ADVERTISEMENT

தரமற்ற தளவாடங்கள், பொறுப்பற்ற ஊழியர்கள்... 6 பேரை பலி கொண்ட என்.எல்.சி.!

10:47 AM Jul 03, 2020 | rajavel

ADVERTISEMENT

நெய்வேலி நிலக்கரி சுரங்கம் துவக்கப்பட்டு சுமார் 60 ஆண்டுகள் கடக்கின்ற நிலையில் இது போன்று விபத்து இது வரை நிகழ்ந்தது இல்லை என்கிறார்கள் என்.எல்.சி.-யில் பணிபுரிந்தவர்கள். 2019-இல் முதல் விபத்து, அதில் ஒருவர் உயிரிழந்தார். கடந்த மே மாதம் இதே போன்று பாய்லர் வெடித்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தற்போதைய விபத்தில் 6 பேர் உயிரிழிந்தனர். 11 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இதில் உயிரிழந்த அனைவருமே ஒப்பந்தத் தொழிலாளர்கள்.

ADVERTISEMENT

தற்போது உயிரிழந்தவர்கள் கல்லுமேடு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசபெருமாள், காப்பான்குளத்தைச் சேர்ந்த சிலம்பரசன், மேலகுப்பம் பத்மநாபன், கொள்ளிருப்பு அருண்குமார், நெய்வேலி டவுன்ஷிப் நாகராஜ், ஆத்திகுப்பம் ராமநாதன், இப்படி விலைமதிப்பற்ற மனிதஉயிர்களை என்.எல்.சி. நிர்வாகம் பலி கொடுத்து வருகிறது.

இப்படித் தொடர்ந்து 2ஆவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடிப்பதும் தொழிலாளர்கள் இறப்பதும் தொடர் சம்பவமாக நடைபெறுவதற்க்குக் காரணம் என்ன? அங்கு பணிசெய்யும் தொழிலாளர்கள் தொழிற்ச்சங்க பிரமுகர்கள் ஆகியோரிடம் கேட்டபோது, என்.எல்.சி. நிர்வாகம் லாபத்தைக் காட்டுவதற்க்காக தரமற்ற தளவாடங்களை வாங்குவது அதைத் தரமற்ற கம்பெனிகளைக் கொண்டு நிர்மாணிப்பதும் பராமரிப்பதும் மிக முக்கியக் காரணம். மேலும் ஏற்கனவே 27ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்களும் 13ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணி செய்தனர்.

ஆனால் தற்போது ஒப்பந்தத் தொழிலாளர்கள் 10ஆயிரம் பேரும் நிரந்தரத் தொழிலாளர்கள் 10,000 பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள். ஆள் குறைப்பு செய்துவிட்டு பெரும்பாலான பணிகள் தனியார் நிர்வாகத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படிக் கொடுக்கப்பட்டதன் விளைவே பாய்லர் வெடிப்பில் தொழிலாளர்கள் உயிரிழப்பது.


முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒருமுறை 40 நாட்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெறும். அதை 20 நாட்களாகக் குறைத்துள்ளனர். என்.எல்.சி. அனல்மின் நிலையத்திலுள்ள அனைத்து விதமான இயந்திரங்களும் நவீன முறையில் வாங்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். அப்படிப்பட்ட இயந்திரங்களை இயக்குவதற்குத் தற்போது நவீன முறைகள் உள்ளன.

உதாரணத்திற்க்கு பாய்லர்கள் அதிக அளவில் சூடேரி அதன் ஆவி வெளியேற்றுவதற்கு ஒருவித ஒலி எழுப்பும். அப்போது அதிகப்படியாக உருவாகும் வாயுவை (Gas) வெளியேற்றுவதற்கு உரிய வழியைத் திறந்துவிட்டால் பாய்லர் வெடிக்காது. அதை இயக்குபவர்கள் பெரும்பாலானோர் வடமாநிலங்களில் பொறியியல் படித்து இங்கே இறக்குமதி செய்யப்பட்டவர்கள். அப்படிப்பட்ட இளைஞர்கள் பொறுப்பாக வேலை செய்யாமல் 'ஆன்ட்ராய்டு' செல்போன்களை வைத்துக்கொண்டு 'டிக்டாக்', 'வாட்சப்', இவைகளிலேயே மூழ்கிவிடுகிறார்கள். பொறுப்பான ஊழியர்கள் இல்லாததால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன.

மேலும் என்.எல்.சி. நிர்வாகத்தில் விபத்து ஏற்படும் போது கீழ்நிலையில் உள்ள ஊழியர்களுக்கு மேமோ கொடுப்பது சஸ்பென்ட் செய்வது வழக்கம். ஆனால் இதற்குப் பொறுப்பான அதிகாரிகளாக உள்ளவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அப்படிப்பட்ட அதிகாரிகள் மீது தற்போதைய சம்பவத்தின் காரணமாக காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்கிறார்கள் தொழிலாளர்கள்.

தற்போது மூன்று முறை பாய்லர் வெடித்துள்ளது. இதற்குத் தளவாடங்கள் வழங்கிய கம்பெனி இதை நிர்மாணம் செய்த ஒப்பந்தக்காரர்களும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். தேர்ந்த வல்லுனர்களைக் கொண்டு டெக்கினிக்கல் சம்பந்தமான இயந்திரங்களை நிர்வகிக்க வேண்டும். அதை என்.எல்.சி. நிர்வாகமே பராமரிக்க வேண்டும். இது போன்ற முக்கியப் பணிகளை காண்டாரக்ட் முறையில் எந்தக் கம்பெனிக்கும் ஒப்படைக்கக் கூடாது. தமிழகத்தில் படித்த திறமையான பொறியாலர்கள், இயந்திர வல்லுனர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் வடவமாநிலங்களிலிருந்து திறமையற்ற தொழிலாளர்களை இங்கு இறக்குமதி செய்து நமது தமிழக ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலிகொடுக்கப்படுகிறார்கள். இது போன்ற சம்பவங்களுக்கு மிக முக்கியக் காரணம் நிர்வாகக் கோளாறு தான் என்று கூறுகிறார்கள் தொழிலாளர்கள். இறந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வாரிசுகளுக்கு வேலை என்று நிர்வாகம் கொடுத்தாலும் கூட வரும் காலங்களில் இதுபோன்று உயிரிழப்பு ஏற்படக் கூடாது என்கின்றனர்.

ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் உக்கிரவேல் நம்மிடம், என்.எல்.சி. நிர்வாகத்திற்க்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு ,வாரிசுகளுக்கு வேலை கொடுப்பதில் நிர்வாகம் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அதேநேரத்தில் செலவு குறைப்பு என்ற பெயரில் தரமற்ற தளவாடங்களையும் திறமையற்ற வடமாநில மனிதர்களையும் இறக்குமதி செய்து என்.எல்.சி. நிர்வாகம் மொத்தமாகச் சீரழிக்கப்பட்டு வருகிறது. இதில் பாதிக்கப்படும் அனைவரும் எங்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் தான். எனவே வடமாநில தொழிலாளர்கள் அனைவரையும் இங்கிருந்து வெளியேற்ற வேண்டும். மண்ணின் மைந்தர்களான நம் பகுதியைச் சேர்ந்த படித்த திறமையானவர்களுக்கு வேலை வழங்கவேண்டும். இதற்காகப் பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திவருகிறோம் இனியும் நடத்துவோம் என்று கூறுகிறார்.

தொழிலாளர்கள் அனைவரும் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். என்.எல்.சி. நிர்வாகத்தினை புனரமைப்புச் செய்ய வேண்டும். அந்த அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் திறமையற்றவர்கள் உள்ளே புகுந்து சொகுசு வாழ்க்கை வாழுகிறார்கள். தொழிலாளர்களின் கஷ்டங்களைப் புரிந்துகொள்ளாத அதிகாரிகள் நிறைய பேர் உள்ளனர். அவர்களைக் களையெடுக்க வேண்டும் என்கிறார்கள் தொழிலாளர்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT