கு சுமை ஏற்ற விரும்பாத விக்னேஷ் தானே படிக்க முடிவெடுத்தான். ஆனாலும் துறையூர் சௌடாம்பிகா பள்ளியில் நடத்தப்படும் நீட் கோச்சிங்கில் சேர்த்தார் விஸ்வநாதன். நல்ல முறையில் படித்து வந்தான். கரோனா பெருந்தொற்றால் பயிற்சி நிலையம் மூடப்பட்டது. இலந்தங்குழி திரும்பினான் விக்னேஷ். வீட்டில் இருந்து படித்து வந்தான்.

வீட்டை விட்டு வெளியில் செல்லாத பிள்ளை. தான் உண்டு, தன் படிப்பு உண்டு என்று இருக்கின்ற பிள்ளை. ஆன்லைன் வகுப்புக்காக சிக்னல் கிடைக்கவில்லை என்றே வீட்டுக்கு பின்புறம் உள்ள வயல், அடுத்த தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வானாம்.

இந்த முறை எப்படியும் மருத்துவம் சேர்ந்து விடுவேன் என்று உறுதியாக இருந்திருக்கிறான். நீட் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்படாத சூழலில் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்க வேண்டும். ஆனால் வெளியில் தெரியவில்லை.

"நீட் தேர்விற்கு போக, ஜெயங்கொண்டம் போய் புதுசட்டை எடுத்துக்கிட்டு வந்தோம். கீழமாளிகையில இருக்கிற குலதெய்வம் கோவிலுக்கு போய்ட்டு வந்தோம். ராத்திரி ஒன்னா உக்காந்து தான் சாப்பிட்டோம். எப்பவும் விடியற்காலை 4 மணிக்கு ஏந்திரிச்சி படிக்க ஆரம்பிச்சிடுவான். ராத்திரி நல்லா தான் படுத்தான்", என சொல்லி கதறி அழுதார் விஸ்வநாதன்.

வீட்டின் பின் கதவு திறந்திருக்கிறது, மகனை காணவில்லை என்று தேடி சென்றிருக்கிறார். வீட்டின் பின்னால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வயலில் இருக்கும் கிணற்றில் பிணமாக தான் கிடைத்திருக்கிறான் விக்னேஷ்.

விஸ்வநாதனுக்கு ஆறுதல் சொல்ல சென்ற நாங்கள் என்ன சொல்லி தேற்றுவது எனத் தெரியாமல் வாய் மூடி அமர்ந்திருந்தோம். உடல் நலம் இல்லாத தாய், தன் மகன் இறந்த அதிர்ச்சியில் உடல்நலம் குன்றி மருதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார்.

அனிதாவில் துவங்கிய நீட் பலி, விக்னேஷில் வந்து நிற்கிறது. இந்த ஆண்டே இன்னும் சில மாணவ, மாணவியர் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (08.09.2020) தான் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்கள் தலைமையில் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்றும் (09.09.2020) உயிர்பலி தொடர்கிறது. அன்று தொடங்கி தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த நீட் தேர்வை எதிர்த்து வருகிறார். தி.மு.க தான் போராடி வருகிறது.

மத்திய பா.ஜ.க அரசின் வற்புறுத்தலால் தமிழகத்தில் நீட் தேர்வை அமல்படுத்திய அ.தி.மு.க அரசு, இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் தான் கண் திறப்பார்கள் எனத் தெரியவில்லை என கண்டனம் தெரிவித்த சிவசங்கர், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றார் உறுதியாக.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT