/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01-FAKE-ART.jpg)
தமிழ்நாடு அரசு முத்திரை மற்றும் தலைமைச்செயலாளர், ஐஏஎஸ் அதிகாரிகளின் கையெழுத்துகள் போலியாகப்பயன்படுத்தி கிராமங்களில் படித்த இளைஞர்கள், இளம் பெண்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட மக்களுடன் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் புகார் கொடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் அனகாபுதூர், திம்மசமுத்திரம் திவ்யா நகரைச் சேர்ந்த ஆரோன் மகன் பிரான்சிஸ் ஜெரால்டு என்கிற சசிகுமார்(வயது 35) என்ற நபர்தான் தமிழ்நாடு முழுவதும் இப்படி போலி பணி ஆணைகளை வழங்கி பண வசூல் வேட்டை நடத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருவரங்குளம், கறம்பக்குடி ஆகிய பகுதிகளில் படித்த வேலைக்காக காத்திருக்கும் வறுமையில் வாடும் குடும்ப இளைஞர்கள், இளம் பெண்களிடம் எனக்கு தலைமைச் செயலாளரை தெரியும் பணம் கொடுத்தால் வேலை ஆர்டர் வாங்கித் தருவதாகக் கூறி சில காகிதங்களைக் காட்டி அவர்களை நம்ப வைத்து பணம் வாங்கிக் கொண்டு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், அமுதா ஐஏஎஸ், உமா மகேஸ்வரி ஐஏஎஸ், மகிழ்மதி ஐஏஎஸ், ஜெயந்தி ஐஏஎஸ், அகிலாண்டேஸ்வரி ஐஏஎஸ் எனப் பலரது கையெழுத்துகளுடன் தமிழ்நாடு அரசு முத்திரையைப் பயன்படுத்தி போலி பணி ஆணைகளை வழங்கியுள்ளார். இந்த ஆணை போலி என்பது தெரிய வந்ததும் சசிகுமாரிடம் கேட்டபோது பாதிக்கப்பட்டவர்கள் மீதே காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்களுக்காக மாவட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் பேசுகையில், "பிரான்சிஸ் ஜெரால்டு என்கிற சசிகுமார் வறுமையில் வாடும் குடும்பங்களை குறிவைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் ஒரு கோடி வரை பணம் வசூல் செய்து கொண்டு தமிழ்நாடு அரசு முத்திரையுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் கையெழுத்துகளையும் பதிவு செய்து அரசு வேலை கிடைத்திருப்பதாக போலி பணி ஆணையை வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்காக 5 ஆம்தேதி ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை தாமதமாகிறது. போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக தெரிகிறது. புகார்தாரர்களை மிரட்டும் தொனியில் போலீசார் பேசி வருகின்றனர். இத்தனை போலி உத்தரவுகளை வழங்கிய நபர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் மெத்தனமாக செயல்படுவதால் மோசடியில் ஈடுபட்ட நபரே புகார் கொடுத்துள்ளார்" என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)