ADVERTISEMENT

"புத்துயிர் பெறும் ஓலைப்பெட்டிதொழில்... ஊக்குவிக்குமா தமிழகஅரசு.?"

05:15 PM Oct 13, 2018 | nagendran

ADVERTISEMENT

30 ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டங்களில் சீனிமிட்டாய், காராச்சேவு எல்லாம் பார்சல் கட்டித்தருவது ஓலைப் பெட்டியில்தான். வட்டாரவழக்கில் ஓலைக் கொட்டான் என்றழைக்கப்படும் இந்த பெட்டிகளை முன்பு மக்கள் அதிகளவில் பயன்படுத்தியதால், இவற்றின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் பனைஓலை பொருட்கள் தொழில் மிகவும்நன்றாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் இந்த தொழில் நலிவடைந்துவிட்டது. ஆனால்,தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தில் இன்னமும் இந்த தொழில் நடைபெற்றுவருகிறது.


இந்த கிராமத்தில் 30 ஆண்டுகளுக்குமுன்பு பனை ஓலையினால் செய்யப்படும் பொருட்களின் உற்பத்தியானது மிகவும் சிறந்து விளங்கியது. குறிப்பாக மிட்டாய் வைக்க பயன்படுத்தும் பனை ஓலைப்பெட்டிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. ஏனென்றால் இப்பகுதியானது பனைமரங்கள் நிறைந்த பகுதியாகும். ஆகவேபனை ஓலையினால் செய்யக்கூடிய பொருட்களான முறம், கல்யாணசீர்வரிசைப் பெட்டி, வீட்டை சுற்றிஅமைக்கப்படும் பனைமட்டை வேலி, இனிப்பு வகைகளை வைக்க பயன்படும் ஓலைப்பெட்டி போன்றவை இங்கு தயாரிக்கப்பட்டு வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.


ADVERTISEMENT


பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதற்கேற்றார்போல் ஓலைப்பெட்டியில் வைக்கப்படும் உணவுப் பொருளும் பனைஓலைப்பெட்டியால் தனி மணத்தை பெறும். இதனாலேயே, தினமும் ராஜபாளையம், சாத்தூர், திருச்செந்தூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளின் மேல்பகுதியில் பனைஓலைப் பெட்டிகள் ஏற்றி அனுப்பிவைக்கப்படும். சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின்போது நாகலாபுரத்தில் இருந்து சுமார் 80,000முதல் ஒரு லட்சம் வரை பெட்டிகள் அனுப்பப்பட்டு வந்தது.

திருவிழாக் காலங்களில் உறவினர்கள் நண்பர்களின் இல்லங்களுக்கு செல்பவர்கள் ஓலைப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள பண்டங்களை விரும்பி வாங்கிச் செல்வார்கள் என்பதால் அனைத்து இனிப்பு வகைளிலுமே பனை ஓலைப்பெட்டிகளில் வைத்தே பண்டங்களை வைத்திருப்பார்கள். நாளடைவில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைப்பெட்டிகளின் வருகையை தொடர்ந்து ஓலைப் பெட்டிகளின் பயன்பாடானது குறையத் தொடங்கியது. இதனால் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டுவந்த இத்தொழிலில், தற்பொழுது ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபடக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.


இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் தனிக்கோடி என்பவர் நம்மிடம், "முன்னே எங்க தெருவுல எல்லாருமே இந்த தொழில் செய்தோம், எங்க வீட்டுக்காரக இறந்த பிறகு நான் இந்த தொழில்செய்து வருகிறோம். மற்ற குடும்பங்கள் இந்த தொழிலை கைவிட்டுட்டாக, அவங்க பெயிண்ட் வேலை, சித்தாள் வேலைன்னு, கிடைச்ச வேலைக்கு போய்கிட்டு இருக்கிறாங்க. முன்னமாதிரி பனை ஓலையும் இப்போது கிடைக்கிறது கிடையாது. நாங்க இந்தத்தொழில் செய்தாலும், எங்களுக்கு பனைஏறத் தெரியாது. பக்கத்தில இருக்கிற ஆற்றாங்கரையில் இருந்து பனை ஓலை, பனை மட்டை வாங்கி வருவோம். அங்கேயும் இப்ப யாரும் பனைத்தொழில் செய்றது கிடையாது. கூடுதல் முதல் போட்டு வந்து வாங்கி வந்து ஓலைக் கொட்டான் செய்தாலும், ஜோடி 8ரூபாய்க்கு வித்தாத்தான் எங்களுக்கு கட்டுபடியாகும். அந்த அளவுக்கு இருக்குது விலைவாசி" என்றார்.

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த எளிதாக இருக்கும். ஆனால் அதில் சூடான தின்பண்டங்களை பார்சல் செய்யும்பொழுது வேதிப்பொருட்கள் கலப்பதால் நச்சுத்தன்மை ஏற்பட்டு உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது. அதேபோல், சுற்றுச் சூழலுக்கும் கேடுவிளைவிக்கும் என்பதால், தமிழக அரசே 01-01-2019 முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது. ஆனால் பனை ஓலைப்பெட்டிகளில் வைக்கப்படும் திண்பண்டங்கள் பத்துநாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. உணவுப்பொருளுக்கு புதிய மணமும்,உடலுக்கு ஆரோக்கியமும் தரக்கூடியது.ஆகவே உடல் நலத்திற்கு தீங்குவிளைவிக்காத பனைஓலைப்பெட்டிகளை பயன்படுத்துவதன்மூலம், உடல் நலத்தை காக்கலாம்.



எனவே, இதுபோன்ற குடிசைத் தொழில் ஈடுபடுபவர்களுக்கு அரசு ஊக்குவிக்கவேண்டும். குறிப்பாக அரசே இந்தபெட்டிகளை கொள்முதல் செய்யலாம்.குறிப்பாக மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு இந்த பெட்டிகளை தயாரிக்க கற்றுக் கொடுத்து, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற ஊக்கம் அளிக்கலாம். பனை ஓலைப் பெட்டிகளை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்த அரசு உதவி செய்யலாம்.

இனிமேல், பிளாஸ்டிக் பை பயன்படுத்தக்கூடாது என்று அரசாங்கமே சொல்லிவிட்டதால், தனியார் வர்த்தக நிறுவனங்களும் இது போன்ற ஓலைப்பெட்டிகளை கொள்முதல் செய்து, அதற்கான விலையை பொருட்களின் விலையில் சேர்த்துக் கொள்ளலாம். அதன் மூலம் இந்த தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் வளம்பெறலாம். சுற்றுச் சூழல் பாதிப்பிலிருந்து மண்ணும் நலம் பெறலாம்..!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT